கோயம்புத்தூர்: திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே வனப்பகுதிக்குள் தேன் சேகரிப்பதற்காக சென்ற வால்பாறை அருகே அடித்தல்தட்டு பழங்குயினத்தைச் சேர்ந்த 2 பேர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து கேரள வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி பகுதியைச் சுற்றி 50-க்கும் மேற்பட்ட பழங்குடி கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ளவர்கள் வனப்பகுதியில் குடியிருந்து, அங்கு விளையும் பயிர் வகை, தேன், மிளகு, காப்பி, ஏலக்காய், பூண்டு, மஞ்சள் போன்ற பயிர்களை விவசாயம் செய்து, அதனை நகர்ப்புற பகுதியில் விற்பனை செய்து தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.
இதில், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வனப்பகுதியில் அதிகமாக தேனீக்கள் கூடு கட்டும் என்பதால், தேன்களை சேகரிப்பதற்காக வனப் பகுதிக்குள் சென்று தற்காலிக கூடாரம் அமைத்து, அங்கு தங்கியிருந்து தேன்களை சேகரித்து வருவது வழக்கம். அந்த வகையில், கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே வனப்பகுதியில் தேன் சேகரிப்பதற்காக, வால்பாறை அருகே அடித்தல்தட்டு பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண் உட்பட நான்கு பேர் நேற்று (ஏப்ரல் 15) வனப்பகுதிக்குள் சென்றனர்.

அங்கு வாழச்சால் ஆற்றின் நடுவே தற்காலிக கூடாரம் அமைத்து, தங்கியிருந்து தேன் எடுப்பதற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில், இன்று அதிகாலை யானைகள் கூட்டம் அப்பகுதிக்கு வந்துள்ளது. அப்போது அப்பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கூடாரத்தை உடைத்து, கூடாரத்திற்குள் இருந்த அம்பிகா (34) மற்றும் சதீஷ் (30) என்பவரை யானைகள் தாக்கியுள்ளது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மற்ற இருவரும் அப்பகுதியில் இருந்து தப்பி ஓடினர். வன விலங்குகளிடம் இருந்து தப்பிப்பதற்காக இரவில் தீ மூட்டியுள்ளனர். ஆனால், மழை பெய்ததால் தீ அணைந்து அப்பகுதிக்கு யானைகள் வந்துள்ளதாக உடன் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து கேரளா வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கேரள வனத்துறையினர், உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து, கேரள வனத்துறை அமைச்சர் ஏ.கே.சசீந்திரன் அவசரகால நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் சதீசன், “வன உரிமைகள் சட்டத்தின்படி, பழங்கியினர் காட்டில் வசிக்க முடியும். அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் கடமை. ஆனால், அவர்களை பாதுகாக்கும் பணியை கண்டுகொள்ளாமல் அரசு இருக்கிறது” குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
இதேபோல், நேற்று முன் தினம் (ஏப்ரல் 14) அடித்தல்தட்டு பகுதியில் இருந்து தேன் சேகரிப்பதற்காக மலக்கப்பாரா காட்டு பகுதிக்கு 3 பேர் சென்றனர். இதில், ஜெபாஸ்டின் (30) என்பவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். மற்ற இருவர்களும் அங்கிருந்து தப்பியுள்ளனர்.
அந்த சோகம் மறைவதற்குள்ளாக இன்று மீண்டும் தேன் எடுக்கச் சென்ற இருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 48 மணிநேரத்தில் காட்டிற்குள் தேன் எடுக்கச் சென்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பேர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.