சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடப்பாண்டிற்கான (2025-26) பட்ஜெட் தாக்கலின் போது தமிழ்நாட்டில் மேலும் ஆறு கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற முயற்சி எடுக்கப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார்.
அதில் திருவான்மியூர், பாலவாக்கம், சென்னையில் உள்ள உத்தண்டி, தூத்துக்குடியில் குலசேகரப்பட்டினம் கடற்கரை, விழுப்புரத்தில் உள்ள கீழ்புதுப்பட்டு கடற்கரை, கடலூர் மாவட்டத்தில் சாமியார் பேட்டை கடற்கரை ஆகிய கடற்கரைகளுக்கு 24 கோடி செலவில் நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான கட்டமைப்புகளை உருவாக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக மெரினா கடற்கரையில் நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.5.62 கோடி செலவில் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டிருக்கிறது. அதற்கான பணிகளும் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் ஏற்கனவே கோவளம் கடற்கரை நீலக்கொடி சான்றிதழ் பெற்றிருக்கும் நிலையில், சென்னை மெரினா கடற்கரையுடன் மேலும் ஆறு கடற்கரைகள் நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
உலகளவில் இதுவரை 4,154 கடற்கரைகள் நீலக்கொடி சான்றிதழ் பெற்றுள்ளன. இந்தியாவில் இது முதன்முறை அல்ல. இதற்கு முன் ஒடிசாவில் உள்ள கோல்டன் கடற்கரை, குஜராத்தில் உள்ள சிவராஜ்பூர் கடற்கரை, கேரளாவில் உள்ள காப்பாடு கடற்கரை, டையுவில் உள்ள கோக்லா கடற்கரை ஆகியவை இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இருமொழி கொள்கைதான் இருக்கும் - முதலமைச்சர் உறுதி!
மேலும், அந்தமானில் உள்ள ராதா நகர் கடற்கரை, கர்நாடகாவில் உள்ள காசர் கோடு, படுபித்ரி கடற்கரை, ஆந்திராவில் உள்ள ருசி கொண்டா கடற்கரை, புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரை மற்றும் கோவளம் உட்பட 10 கடற்கரைகள் நீலக்கொடிச் சான்றிதழை பெற்றுள்ளன.
நீலக்கொடி சான்றிதழ் பெற தகுதிகள்:
சுற்றுச்சூழல் மேலாண்மை, சுத்தமான மணல், சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள், குளிக்க தகுந்த சுகாதாரமான நீர், பாதுகாப்பு உள்ளிட்ட 33 அம்சங்களை மையமாக வைத்து நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழ் பெறப்பட்டிருக்கும் கடற்கரை பாதுகாப்பான சுகாதாரமான கடற்கரை என்ற அர்த்தத்தை கொண்டிருப்பதாகவும் இருக்க வேண்டும்.
எவ்வாறு வழங்கப்படும்?
சுற்றுச்சூழலை பேணிக்காக்கும் வகையில் அழகிய கடற்கரையாக இருக்கும் கடற்கரையை ஆய்வு செய்து டென்மார்க்கைச் சேர்ந்த சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை நிறுவனம் சார்பில் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்த நீலக்கொடி அங்கீகாரம் பெறும் கடற்கரைக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள் என்பதால், பெரும்பான்மையான நாடுகள் நீலக்கொடி சான்றிதழை பெற முயற்சி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.