ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பு மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான கெடு இன்று பிற்பகல் மூன்று மணியுடன் முடிவடைந்தது. எட்டு பேர் வாபஸ் பெற்றநிலையில் திமுக, நாம் தமிழர் கட்சி உட்பட 47 பேர் இடைத்தேர்தல் களத்தில் களம் காண்கின்றனர். நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 10- ம் தேதி முதல் தொடங்கி 17- ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் வேட்பாளர் சீதா லட்சுமி மற்றும் சுயேட்சைகள் என 55 வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் மீது கடந்த 18- ஆம் தேதி பரிசீலனை நடைபெற்றது. 55 பேரின் மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
இதையும் படிங்க: கனிமவள கொள்ளையை எதிர்த்ததால் கொலை? ஜகபர் அலி மரண வழக்கில் 4 பேர் கைது!
வேட்பாளர்கள் வேட்பு மனுவை இன்று பிற்பகல் 3 மணிக்குள் வாபஸ் பெறலாம் என தேர்தல் ஆணையம் கெடு விதித்திருந்தது. இந்த நிலையில் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் 8 பேர் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதையடுத்து வேட்பாளர் இறுதிப் பட்டியலின்படி திமுக,நாம் தமிழர் கட்சியுடன் சேர்த்து 47 பேர் போட்டியிடுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேர்தல் நடத்தும் அலுவலர் மனீஷ்,"தமிழகத்தில் 8.22 வாக்கு சதவீதம் பெற்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக மாறிய நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையின் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் மைக் சின்னத்தை அளிக்கப்படுகிறது,"என்று குறிப்பிட்டார்.