மதுரை: இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு மதுரை பாண்டிக்கோவில் சாலையில் இன்று (ஜூன் 22) நடைபெற்றது. மாநாட்டில் தமிழ்நாடு மட்டும் இல்லாமல், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அரசியல் தலைவர்கள், ஆதீனங்கள், மடாதிபதிகள் உள்ளிட்ட ஆன்மிகவாதிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் சிறப்பு விருந்தினராக ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கலந்து கொண்டார். மாநாட்டில் தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது, ''இது ஒரு சாதாரணமான கூட்டம் கிடையாது. ஒரு இனம் தன்னுடைய குரலை உயர்த்தி சொல்லி கொண்டிருக்கிறது. தன்னுடைய உரிமையை நிலைநாட்ட வேண்டும் என, விரும்புகிறது. தன்னுடைய வாழ்வியல் முறையை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்று இயங்கிக் கொண்டிருக்கிறது.
எங்கே சனாதன தர்மத்திற்கு பிரச்சனை இருக்கிறதோ, அங்கே நான் இருப்பேன் என்று சொல்லி ஆந்திரா மாநிலத்தில் இருந்து பவன் கல்யாண் வந்திருக்கிறார். உலகத்தில் யூத மக்கள்தொகை .2 விழுக்காடு தான். அவர்களது வாழ்வியல் முறையினை தொந்தரவு செய்ததற்காக வெறும் .2 விழுக்காடு இருக்கக்கூடிய ஒரு இனம் 4 நாடுகளோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த நாட்டை ஆளக்கூடிய தலைவர்கள் இதற்காகத் தான் மக்கள் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். எங்களது வாழ்வியல் முறையை யார் தவறு செய்தாலும், தொந்தரவு செய்தாலும் எதிர்த்து நிற்போம் என, இஸ்ரேல் நாடு நின்று கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஆபரேஷன் சிந்தூர் நடத்தினால் சில மனிதர்களுக்கு பிரச்சனை.
எதற்காக இந்த இனம் ஒன்றாக இருக்கிறது? எதற்கு இந்த குரல் உரக்க கேட்கப்பட வேண்டும்? என நம்முடைய வாழ்வில் முறையை தொந்தரவு செய்து ஏப்ரல் 22 ஆம் தேதி பெஹகல்காமில் இந்து மதமா? என்று கேட்டு 26 மனிதர்களை நெற்றிப்பொட்டில் சுட்டு கொன்று விட்டு இந்த மதம் இருக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள்.
இந்து என்பதற்காக கொல்லப்படுகின்றனர். இந்துக்களிடம் ஒற்றுமை வராது என்ற தைரியத்தில், அரசியல் செய்கின்றனர். நமது கோயில்கள் பாதுகாக்கப்பட வேண்டும். நம்முடைய வாழ்வியல் முறைக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது. நம்முடைய குழந்தைகள் தைரியமாக திருநீறு வைத்துக் கொண்டு பள்ளிக்கு செல்ல வேண்டும்.
தமிழ்நாட்டில் இரண்டு சட்டங்கள் உள்ளன. இந்து மதத்தினருக்கு ஒரு சட்டம். இந்து மதத்தை சாராதவர்களுக்கு ஒரு சட்டம். இந்த 2 சட்டங்கள் எதற்கு இருக்கின்றன? என்று கேட்பதற்காக தான் இந்த மாநாடு. வருகின்ற 2026 தேர்தலுக்கு இந்த மாநாடு சம்பந்தம் இல்லை என்றாலும் நிதி வேண்டாம். சாமி வேண்டும் என்று மக்கள் முடிவு செய்து விட்டனர்.
முருக பக்தராக வந்தவர்கள் போகும் போது வீர பாகுவாக செல்ல வேண்டும். 230 கோடி கிறிஸ்தவர்கள் என சொன்னேன். கடந்த 10 ஆண்டில் கிறிஸ்தவ மக்கள்தொகை உலகளவில், 12 கோடி உயர்ந்து இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை 35 கோடியாக உயர்ந்திருக்கிறது. 2055 முடியும்போது இந்த உலகம் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய உலகமாக மாற இருக்கிறது.
நம்முடைய கலாச்சார சின்னங்களை அழிக்கக் கூடாது. இனி ஒருவர் கூட மதம் மாறக்கூடாது. மதம் மாறியவர்களை திரும்பிக் கொண்டு வர வேண்டும். தமிழகத்தின் அரசியலில் தமிழ் வேறு. ஆன்மிகம் வேறு. இலக்கியங்கள் வேறு என, பிரித்து வைத்திருக்கிறார்கள். ஆனால், அதை பிரிக்க முடியாது. எந்த மொழிக்கும் இல்லாத பெருமை நமக்கு மட்டும் தான் இருக்கிறது.
தமிழும், ஆன்மிகமும், இலக்கியமும் ஒன்றாக இருக்கின்ற ஒரே கலவையாக இந்த வாழ்வியல் முறை உள்ளது. தமிழ் மொழியில் ஆன்மிகமும் அறிவியலும் கலந்து இருக்கிறது. நேற்று திருப்பரங்குன்றத்தில் ஒரு எம்பி, முக்கிய கட்சியின் தலைவர் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு வரும் போது ஒரு அம்மா செல்பி கேட்கிறார். அவரிடம் நெற்றியில் இருக்கக்கூடிய திருநீறை அழித்து விட்டு படம் எடுத்து, அந்த அம்மாவை அனுப்பி வைக்கிறார்.
இதையும் படிங்க: தேவதைகள் கையால் ஒரு ''டீ" குடிக்கணுமா? அப்போ சும்மா கோவைக்கு வாங்க!
இவர்கள் ஓட்டு பிச்சை எடுக்க நம்மிடம் 2026 தேர்தலுக்கு வருவார்கள். அன்றைக்கும் கோயிலுக்கு போவார்கள். சமீபத்தில் திருப்பதி கோயில் சொத்தை கணக்கிடுகிறார்கள். திருப்பதிக்கு சென்னை உள்ளிட்ட 917 இடங்களில் சொத்துக்கள் உள்ளன. திருப்பதிக்கு மட்டும் 2 லட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து ஏழுமலையானுக்கு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் ஒரு பட்ஜெட் 3 லட்சம் கோடி. எனவே ஆன்மிகம் சார்ந்த அரசியல், ஆன்மிகம் சார்ந்த வாழ்வியல் நெறி, ஆன்மிகம் சார்ந்த பொருளாதாரம் வரும்போது முருகன் நிம்மதியாக இருப்பார். முருகன் நிம்மதியாக இருந்தால்தான் நம்மால் நிம்மதியாக இருக்க முடியும். நாம் நிம்மதியாக இருக்கும் போது நம்முடைய கலாச்சாரம் நிம்மதியாக இருக்கும். நம்முடைய அக்கா கனிமொழி சொன்னது போல இனி தமிழ்நாட்டில் மதுரை முருகர் மாநாட்டுக்கு முன்பு.. மதுரை முருகர் மாநாட்டுக்கு பின்பு.. என்று தான் அரசியல் சரித்திரம் இருக்கும்." என்று அண்ணாமலை பேசினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்