-By இரா.மணிகண்டன்
தென்காசி: "நட்பு என்றும் தோல்வி அடைவதில்லை" என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாக, ஜமீன் ஒருவர் தனது நண்பனுக்கு செய்த உதவியால் 8 தலைமுறைகளைக் கடந்து கம்பீரமாக நிற்கும் அரண்மனை வீடு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
உணவு, உடை, இருப்பிடம் என்பது மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியமாகும். அந்த வகையில், ஆதிகாலத்திலிருந்து நவீன காலம் வரை, மனிதர்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக உறைவிடம் விளங்குகிறது. குறிப்பாக, 'கையளவு இடம் என்றாலும், சொந்த வீடாக இருக்க வேண்டும்' என்ற எண்ணத்துடன் இன்றைய தலைமுறையினர் உழைத்து வருகின்றனர். காலகட்டத்திற்கு ஏற்ப ஓட்டு வீடு, மாடி வீடு என மனிதர்கள் தங்களது இருப்பிடத்தை கட்டமைத்துக் கொள்கின்றனர்.
250 ஆண்டுகள் பழமையான வீடு:
என்னதான் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாளிகை போன்ற வீடுகளை கட்டினாலும், அது பல தலைமுறைக்கு நிலைத்து நிற்குமா? என்பது கேள்விக்குறிதான். ஆனால், பழங்காலத்தில் சுண்ணாம்பு, கடுக்காய், முட்டை ஓடுகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி நமது முன்னோர்கள் கட்டிய வீடுகள் இன்றும் நிலைத்து நிற்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
அந்த வகையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சுமார் 250 வருடங்களுக்கு முன்னர் அரண்மனைப்போல் கட்டப்பட்ட வீடு ஒன்று பழைமை மாறாமல் இன்றும் நிலைத்து நிற்கிறது. அதில் 8 தலைமுறைகளாக வசித்து வரும் ஒரு குடும்பத்தினர் காண்போரை வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர். இந்த தகவலை அறிந்த நமது ஈடிவி பாரத் தமிழ் ஊடகக் குழு அந்த அரண்மனை வீட்டுக்கு கிளம்பியது.

பழைமையான அந்த வீடு அமைந்துள்ள மைப்பாறை என்ற ஊரின் பெயருக்கு ஏற்ற வகையில், பாறைகள் ஆங்காங்கே அழகாக காட்சியளித்தன. மயில்கள் அதிகம் இருந்ததால், இந்த ஊருக்கு மயில் பாறை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. காலப்போக்கில் அது மைப்பாறையாக மாறிவிட்டதாக ஊரின் பெயர் காரணத்தை கூறுகின்றனர் கிராம மக்கள்.
ஊருக்குள் நுழைந்தபோது, “அந்த கார வீடா” என மக்கள் வழிகாட்டியதும், குறிப்பிட்ட வீட்டைக் கண்டபோது, அரண்மனை போல பிரம்மாண்டமாகவும், கம்பீரமாகவும் இருந்தது ஆச்சரியமூட்டும் விதமாக இருந்தது.
நட்பின் அடையாளம்:
250 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கடையய்யா என்பவர், இளையரசனேந்தல் ஜமீனுடன் நட்பாக பழகி வந்துள்ளார். அப்போது ஜமீனுக்காக கட்டப்பட்ட அரண்மனையை போன்றே தமக்கும் ஒரு வீடு வேண்டும் என இந்த வீட்டை ஆசை ஆசையாகக் கட்டியுள்ளார். நண்பனின் ஆசையை நிறைவேற்ற ஜமீனும் உதவி செய்தார் எனக் கூறப்படுகிறது.

தற்போது, இந்த வீட்டில் கடையய்யாவின் வாரிசுகள், கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர். இந்த அவசரக் காலத்தில் கூட்டுக்குடும்பம், அதுவும் எட்டு தலைமுறையை கடந்து ஒன்றாக வசித்து வருவது என்பது அதிசயமான விஷயம் தான். ஒரு கிராமமே பெருமையும், பொறாமையும் கொள்ளும் அளவிற்கு கடையய்யாவின் வாரிசுகள் வாழ்ந்து வருகின்றனர்.
கடையய்யாவின் வாரிசுகளைக் காண வீட்டிற்குள் சென்றபோது, ஒரு அரண்மனைக்குள் நுழைவது போன்ற அனுபவத்தை கொடுத்தது. சுட்டெரிக்கும் கோடைக்காலத்தில் கூட அந்த வீடு குளிர்ச்சியாக இருந்ததே ஒருவித பாசிட்டிவ் எனர்ஜியை அளித்தது.
அரண்மனை போன்றே கட்டிய வீடு:
பழைமை வாய்ந்த இந்த வீட்டில் வசித்து வரும் 95 வயதான மூதாட்டி கிருஷ்ணம்மாள் முதலில் சந்தித்தோம். "இந்த வீடு கட்டி 250 வருடங்கள் ஆகிவிட்டன. தற்போது 8-வது தலைமுறையாக வசித்து வருகிறோம். அப்போதைய ஜமீனின் அரண்மனையைப் பார்த்து வியந்த கடையய்யா, அதே மாதிரியான ஒரு வீட்டைக் கட்டினார்," என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.

