திருவள்ளூர்: திருத்தணியைச் சேர்ந்த முதியவரின் உடலை மாற்றி பீகாருக்கு அனுப்பி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பூஜ்ஜிரெட்டிபள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளி ராஜேந்திரன் (69). கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அதற்கென சிகிச்சைகள் எடுத்தும் கூட அவரது வயிற்று வலி தீரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தீராத வயிற்று வலியால் முதியவர் ராஜேந்திரன் நேற்று முன்தினம் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
உயிருக்குப் போராடிய அவரை, உறவினர்கள் திருத்தணி அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி அவர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் உயிரிழந்தார்.

இதையும் படிங்க: யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு - பொறி வைத்து பிடித்த காவல்துறை!
இதனைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தினரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. துணி சுற்றப்பட்ட நிலையில் ஒப்படைக்கப்பட்ட உடலை, குடும்பத்தினர் துணியை அகற்றி விட்டு முகத்தைப் பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர். அந்த உடல் முதியவர் ராஜேந்திரனுடையது அல்ல. அதற்கு பதில் வேறு ஒரு இளைஞரின் உடலை மருத்துவமனை ஊழியர்கள் ராஜேந்திரனின் குடும்பத்தினரிடம் கொடுத்திருக்கின்றனர்.
இதையடுத்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் இது குறித்து கேட்டனர். ஏதோ ஒரு இடத்தில் தவறு நடந்திருக்கிறது. உடல் மாறியிருக்கிறது என்று அவர்கள் கூறியிருக்கின்றனர். அதே நேரத்தில் ராஜேந்திரன் உடலும் பிணவறையில் இல்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அமரர் அறையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜேந்திரன் உடலை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் உறுதி அளித்தது.
அதன்படி நடத்திய விசாரணையில், முதியவர் ராஜேந்திரனின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது விபத்தில் உயிரிழந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரின் சடலம் என தெரிய வந்தது. மேலும், அந்த இளைஞரின் சடலத்திற்குப் பதில் ராஜேந்திரனின் சடலம் பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தொடர்பு கொண்ட போலீசார், எங்கே உள்ளீர்கள் என கேட்டுள்ளனர். அப்போது, ஓட்டுநர் ஹைதராபாத்தை கடந்த சுமார் 800 கிலோ மீட்டர் தூரம் சென்று விட்டதாகக் கூறினார்.
இதனையடுத்து, உடனடியாக உடலுடன் திருத்தணி திரும்ப ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு போலீசார் உத்தரவிட்டனர். தற்போது, முதியவர் ராஜேந்திரனின் உடலுடன் சென்ற அந்த ஆம்புலன்ஸ் மீண்டும் திரும்பி வந்து கொண்டிருக்கிறது. இந்த ஆம்புலன்ஸ் நாளை இரவு 7 மணியளவில் வந்து சேரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்