வேலூர்: வி.ஐ.டி பல்கலைக்கழகம் (Vellore Institute of Technology), பாவேந்தர் பாரதிதாசன் தமிழ் இலக்கிய மன்றம் ஆகியவை இணைந்து தமிழ்நாடு அரசின் அவ்வையார் விருது பெற்ற முன்னாள் துணை வேந்தர் யசோதா சண்முகசுந்தரத்திற்கு பாராட்டு விழா நடத்தியது. இதில், முன்னாள் மத்திய மந்திரி என்.டி.சண்முகம், புலவர் பதுமனார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "பேராசிரியர்கள் யசோதா, சண்முகசுந்தரம் ஆகிய இருவரும் துணை வேந்தர்களாக இருந்தனர். இந்தியாவில் கணவன், மனைவி இருவரும் துணை வேந்தர்கள் என்பது இவர்களை தவிர வேறு யாரும் கிடையாது. இந்தியாவிலேயே துணை வேந்தர், பதிவாளர் இருவரும் பெண்களாக இருப்பது வி.ஐ.டி.,யில் தான். பெண்களின் கல்வி மேம்பாட்டிற்கு பாடுபட்ட யசோதா சண்முகசுந்தரத்திற்கு அவ்வையார் விருது வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி.
பெண்களுக்கு சமமான வாய்ப்பு:
பெண் கல்வியின் உயர்வுக்கு என்னென்ன செய்ய முடியுமோ? அதை செய்ய வேண்டும். வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் தொடக்கத்தில் மாணவிகளின் சேர்க்கை 20 சதவீதமாக இருந்தது. இப்போது 30 சதவீதத்தை கடந்துள்ளது. விருதுகள் வாங்குவதில் மாணவிகள் 3-ல் 2 பங்கு உள்ளனர். ஒரு நாடாக பார்க்கும் போது உயர்கல்வி, பெண் கல்வியில் நாம் பின் தங்கி உள்ளோம். பெண்களுக்கு உரிய இடத்தை அளிப்பதில் நாம் மிகவும் பின்தங்கி உள்ளோம். அதில், இந்தியா 129-வது இடத்தில் உள்ளது. பெண்களுக்கு சமமான வாய்ப்பு அளிக்க வேண்டும்.
பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, விரும்பியவர்களை திருமணம் செய்து கொள்ளும் உரிமை வேண்டும் என 1930ல் தந்தை பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார். அவை இன்றும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
நாடாளுமன்றத்தில், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் வழங்க வேண்டும் என பிரதமர் தேவகவுடா காலத்தில் மசோதா கொண்டுவரப்பட்டது. அது 25 ஆண்டு கழித்து தான் சட்டமானது.
நாடாளுமன்றத்தில் 14 சதவீதமும், சட்டமன்றத்தில் 8 சதவீதமும் தான் பெண்கள் உள்ளனர். பெண்களுக்கு கல்வியும், சமவாய்ப்பும் அளிக்க வேண்டும். அதற்காகத்தானே இந்த விழா நடக்கிறது. உயர்கல்வியில் தமிழ்நாடு தான் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவின் சராசரி 28 சதவீதமாக உள்ளது. இன்னும் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் உயர்கல்வி படிக்க அரசு சார்பில் ரூ.1000 வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது. ஆனால் இது போதாது. 50 நாடுகளில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 60 ஆண்டுகளுக்கு முன்பு கோத்தாரி கமிஷன், நாட்டின் மொத்த வருவாயில் 6 சதவீதம் கல்விக்கு செலவழிக்க வேண்டும் என கூறி உள்ளார். நாம் இன்னும் 3 சதவீதத்தில் தான் உள்ளோம்.
பெண்களுக்கு இலவச கல்வி:
மத்திய, மாநில அரசுகள் கல்விக்கு அதிகமாக செலவழிக்க வேண்டும். கல்வியில் வளராமல் பொருளாதரத்தில் வளர முடியாது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக உள்ளது. அமெரிக்காவை பொருளாதார ஏற்றத்தாழ்வில் நாம் தோற்கடித்து விட்டோம். பெண்கள் எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும். கல்விக்கு மாநிலத்தில் முதலிடம் அளிக்க வேண்டும். ஏழை, நடுத்தர மாணவிகளுக்கு உயர் கல்வியை மாநில அரசு இலவசமாக அளிக்க வேண்டும்," எனக் கோரிக்கை வைத்தார்.
அதைத்தொடர்ந்து, அவ்வையார் விருது பெற்ற பேராசிரியை யசோதா சண்முகசுந்தரம் பேசுகையில், "எனது பள்ளிக்காலத்தில் பெண்கள் கல்வி பயில்வது மிகவும் சிரமமாக இருந்தது. எனினும், எனது பெற்றோர் அளித்த ஊக்குவிப்பால் என்னால் எண்ணியதை படிக்க முடிந்தது. சுதந்திரத்துக்கு முன்பு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி மேன்மையாக இருந்தாலும், தமிழ் வழிக்கல்வியில் தூய தமிழில்தான் வகுப்புகள் எடுக்கப்பட்டன.
தடுப்பூசி அவசியம்:
தற்போது, பெண்களிடையே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. இதனை முன்கூட்டியே ஹெச்பிவி தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியமாகும். இதற்காக நடப்பு நிதியாண்டு தமிழக நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த தடுப்பூசியை 14 முதல் 15 வயது மாணவிகள் போட்டுக் கொள்ளலாம். எந்தவொரு பக்க விளைவும் ஏற்படாது. இந்த தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் 9 வகையான புற்றுநோயில் இருந்து பாதுகாப்பு பெற முடியும்.
மேலும், வளர்ந்த நாடுகளின் பல்கலைக்கழகங்களில் இந்த வகை தடுப்பூசி போட்ட மாணவிகளுக்குத்தான் சேர்க்கை வழங்கப்படுகிறது. எனவே, வேலூர் மாவட்டத்தில் உள்ள மாணவிகளுக்கு இந்த வகை தடுப்பூசி செலுத்த வி.ஐ.டி முன்முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்," எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.