பகிர்ந்துண்டு வாழும் கூட்டுக்குடும்பம்:
“எட்டு தலைமுறைகளாகவே கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறோம். இங்குள்ள 9 குடும்பமும் பண்டங்களைப் பகிர்ந்து தான் சாப்பிடுவோம். ஜமீனுக்கு எங்களுடைய தாத்தா கடையய்யா நெருங்கிய நண்பர். ஆகையால், ஜமீன் அரண்மனையைப் போன்றே கட்டியுள்ளார்.
மரக்கட்டைகள் அதிகம் இருப்பதே இந்த வீட்டின் விஷேசம். ஊரில் அனைவரும் கார வீட்டுக்காரர்jகள் என்றுதான் அழைப்பார்கள். வெளியூரிலிருந்து யார் வந்தாலும், இந்த வீட்டைப் பார்க்காமல் செல்லமாட்டார்கள். இன்னும் பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும் வகையில், பராமரிப்பு செய்ய வேண்டும் என்பதே எங்கள் ஆசை,” என்கின்றனர் கடையய்யாவின் வாரிசுகளான தனலட்சுமி மற்றும் விஜயலெட்சுமி.
இந்த வீடு தான் எங்கள் அடையாளம்:
கடையய்யாவின் மற்றொரு வாரிசான திருப்பதி கூறும்போது, "மயில் பாறை என்ற எங்களது ஊர் நாளடைவில் மருவி மைப்பாறையாக மாறிவிட்டது. இந்த வீட்டைக் காணும்போது அரண்மனை போன்றே காட்சியளிக்கும். சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னர் இளையரசனேந்தல் ஜமீனுடன் எங்களது தாத்தா கடையய்யா நண்பராக இருந்துள்ளார். ஜமீன் அரண்மனையை கட்டும்போது உடன் இருந்த எங்களது தாத்தா, அதேபோன்று கட்டவேண்டும் என ஆசைப்பட்டு இந்த விட்டைக் கட்டியுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவை அச்சுறுத்தும் பாம்புக் கடி மரணங்கள்.. பரபரப்பு ரிப்போர்ட்.. களத்தில் குதித்த மாணவிகள்! |
நண்பரின் ஆசையை நிறைவேற்ற நினைத்த ஜமீன், தனது அரண்மனை கட்டுமான பணியில் ஈடுபட்டவர்களை உதவிக்கு அனுப்பி வைத்துள்ளார். முதலில் வீட்டைக் கட்ட முயன்றபோது தண்ணீர் அதிகமாக இருந்துள்ளது. பின்னர், கோட்டைச் சுவர் எழுப்பி, தண்ணீரை அகற்றிவிட்டுதான் கட்டுமானப் பணியை தொடங்கியுள்ளனர். சுண்ணாம்பு, கடுக்காய், முட்டை போன்றவற்றை கையால் அரைத்து கட்டியதால் தான் இந்த வீட்டு, தற்போதும் கம்பீரமாக நிற்கிறது. இந்த வீடு தான் எங்கள் அடையாளம்," என்கிறார் திருப்பதி உணர்ச்சி பொங்க.
“ஏசியே தேவையில்லை”.. வீட்டின் சிறப்பம்சங்கள்:
"இந்த வீட்டின் சிறப்பே மர சிற்பங்கள் தான். இவற்றுக்கான மரங்கள் அனைத்தும் ராஜபாளையத்திலிருந்து சுமார் 50 மாட்டு வண்டிகளில் வந்து இறங்கியதாக அறிகிறோம். மேலும், இந்த வீட்டில் கோயில்களை போன்று அதிக வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக யாழிகள், கிளிகள், ஆடு, மாடு போன்ற சிற்பங்கள் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன. பழங்கால கோயில்களில் காணப்படும் பல்வேறு சிற்பங்களை இங்கே பார்க்கலாம். அப்போதே மூலிகைகளைப் பயன்படுத்தி வண்ணம் தீட்டியுள்ளனர். கதவுகள் ராட்சத மரக்கட்டைகள் மூலமும், கைப்பிடி பித்தளையாலும் உருவாக்கப்பட்டுள்ளது.
வெளியே சுமார் 110 டிகிரியில் வெயில் கொளுத்தினாலும், இந்த வீட்டுக்குள் ஏசி போட்டதுபோல குளுகுளுவெனதான் இருக்கும். எங்களது முன்னோர்கள் எப்படி கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தார்களோ, அதேபோன்று 8வது தலைமுறையான நாங்களும் வாழ்ந்து வருகிறோம். இதனை அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாகக் கொடுக்க, பழைமை மாறாமல் புதுப்பிக்க முயற்சி செய்து வருகிறோம்." என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் திருப்பதி.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.