- By இரா சிவக்குமார்
மதுரை: மதுரையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நாகமலை தொடரை ஊர்வன சரணாலயமாக அமைத்து பாதுகாக்கப்பட்ட பல்லுயிர்ச்சூழல் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். உலக பல்லுயிர் தினமான இன்று (மே 22) அது குறித்த ஒரு சிறப்பு தொகுப்பு...
நாகம் படுத்துக்கிடப்பதை போன்ற தோற்றம்
நாகமலை... மதுரையில் இருந்து தேனி செல்லும் சாலையில் உள்ளது. மதுரை மாநகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மட்டுமன்றி பல்லுயிர்ப் பெருக்கத்தின் தவிர்க்க முடியாத காப்புக் காடுகளைக் கொண்டு திகழும் நாகமலைத் தொடர் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். கிழக்கு, மேற்காக சுமார் 15 கிலோ மீட்டருக்கும் மேல் நீண்டு கிடக்கும் நாகமலை, பெயருக்கு ஏற்றாற் போன்றே மிகப் பெரிய நாகம் படுத்துக் கிடப்பதை போன்றே தோற்றமளிக்கிறது. கறவா பசு என பசுமலையையும், பிளிறா யானை என யானை மலையையும், சீறா நாகம் என நாக மலையையும் வரலாற்று அறிஞர்கள் வர்ணிப்பது உண்டு.
மதுரையின் மற்றொரு நதியான கிருதுமால்
மிக நீண்ட இந்த மலைத் தொடர் சுற்றுச்சூழலுக்கு மட்டுமன்றி பண்பாடு, சமயம் சார்ந்த நம்பிக்கைகளின் அடித்தளமாகத் திகழ்கிறது. மலையின் இரண்டு பக்க அடிவாரங்களிலும் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அவர்களுக்கு மிகப் பெரிய வாழ்வாதாரமாகவும், ஆன்மீக நம்பிக்கை சார்ந்தும் நாகமலை இன்றளவும் திகழ்கிறது. அதே போன்று வைகைக்கு சமமாக போற்றப்படும் மதுரையின் மற்றொரு நதியான கிருதுமால் ஆற்றின் தோற்றுவாய் நாகமலை தொடர் ஆகும்.

இது ஒருபுறம் இருக்க அரிய வகை கானுயிர்களின் வாழிடமாக நாகமலை உள்ளது. குறிப்பாக ஊர்வனங்களின் ஆகப் பெரும் சரணாலயம் என்றே நாகமலையைக் குறிப்பிடலாம் என்கிற அளவுக்கு, ஊர்வன பெருமளவில் இங்கே காணப்படுகின்றன. இதன் காரணமாக நாகமலைத் தொடரை ஊர்வன சரணாலயமாக தமிழ்நாடு அரசு அறிவிப்புச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது.
மயில்கள் சரணாலயம் அமைப்பதற்கு முயற்சி
ஒவ்வொரு ஆண்டும் மே 22 ஆம் தேதியை பல்லுயிர்ப் பெருக்க நாளாக அனுசரித்து வரும் நிலையில் நாகமலை குறித்த சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் விருப்பத்தையும் தமிழக அரசு நிறைவேற்றுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. நாகமலை அடிவாரத்தில் அமைந்துள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நூற்றுக்கணக்கான மயில்களை இன்றும் காணலாம். இப்பகுதியில் மயில்கள் சரணாலயம் அமைப்பதற்கு சில துணைவேந்தர்களும் கூட முயற்சி மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"15 வகை பாம்பு, 11 வகை ஓணான், 11 வகை தவளை கண்டறிந்தோம்" - வித்தோஷ்குமார்!
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் எம்.எஸ்சி விலங்கியல் பயிலும் வித்தோஷ் குமார் நாகமலையில் வாழும் ஊர்வனங்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு கட்டுரை சமர்ப்பித்துள்ளார். ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அவர் அளித்த நேர்காணலில், 'நாகமலையிலுள்ள ஊர்வன இனங்கள் மற்றும் தவளைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டேன். இதில் குறிப்பாக நாகமலையில் அமைந்துள்ள புல்லூத்து, காக்கா ஊத்து மற்றும் நாகதீர்த்தம் ஆகிய பகுதிகளில் ஆய்வுகள் நடத்தினேன்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை ஆய்வு மேற்கொண்டேன். ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் 6 முறை இப்பகுதிகளில் கள ஆய்வுகள் நடைபெற்றன. இந்த ஆய்வுகள் அனைத்தும் இரவில் மட்டுமே நடைபெற்றன. காரணம், ஊர்வன இனங்கள் அனைத்துமே இரவு நேரங்களில் மட்டுமே நடமாடும் தன்மை கொண்டவை. இரவு 8-12 மணி அல்லது 9-1 என்று இந்த ஆய்வு நேரங்கள் இருந்தன.

