திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கவரயப்பட்டி கிராமத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் தமிழ் அந்தக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று கலந்து கொண்டார்.
இதன் பிறகு ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, "தமிழக மக்கள் எதிர்பார்த்த கூட்டணி. திமுக அரசை அகற்ற வேண்டும். அதற்கு உறுதியான கூட்டணி தேவை என்ற நிலையில் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் விதமாக, 'மத்தியில் பாஜக', 'மாநிலத்தில் அதிமுக' என்கிற கூட்டணி அறிவிப்பு தமிழக வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது. வாக்குறுதியை நிறைவேற்றாத அரசு இந்த திமுக அரசு. மக்களை ஏமாற்றும் அரசாக திமுக உள்ளது. மாற்றம் உறுதி என்று மக்கள் தீர்மானித்து இருக்கிறார்கள். அதற்கு அதிமுக- பாஜக கூட்டணி நம்பிக்கைக்குரிய கூட்டணியாக முதல் கூட்டணியாக வரும் நாட்களில் வலம் வரும்.
மக்கள் வரிப்பணத்தை டாஸ்மாக் மூலம் தவறாக கையாண்டு டாஸ்மாக் ஊழல் நடந்து வெட்ட வெளிச்சமாக விசாரணை நடந்து வருகிறது.
அமைச்சர் பொன்முடி பொறுப்பற்ற முறையில் பேசுவதும் அதை ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்ப்பதும் வெட்கக்கேடு. ஆபாச வார்த்தைகள் காதில் கேட்க முடியாத வார்த்தைகள். கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு அமைச்சராக நீடிப்பார் என்றால் இதுதான் அரசின் மாடலா? என்று கேட்க விரும்புகிறோம். உடனடியாக அமைச்சர் பொறுப்பில் இருந்து பொன்முடியை நீக்க வேண்டும்.
த.மா.க வெற்றி கூட்டணியில் இருக்கிறோம். வருகிற சட்டமன்றத்தேர்தலில் தமாகா அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெற்று அதிமுக தலைமையில் சிறப்பாக ஆட்சி அமையும். வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம். தொய்வுள்ள இடத்தில் அடையாளம் கண்டு அந்த இடங்களில் வலுப்படுத்தி கூட்டணிக்கு முக்கிய கட்சியாக செயல்பட உறுதிகொண்டு இன்னும் 6 மாதங்கள் செயல்பட இருக்கிறோம். ஒத்த கருத்துடன் இந்த கூட்டணி தேர்தலை சந்திக்கும்.'' என்று ஜி.கே.வாசன் கூறினார்.
இதையும் படிங்க: ''பாமக ரூல்ஸ்படி நானே தலைவர்" - அன்புமணி ராமதாஸ் அதிரடி அறிவிப்பு; கட்சி வட்டாரத்தில் உச்சக்கட்ட பரபரப்பு!
அப்போது ஜி.கே.வாசனிடம், ''எத்தனை சீட் கூட்டணியில் கேட்க இருக்கிறீர்கள்?" என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். உடனே அவருக்கு அருகில் அமர்ந்து இருந்த முன்னாள் எம்.பி சித்தன் 10 விரல்களை காண்பித்தார். உடனே ஜி.கே வாசன் குறுக்கிட்டு சித்தனிடம், ''அவங்க 100 என போட்டுவிடுவார்கள்'' என்று கூறியது செய்தியாளர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்