சென்னை: அமைச்சர் கே என் நேருவின் மகனும் திமுக எம்பியுமான அருண் நேரு நிறுவனங்களின் இயக்குநரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் உள்ள அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன், கே.என் நேருவின் மகனும் திமுக எம்பியுமான அருண் நேரு மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய நிறுவனங்களின் அலுவலகங்கள், வீடுகள் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வந்த சோதனை நிறைவடைந்தது. இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் கே.என்.ரவிச்சந்திரனிடம் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரின் வீட்டிலேயே வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.
சென்னை ஆழ்வார்பேட்டை சி.வி.ராமன் தெருவில் ஒரே முகவரியில் செயல்பட்டு வரும் அருண் நேருவின் இரண்டு நிறுவனங்களி்ன் இயக்குநராக தீபக் இளங்கோவன் என்பவர் இருந்து வருகிறார். இந்த இரண்டு நிறுவனங்களிலும் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சில ஆவணங்களை கைப்பற்றினர். மேலும் கே.என். ரவிச்சந்திரன் இடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் தீபக் இளங்கோவனை அபிராமிபுரம் பகுதியில் உள்ள கே.என்.ரவிச்சந்திரன் இல்லத்திற்கு வரவழைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 2 ஆண்டுகளுக்குப் பின் சரண் அடைந்த செந்தில் பாலாஜியின் சகோதரர்! 'சூடு' பிடிக்கும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு!
நேற்றைய சோதனையின் போது அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர்களின் வாகனத்தில் ஏற்றி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அழைத்துச் சென்று 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். பிறகு மீண்டும் அவரது அபிராமிபுரம் இல்லத்திற்கு அழைத்துச் சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை மேற்கொண்டனர்.
கடந்த 3 நாட்களாக நடைபெற்ற சோதனையில் கே.என்.ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய நிறுவனங்களில் பணியாற்றி வரும் இயக்குநர்கள், பங்குதாரர்கள் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சோதனை நிறைவு பெற்ற நிலையில், விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று மாலை மீண்டும் கே.என்.ரவிச்சந்திரன் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் அடிப்படையில் அவரிடம் எழுத்துப்பூர்வமாகவும், விசாரணை நடைமுறைகளை வீடியோவாகவும் அமலாக்கத் துறை அதிகாரிகள் பதிவு செய்தனர்.
காற்றாலை மின்சார நிறுவனத்துக்காக வாங்கப்பட்ட கடன் தொகை, மோசடியாக வேறு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது குறித்த சிபிஐ வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் கே.என்.நேரு, அவரின் சகோதரர் ரவிச்சந்திரன், அவரது மகன் அருண் நேரு ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியதுடன், விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்