இந்திய மலைப்பாம்பு இனம்
எனது தலைமையில் 3 பேர் கொண்ட குழு இந்த ஆய்வில் ஈடுபட்டது. 6 மாத கால ஆய்வில் 15 வகையான பாம்புகள், 11 வகையான ஓணான்கள் மற்றும் அரணைகள், 11 வகையான தவளை மற்றும் தேரைகள் இவற்றோடு அழிவின் விளிம்பில் உள்ள ஊர்வன இனங்களில் குறிப்பாக இந்திய மலைப்பாம்பு இனத்தை இங்கு தான் கண்டறிந்தோம். குறைந்த கால இடைவெளி என்பதால் மண்ணுளிப்பாம்பு, பூனைக்கண் பாம்பு உள்ளிட்ட சில வகை பாம்புகளை ஆவணப்படுத்த இயலவில்லை.

ஊர்வன சரணாலயம்
நாகமலையை முழுவதுமாக ஊர்வன சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என்பதற்கான ஆய்வு அறிக்கையை அரசுக்கு அளிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த பகுதியை எனது ஆய்வுக்காக நான் தேர்வு செய்தேன். இன்னும் விரிவான அளவில் ஆய்வு மேற்கொள்ள தற்போது முயற்சி மேற்கொண்டுள்ளோம்.
விஷப் பாம்புகளான சுருட்டை விரியன், கட்டுவிரியன், கண்ணாடி விரியன், நல்ல பாம்பு ஆகியவற்றோடு விஷமற்ற சாரைப்பாம்பு வகைகள், வெள்ளிக்கோல் விரியன், மோதிர வளையன், பச்சைப்பாம்பு, கொம்பேறி மூக்கன், எண்ணெய்ப்பனையன், செவிட்டுப்பாம்பு, மண்ணுளிப்பாம்பு, தண்ணிப்பாம்பு, ஓலைப்பாம்பு, மலைப்பாம்பு ஆகியவை இங்கே காணப்படுகின்றன' என்று வித்தோஷ்குமார் கூறினார்.

''நோய் தீர்க்கும் அதிசய நீர் ஊற்று" - திருநங்கை அவந்திகா!
சமயநல்லூரைச் சேர்ந்த திருநங்கை அவந்திகா கூறும் போது, 'நான், எனது அம்மா மற்றும் நண்பர்களோடு மும்பையில் வசித்து வருகிறேன். மாதம் ஒருமுறை மதுரைக்கு வருவோம். அப்போது தவறாமல் நாள்தோறும் நாகமலை புல்லூத்துக்கு வந்து அனைவரும் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளோம். இங்குள்ள ஊற்று தண்ணீர் மருத்துவ குணம் கொண்டது. இந்த நாகமலை அடிவாரத்தில் நிறைய கிராமங்கள் உள்ளன. அதே போன்று இந்த மலையை சார்ந்து எத்தனையோ அரிய வகை ஊர்வனங்கள் உள்பட நிறைய ஜீவராசிகள் வாழ்கின்றன. ஆகையால் தமிழக அரசு நாகமலையை பாதுகாக்க வேண்டும்." என்று அவந்திகா கூறினார்.
"மது குடிப்பவர்களால் பெண்கள் சுதந்திரமாக வந்து செல்வது சவாலாக மாறியுள்ளது" - சேகர்!
அதே போல், மேலமாத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சேகர் கூறும் போது, ''நான் புல்லூத்து பகுதியில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறேன். தாடணாச்சி ஊத்து, புல்லூத்து, பாலூத்து, காக்கா ஊத்து, தாழையூத்து, நாகதீர்த்தம் மற்றும் நாராயணபுரம் ஊத்து என மொத்தம் 7 ஊற்றுகள் நாகமலையில் அமைந்துள்ளன. மான், கரடி, சிறுத்தை, குரங்கு, காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் உள்ளன.
மூலிகைகள் நிறைந்த பகுதி
பிள்ளை வரம் வேண்டி வருபவர்களுக்கு புல்லூத்து, சனீஸ்வரருக்கு உகந்தது காக்கா ஊத்து, நாக தோஷக்காரர்களுக்கு நாகதீர்த்தம் என இங்குள்ள ஊத்துக்கள் மிகப் புனிதம் வாய்ந்தவை. ஆனால் அண்மைக் காலமாக இப்பகுதி மது குடிப்பவர்களால் தனது தனித்தன்மையை இழக்க தொடங்கி உள்ளது. இதனால் பெண்கள் சுதந்திரமாக வந்து செல்வது மிக சவாலாக மாறியுள்ளது. சிறியா நங்கை உள்ளிட்ட பல்வேறு வகையான அரிய மூலிகைகள் நிறைந்த பகுதியாகும். மது குடிப்பவர்களின் நடமாட்டத்தை தடுத்தாலே போதும் இந்த பகுதியின் புனிதத்தை காப்பாற்றிவிட முடியும்." என்று சேகர் கூறினார்.