சென்னை: சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் 166-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவருடைய திருவுருவ படத்துக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”சிங்காரவேலர் சென்னையில் பிறந்து சட்டம் படித்து, சட்ட உதவி செய்தவர்.
சிங்கார வேலரின் சொத்துக்களை ஏழைகளுக்காக தியாகம் செய்தவர். அவர் முற்போக்கு சிந்தனை கொண்டவர். சிந்தனை சிற்பி சிங்காரவேலருக்கு அதிமுக ஆட்சியில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது. அவர் பெயரில் விருதும் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது” என்றார்.
ஓபிஎஸ் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்து குறித்த கேள்விக்கு, ”தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்ட எத்தனையோ பிரச்சனை இருக்கும் போது, கொசுக்களை பற்றி பேசாதீங்க என்று ஓபிஎஸை கிண்டல் செய்த ஜெயக்குமார், அவர் ரகசியம் என்று எதோ சொல்கிறார். ரகசியம் தெரிந்தால் அதை சொல்லுங்கள். ரகசியம் என்று சொல்லி தொண்டர்களை ஏமாற்றும் வேலை தான் 4 ஆண்டுக்கு மேலாக ஓபிஎஸ் & அவர் வகையறாக்களும் செய்கின்றனர். அது நிச்சயம் தொண்டர்கள் மத்தியில் எடுபடாது” என்றார்.
இதனைத்தொடர்ந்து மும்மொழி கொள்கை குறித்த கேள்விக்கு, ”அதிமுகவை பொறுத்தவரை இரு மொழிக் கொள்கை. மொழியை திணிக்கக் கூடாது. இந்தி தேவையில்லை. அதை யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளுங்கள், ஆனால் இந்தியை திணிக்காதீர்கள்.
தமிழ் அடுத்து மாநிலத்தில் ஆங்கிலம் இணைப்பு மொழி. தமிழ் தாய்மொழி. எந்த நிலையிலும் தாய்மொழி அழியக் கூடாது. அதை பேணி காக்க தான் இத்தனை வருடம் போராடி வருகிறோம். அந்த வகையில் ஒரு மொழியை திணிப்பதை தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். திமுக இன்றைக்கு கூட, ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இது எவ்வளவு பெரிய கில்லாடித்தனம், மோசடி. போராட்டம் நடத்துவது போல் திமுக அரசு சந்தர்ப்பமாக இரட்டை வேடம் போடுகிறது” என கண்டனம் தெரிவித்தார்.
மேலும் பேசிய ஜெயக்குமார், “மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ரூ.11 லட்சம் கோடி கொடுத்ததாக சொல்கிறார். அது யாருடைய பணம். மக்களுடைய வரிப்பணம் தானே. மக்கள் செலுத்தும் வரிக்கு ஏற்ப திரும்பி கொடுத்தீர்களா? அதே மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், உ.பி., பீஹார், ஒரிசா, ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு எவ்வளவு கொடுத்திருக்கிறோம் என்பதை சொன்னால் பரவாயில்லை.
11 லட்சம் கோடி என பேசுபவர், உ.பிக்கு எத்தனை லட்சம் கோடி என்று சொல்லுங்கள். 100 சதவீதம் நிதி கேட்டால் 10,15 சதவீதம் நிதி தான் கொடுக்கிறார்கள். ஆனால் குஜராத்திற்கு மட்டும் நிதியை தூக்கி கொடுக்கிறார்கள். ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்பது போல மத்திய அரசின் போக்கு மற்றும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே நிதி தருகிறோம் என்றால், இதை விட இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான கருத்து எதுவுமில்லை.
மாநிலத்தை வஞ்சிக்கும் வகையில், ஒரு மொழியை திணித்து அதன் மூலம் நிதி தருகிறோம் என்றால், நாங்கள் ஏன் வரி கட்ட வேண்டும் என்று தானே மக்கள் நினைப்பார்கள். இன்று ஆளும் அரசு எதுவும் கேட்காது. அவர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டார்கள்.
இதையும் படிங்க: விதிமீறல் கட்டடத்தை இடிக்க தடை கோரிய வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - RULES VIOLATION BUILDINGS
2026க்கு பிறகு மத்திய அரசுடன் சேர்வதற்கான வாய்ப்புகளும் பேசிவிட்டதாகவும், அதனால் அதிகம் பேச மாட்டார்கள். நான் அடிப்பது போல் அடிக்கிறேன், நீ அழுவது போல் அழு என்பது தான் திமுக, பாஜக இடையேயான நாடகம். நரேந்திர மோடியை ஸ்டாலின் சந்தித்தார். அடுத்து உதயநிதி சந்தித்தார் என்ன பிரயோஜனம்? நிதி வாங்கி கொடுத்தீர்களா? என கேள்வி எழுப்பினார்.