ஈரோடு: நகைக்கடையில் நூதன முறையில் திருடிய பெண்களை பவானிசாகர் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேருந்து நிலையம் அருகே ஜெயலட்சுமி ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை இயங்கி வருகிறது. இக்கடையில் நகை வாங்குவது போல் இரண்டு பெண்கள் கைக்குழந்தையுடன் நேற்று வந்துள்ளனர்.
நகைக்கடை ஊழியர்கள் அவர்களிடம் நகைகளை காண்பித்து வந்த நிலையில், கடை ஊழியரிடம் மற்றொரு பெண் கவனத்தை திசைதிருப்பும் வகையில் பேச்சு கொடுத்துள்ளார். அந்த பெண்ணுக்கு கடை ஊழியர் பதிலளித்து கொண்டிருந்தபோது, சட்டென மற்றொரு பெண் தங்க செயினை வேகமாக பையில் எடுத்து வைத்துக்கொண்டு, கவரிங் செயினை உடனடியாக மாற்றி வைத்துள்ளார். இதனிடையே தங்களின் திருட்டு வேலையை முடிந்த இரண்டு பெண்களும், தங்களுக்கு நகைகள் பிடிக்கவில்லை என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்டனர்.
இதற்கிடையே, அவர்கள் சென்ற பிறகு நகையை சரிபார்த்த ஊழியர், தங்க நகைக்கு பதிலாக கவரிங் நகை இருப்பதை கண்டு அதிர்ந்துள்ளார். தொடர்ந்து அவர் சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, கைக்குழந்தையுடன் வந்த பெண் தங்க நகையை திருடிக் கொண்டு, கவரிங் நகையை மாற்றி வைத்துவிட்டு சென்றது தெரிய வந்தது.
இதையும் படிங்க :தமிழக அரசியல் களத்தில் மாற்றத்தை ஏற்படுத்துமா அமித்ஷா வருகை..? - சூடு பறக்கும் மதுரை! |
இதுகுறித்து நகைக்கடை உரிமையாளர் பவானிசாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து கடையின் சிசிடிவி காட்சிகளை காவலர்கள் ஆய்வு செய்தனர். இதே பெண்கள் ஏற்கெனவே தங்க நகை வாங்குவது போல் வந்து, கவரிங் நகையை ஏமாற்றி வைத்தவிட்டு தங்க நகைகளை திருடி சென்றதையும் கண்டறிந்தனர்.
நகைக்கடைகளில் இவர்கள் தொடர்ந்து இதேபோன்று திருட்டு செயல்களில் ஈடுபட்டு வருவதையும் போலீசார் உறுதி செய்த நிலையில், அவர்களின் புகைப்படத்தை வைத்து அவர்களை மாவட்டம் முழுவதும் தீவிரமாக தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் கைக்குழந்தையோடு வந்து பெண்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சம்வரம் அப்பகுதி வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.