சென்னை: இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் போர் பதற்றம் காரணமாக ரத்து செய்யப்பட்ட சண்டிகர், ஹிண்டன் விமான சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்தியாவின் காஷ்மீரில் உள்ள பெஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் அமைப்பு நடத்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலாக, இந்திய ராணுவம் சிந்தூர் திட்டத்தின் கீழ், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதி முகாம்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தியது.
இதில், இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் தொடர்ந்து சண்டை பதற்றம் நிலவி வந்த நிலையில், கடந்த 7 ஆம் தேதி இந்தியாவின் எல்லை பகுதியிலுள்ள விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு. விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
இவற்றில், சென்னையில் இருந்து சண்டிகர், ஹிண்டன் ஆகிய விமான நிலையங்களுக்கு, தினமும் இயக்கப்பட்டு வந்த 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜம்மு, ஸ்ரீநகர் ஆகிய விமான நிலையங்களுக்கு, டெல்லி வழியாக தினசரி இணைப்பு விமானங்களாக இயக்கப்பட்டு வந்த ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்களும் ரத்து செய்யப்பட்டது.
இதையும் படிங்க: ஆளுநர் வழக்கில் குடியரசுத் தலைவர் மூலம் உச்ச நீதிமன்றத்துக்கு சவால் விடுவதா? மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்! |
தற்போது, இந்தியா - பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், எல்லையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் கடந்த திங்கட்கிழமை மாலை திறக்கப்பட்டது. ஆனால், சென்னையில் இருந்து எல்லைப் பகுதிகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் செயல்படாமல். தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வந்தன.
இந்த நிலையில், 8 நாட்களுக்குப் பின்பு இன்று (மே 15) அதிகாலை 5.50 மணிக்கு, சென்னையிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஹிண்டன் நகருக்கு புறப்பட்டு சென்றது. தொடர்ந்து எல்லைப் பகுதியான ஹரியானா மாநிலம் சண்டிகரிலிருந்து, காலை 10.25 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 8 நாட்களுக்கு பின்பு இன்று சென்னை வந்தது. அதே விமானம், காலை 11.10 மணிக்கு மீண்டும் சண்டிகர் புறப்பட்டு சென்றது.
அதேபோல் சென்னையில் இருந்து டெல்லி வழியாக ஜம்மு மற்றும் ஸ்ரீ நகருக்கு செல்லும் விமானங்களும் இன்று காலையில் இருந்து மீண்டும் இயங்கியது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.