சென்னை திமுக முன்னாள் எம்பியின் உதவியாளர் காரில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அயனாவரம் வசந்த கார்டன் பகுதியைச் சேர்ந்த குமார் (71) என்பவர், சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மேலும் அனைத்து மாநகராட்சி ஊழியர்கள் பொது சங்க நிர்வாகியாகவும் இருந்து வந்தார். திமுக முன்னாள் எம்பி குப்புசாமியின் உதவியாளராகவும் இவர் இருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாம்பரத்தில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றபோது குமார் காணாமல் போனதாகவும் அவர் செல்ஃபோன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது உறவினர்கள் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
செல்ஃபோன் எண் மூலம் விசாரணை: புகாரின் அடிப்படையில் தாம்பரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். காணாமல் போன குமார் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. குமாரின் செல்ஃபோன் எண்ணின் மூலம் தொடர்புடைய செல்ஃபோன் சேவை வழங்கும் நிறுவனத்தின் உதவியுடன் அவர் காணாமல் போன தினத்தில் கடைசியாக யாரிடம் எல்லாம் பேசினார் என்பது குறித்து போலீசார் தகவல்களை திரட்டினர்.
நிறுவனம் அளித்த தகவலின்படி ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரிடம் குமார் கடைசியாக பேசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரவியை தாம்பரம் போலீசார் கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் போலீசாரிடம் அளித்த தகவலில், "சென்னை கானத்தூர் அடுத்த உத்தண்டி பகுதியில் குமாரின் உறவினரின் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை குமார் நிர்வகித்து வந்தார். அதனை அபகரிக்க முயற்சி செய்தபோது குமார் எங்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஏமாற்றி அழைத்து சென்று கொலை: இதனால் குமார் மீது மிகுந்த ஆத்திரம் ஏற்பட்டது. நிலத்தை அபகரிக்க குமார் இடைஞ்சலாக இருந்ததால் நானும் எங்களது கூட்டாளிகளும் நிலம் விவகாரம் தொடர்பாக பேச வேண்டும் என குமாரை அழைத்தோம். கடந்த 16 ஆம் தேதி ஆட்டோவில் சென்ற குமாரை நானும் கூட்டாளிகளும், தையூர் வரை சென்று ஒரு நிலம் பார்க்க வேண்டும் என காரில் அழைத்துச் சென்றோம்.
அப்போது உத்தண்டியில் உள்ள இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தின் ஆவணங்களை கேட்டு அவரிடம் தகராறு செய்தோம். அவர் தர மறுத்ததால் கழுத்தை நெறித்து கொலை செய்து எனது ஊரான விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தொண்டூர் மேலவளக்கூர் அருகிலுள்ள கன்னி மாரியம்மன் கோயில் மலைஅடிவாரத்தில் குமாரின் உடலை புதைத்தோம்,"என்று கூறியுள்ளார்.
இதையடுத்து இன்று ரவியை செஞ்சிக்கு அழைத்துச் சென்று புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் கண்டு, செஞ்சி தாசில்தார் முன்னிலையில் குமாரின் உடல் தோண்டி எடுக்கப்பட உள்ளது. மேலும் ரவியின் கூட்டாளிகளான சென்னை கெருக்கம்பாக்கத்தை சேர்ந்த செந்தில்குமார்,விஜய் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.