சென்னை: அரசு சேவை இல்லத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த, காவலாளி மேத்யூவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அரசு சேவை இல்லம் செயல்பட்டு வருகிறது. அதில் ஒன்று சென்னை தாம்பரம் அடுத்த சானிட்டோரியத்தில் உள்ளது. இந்த அரசு விடுதியில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 8) அந்த விடுதியில் உறங்கிக் கொண்டிருந்த 13 வயது சிறுமியை, முகத்தில் துணியால் மூடி தூக்கிச் சென்ற ஒருவர், பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். அப்போது, தப்பிக்க முயன்ற சிறுமியை அந்த நபர் தாக்கியதில், மாணவிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
அப்போது, வலி தாங்க முடியாமல் சிறுமி கூச்சலிட்டுள்ளார். உடனே, அந்த நபர் தப்பியோடியுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த சக மாணவிகள், சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், விடுதியில் காவலாளியாக பணிபுரிந்து வந்த மேத்யூ (50) என்பவர் தான், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றார் என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, காவலாளி மேத்யூவை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர்.
மேற்கொண்ட விசாரணையில், மேத்யூ நபர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். அதனையடுத்து, அவரை சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, சிறுமி நான்கு நாட்களுக்கு முன்பு தான் விடுதியில் சேர்ந்தார் என்பதால், வெளியே யாரிடமும் கூறமாட்டார் என அத்துமீறியதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "வேலியே பயிரை மேய்ந்த கதை..." அரசு விடுதியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - காவலாளி கைது! |
அரசு கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சேவை இல்லத்தில் 13 வயது சிறுமிக்கு நடந்த இந்த சம்பவம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, இந்த சம்பத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இனி அனைத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் அரசு சேவை இல்லங்களிலும் பெண் காவலாளிகள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உறுதி அளித்தார். தற்போது, பாதிக்கப்பட்ட சிறுமி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
இந்த நிலையில், காவலாளி மேத்யூவை நேற்று (ஜூன் 9) போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்த போலீசார், செங்கல்பட்டு மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி ஜூன் 23ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதையடுத்து, மேத்யூ புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.