''அதிமுக ஆட்சியை காப்பாற்றி கொடுத்த மத்திய அரசுக்கு நன்றியோடு இருக்கிறோம்'' - எடப்பாடி பழனிசாமி!
அதிமுக ஆட்சியை கவிழ்க்க பார்த்தவர்களை மன்னித்து துணை முதலமைச்சர் பதவி கொடுத்தும் திருந்தவில்லை. மீண்டும் அதிமுக அலுவலகத்தை அடித்து நொறுக்கினார்கள். இன்னொருவர் 18 சட்டமன்ற உறுப்பினர்களை கடத்தி சென்றார். இவர்களை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

Published : September 15, 2025 at 11:38 PM IST
சென்னை: அதிமுகவை கபளீகரம் செய்ய பார்த்தார்கள். ஆட்சியை கவிழ்க்க பார்த்தார்கள். அதை காப்பாற்றி கொடுத்தவர்கள் மத்தியில் இருப்பவர்கள் தான். நன்றி மறப்பது நன்றன்று. எனவே, நாங்கள் மத்திய அரசுக்கு நன்றியோடு இருக்கிறோம் என்று, எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
சென்னை தி.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடபழனி, கங்கை அம்மன் தெருவில் அண்ணா 117வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுகவின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
தமிழகத்தில் இரு மொழி கொள்கையை அறிமுகப்படுத்தியவர். அனைவராலும் அண்ணாந்து பார்க்கக்கூடிய தலைவர் அண்ணா. ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்போம் என, தமிழக மக்களுக்கு எந்த திட்டத்தை கொண்டு வந்தால் ஏழைகளின் வாழ்வு சிறக்கும் என்று சிந்தித்து செயல்பட்டவர் அண்ணா.
அண்ணாவின் கனவை நனவாக்கும் விதமாக சத்துணவு திட்டத்தை கொண்டு வந்து, கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏராளமான கல்வி நிறுவனங்களை கொண்டு வந்தவர் எம்ஜிஆர். அதிமுக ஆட்சி காலத்தில் தான் உயர்க்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதல் இடத்தில் இருந்தது.
திருட்டு வழக்கில் திமுக ஊராட்சி மன்ற தலைவர்
திமுக ஊராட்சி மன்ற தலைவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே இந்த கட்சி எப்படிப்பட்டது? என நாம் எண்ணி பார்க்க வேண்டும். தமிழகத்தில் எது கிடைக்கிறதோ? இல்லையோ? போதை பொருட்கள் பயங்கரமாக கிடைக்கிறது. தமிழகத்தில் ஒருவர் டி.ஜி.பியாக இருந்தார். அவர், 2.0 3.0 என பல திட்டங்களை போட்டார். ஆனால் கடைசியில் O போட்டுவிட்டு சென்றுவிட்டார்.
மாணவர்களிடம் போதைப் பொருட்கள் புழக்கம்
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களிடம் சாதாரணமாக போதைப் பொருட்கள் கிடைக்கிறது. தமிழகத்தில் சிறுமி மற்றும் முதியவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இன்றைக்கு திமுக ஆட்சியில் முறைகேடு நடக்காத துறைகளே கிடையாது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியாமல் திமுக அரசு தத்தளித்து வருகிறது.
அண்ணா பல்கலை பாலியல் விவகாரம் குறித்து அனைவருக்கும் தெரியும். யார் அந்த சார்? அதிமுக ஆட்சிக்கு வந்ததும் யார் அந்த சார் ? யார் பிரியாணி கடைக்கு சென்று சாப்பிட்டது? என, கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். திமுக அமைச்சரவையில் இருப்பவர் சொன்னார். உதயநிதியும், சபரிசனும் 30 ஆயிரம் கோடி வைத்துக்கொண்டு என்ன செய்வதென்றே தெரியாமல் இருப்பதாக சொன்னார்.
மதுரை மாநகராட்சியில் 200 கோடி முறைகேடு
இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இதுவரை வாய் திறக்கவில்லை. மதுரை மாநகராட்சியில் மக்கள் வரிப்பணத்தில் சுமார் 200 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளது. முறைகேடு செய்தது மேயர். ஆனால் அவரை கைது செய்யாமல் அவரின் கணவரை கைது செய்துள்ளனர்.
