இருமல் மருந்து விவகாரம்: கைதான ஸ்ரீசன் நிறுவன உரிமையாளர் ரங்கநாதனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!
இருமல் மருந்து குடித்து குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் திருவான்மியூரில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Published : October 13, 2025 at 1:03 PM IST
சென்னை: இருமல் மருந்து குடித்து 22 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், திருவான்மியூரில் உள்ள காஞ்சிபுரம் மண்டல தமிழக உணவு மற்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் தீபா ஜோசப் என்பவரது வீட்டில், அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் கோல்ட்ரிஃப் சிரப் (coldrif syrup) இருமல் மருந்துகளை உட்கொண்ட 22 குழந்தைகள் அண்மையில் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதில் அந்த இருமல் மருந்தை தயார் செய்தது தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வந்த ஸ்ரீசன் பார்மா நிறுவனம் என்பது தெரியவந்தது.
இந்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக (அக்.13) சென்னை உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, சென்னை கோடம்பாக்கம் நாகார்ஜுனா நகர் 2-வது தெருவில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனுக்கு சொந்தமான குடியிருப்புக்கு இரண்டு கார்களில் வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோல்ட்ரிப் மருந்து உற்பத்தி நிறுவனத்தின் அலுவலகம், தமிழ்நாடு அரசால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள கார்த்திகேயனின் வீடு மற்றும் திருவான்மியூர் ராதாகிருஷ்ணன் பிரதான சாலையில் உள்ள, காஞ்சிபுரம் மண்டல தமிழக உணவு மற்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் தீபா ஜோசப் என்பவரது வீட்டில் 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய இரண்டு சிஆர்பிஎஃப் போலீசார் உதவியுடன் சோதனை நடத்தி வருகின்றன.
முன்னதாக, தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், ஸ்ரீசன் நிறுவனம் கடுமையான விதிமீறல்களில் ஈடுபட்டதும், சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்ததும் உறுதி செய்யப்பட்டது. மேலும், இந்த மருத்து தயாரிப்பில் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், 48.6 சதவீத எத்திலீன் கிளைக்கால் வேதிப்பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு 26 பக்கங்கள் கொண்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியது.
| இதையும் படிங்க: கோவை ஜி.டி.நாயுடு பாலம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு! |
இதையடுத்து ஸ்ரீசன் பார்மா நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை கடந்த 9 ஆம் தேதி, மத்தியப் பிரதேச மாநில சிறப்புப் புலனாய்வு பிரிவு போலீசார், தமிழக போலீசார் உதவியுடன் கைது செய்தனர். தொடர்ந்து அவரை மத்தியப் பிரதேசம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், மருந்து கட்டுப்பாட்டு துறை மூத்த மருந்து தர கட்டுப்பாட்டு துறை ஆய்வாளர்களான கார்த்திகேயன், தீபா ஜோசப் ஆகிய இருவரை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்த சம்பவத்திற்கு பிறகு, தமிழ்நாட்டில் அமைந்துள்ள இதர மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மீதும் விரிவான ஆய்வு மேற்கொள்ள மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் இதுதொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

