சென்னை: சென்னையில் உள்ள அரசு சேவை இல்லத்தில் இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை தாம்பரம் அருகே தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை சார்பில், அரசு சேவை இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் தங்கி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில், கடந்த 4 நாட்களுக்கு முன் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியும் இந்த விடுதியில் சேர்ந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று (ஜூன் 8) ஞாயிற்றுக்கிழமை என்பதால், சிறுமி தூங்கிக் கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிறுமியின் முகத்தில் துணியால் மூடி தூக்கிச் சென்றுள்ளார். பின்னர், அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சி செய்துள்ளார். அப்போது, தப்பியோட முயன்ற சிறுமியை அவர் தாக்கியுள்ளார்.

அதனால், காயமடைந்த சிறுமி கூச்சலிட்டு கத்தியுள்ளார். அதைக்கேட்டு பதற்றமடைந்த அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். சத்தம் கேட்டு வந்த சக மாணவிகள், சிறுமியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது, சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததால், மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், அந்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். மேலும், அரசு சேவை இல்லத்தின் சுற்றுச்சுவர் அதிக உயரம் என்பதால், வெளியாட்கள் யாரும் உள்ளே எகிறி குதித்து வர வாய்ப்பில்லை. அதேபோல், முகப்பு பகுதியில் காவலாளி போடப்பட்டிருப்பதால் கேட் வழியாகவும் வெளி ஆட்கள் உள்ளே செல்ல வாய்ப்பில்லை எனத் தெரியவந்தது.
அதனால், அங்கு பணிபுரிந்த காவலாளியை சந்தேகத்தின் அடிப்படையில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். முதலில் எதுவுமே தெரியாதது போல் நடித்த காவலாளி, போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளார். அப்போது, அவர் தான் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்பது நிரூபணமானது. அதையடுத்து, சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் காவலாளியிடம் விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்.. 27 வயதில் கால்களை இழந்த பரிதாபம்! |
முதற்கட்ட விசாரணையில், சிட்லப்பாக்கம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் மேத்யூ (50). இவரது தாயார் அதே அரசு சேவை இல்லத்தில் உதவியாளராகப் பணி புரிந்துள்ளார். அவர் பணியில் இருக்கும் போது இறந்ததால், கருணை அடிப்படையில் மேத்யூவிற்கு காவலாளி பணி கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த 7 ஆண்டுகளாக அவர் காவலாளியாக பணி புரிந்து வந்தது தெரிய வந்தது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி நான்கு நாட்களுக்கும் முன்பு தான் வந்தார் என்பதால், வெளியே எதையும் சொல்ல மாட்டார் என எண்ணி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, காவலாளி மேத்யூ மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த சேலையூர் அனைத்து மகளிர் போலீசார், அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். மேலும், அவர் இதே போன்று வேறு யாருக்காவது பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா? என்ற கோணத்தில் அங்கு தங்கியுள்ள மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக, முதலமைச்சரின் உத்தரவுபடி அனைத்து சேவை இல்லங்களிலும் பெண் காவலர்களை நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.