சென்னை : தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்தபோது உரிய ஆவணங்கள் இன்றி தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதை கொண்டு சென்றதாக மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிட்ட நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் எனவும், தேர்தல் செலவுக்காக எடுத்து செல்வதாக வாக்குமூலம் அளித்தனர்.
அதன் அடிப்படையில் வழக்கு சிபிசிஐடி அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் இந்த பணம் யாருக்கு சொந்தமானது என நயினார் நாகேந்திரன், எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்ட பாஜகவின் முக்கிய நிர்வாகிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் இதுவரை 15 நபர்களிடம் தனித்தனியாக விசாரணை செய்து வாக்கு மூலங்களை வீடியோ பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கு குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் தாம்பரம் ரயில்வே கேண்டின் உரிமையாளர் முஸ்தபா என்பவர் போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தன்னுடையது தான் என்று உரிமை கோரி சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினார்.
இதையும் படிங்க: "தமிழ்நாட்டிலும் பாஜக நிச்சயம் வளர்ந்து நிற்கும்" - நயினார் நாகேந்திரன் நம்பிக்கை! - nainar nagenthiran about mahavishnu
இதையடுத்து முஸ்தபாவிடம் சுமார் பத்து மணி நேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் இந்த பணம் எப்படி கிடைத்தது? இதை யாரிடம் கொடுக்க சொல்லி அனுப்பினீர்கள்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சிபிசிஐடி விசாரணையில் கைப்பற்றப்பட்ட பணம் முஸ்தபா என்பவரின் பணம் இல்லை என்பது தெரியவந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. முஸ்தபாவின் செல்போனை வைத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திய போது யாரோ ஒருவர் கூறியதால் தான் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தன்னுடையது என உரிமை கோரியது தெரிய வந்துள்ளது.
மேலும், முஸ்தபாவின் வங்கி கணக்குகளை போலீசார் ஆய்வு செய்தபோதும் அது அவருடைய பணம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் முஸ்தபாவிடம் உரிமை கோர சொல்லி கூறிய நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.