மாநகராட்சி மண்டலக் குழு தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளார்கள். சில அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரையில் மட்டும் அல்ல. இன்னும் சில மாநகராட்சிகளும், ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளது. மேயர் மீதே நம்பிக்கை இல்லா தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
திமுக எம்எல்ஏ மருத்துவமனையில் கிட்னி திருட்டு
திமுக எம்எல்ஏ நடத்தும் மருத்துவமனையில் கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட குழு முறைகேட்டை உறுதி செய்தது. அதை தொடர்ந்து உறுப்பு மாற்று சிகிச்சைக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் யாரையும் கைது செய்யவில்லை. வறுமையை பயன்படுத்தி ஏழைகளின் உறுப்புகளை திருடுவது என்ன நியாயம்? திமுகவினர் நடத்தும் மருத்துவமனைக்கு சென்றவர்கள் தங்கள் உடல் உறுப்புகள் இருக்கிறதா? என, ஸ்கேன் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.
சென்னை மாநகராட்சி கழிப்பறையில் மெகா ஊழல்
சென்னை மாநகராட்சியில் கழிப்பறை சுத்தம் செய்ததில் மெகா ஊழல் நடைபெற்றுள்ளது. சுத்தம் செய்வதற்கு செலவிடப்பட்ட தொகையில் புதிய கழிப்பறையையே கட்டி இருக்கலாம். சுமார் 450 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. அதிமுக ஆட்சி அமைந்ததும், தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். தங்கத்துடன் மணமக்களுக்கு பட்டு வேட்டி, சேலை வழங்கப்படும்.

முதலீடு ஈர்க்க போனாரா? முதலீடு செய்ய போனாரா?
முதலமைச்சர் ஸ்டாலின் தொழில் முதலீடு ஈர்க்க போனாரா? முதலீடு செய்ய போனாரா? என இன்னும் சில நாட்களில் தெரிய வரும். லூலூ மால் வரும் என்று சொன்னார்கள். இன்னும் வரவில்லை. ஸ்பெயின் நாட்டுக்கு போனார். அங்கு 3400 கோடிக்கு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
தமிழ்நாட்டில் உள்ள நிறுவனத்தை ஸ்பெயின் அழைத்து சென்று புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது ஏன்? தற்போது ஜெர்மனியில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் பல தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்வதே தவிர புதிய ஒப்பந்தங்கள் இல்லை. முதலமைச்சர் ஸ்டாலின் போட்ட ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வருவதற்கே இன்னும் 3 ஆண்டுகள் ஆகும். ஆனால் 77 சதவீதம் செயல்பாட்டுக்கு வந்துவிட்டதாக பச்சை பொய்யை ஸ்டாலின் சொல்கிறார்.
அதிமுகவிற்கு துரோகம் செய்தால் நடுரோடு
அம்மாவின் மறைவுக்கு பிறகு சில பேர் கட்சியை கபளீகரம் செய்யப் பார்த்தார்கள். ஆட்சியை கவிழ்க்க பார்த்தார்கள். அதை காப்பாற்றி கொடுத்தவர்களும் யாரென்று உங்களுக்குத் தெரியும். மத்தியில் இருப்பவர்கள் காப்பாற்றி கொடுத்தார்கள். நன்றி மறப்பது நன்றன்று. எனவே நன்றியோடு நாங்கள் இருக்கிறோம். தேர்தல் நேரத்திலே வெற்றி பெற வேண்டும். ஆளுங்கட்சியை வீழ்த்த வேண்டும். அதிமுகவிற்கு துரோகம் செய்தால் அவர்கள் நடுரோட்டில் நிற்பார்கள்.
பாரபட்சம் காட்டும் பத்திரிகையாளர்கள்
ஒன்றுமே இல்லாதவர்களை நாள் முழுதும் காண்பிப்பார்கள். அவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியும். மழை எச்சரிக்கையை தொடர்ந்து தான் தருமபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. உடனே எடப்பாடி பழனிசாமி அதிமுக உட்கட்சி பிரச்சனை குறித்து உள்துறை அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்த டெல்லி செல்கிறார் என செய்தி வெளியிட்டார்கள்.
கைக்கூலியை அடையாளம் கண்டுவிட்டோம்
அதிமுகவை எவராலும் ஒன்னும் பண்ண முடியாது. ஆட்சி அதிகாரத்தை விட தன்மானம் தான் முக்கியம். இம்மி அளவு கூட விட்டுக்கொடுக்க மாட்டேன். இன்னும் சில பேர் கைக்கூலியை வைத்து ஆட்டம் போடுகிறார்கள். அந்த கைக்கூலிகள் யார்? என அடையாளம் கண்டுவிட்டோம்.
அவர்களுக்கு விரைவில் முடிவு கட்டப்படும்.
அதிமுக ஆட்சியை கவிழ்க்க பார்த்தவர்களை மன்னித்து துணை முதலமைச்சர் பதவி கொடுத்தோம். ஆனாலும், திருந்தவில்லை. மீண்டும் அதிமுக அலுவலகத்தை அடித்து நொறுக்கினார்கள். இன்னொருவர் சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை கடத்திக் கொண்டு போனார். இவர்களை எல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
எனக்கு உறுதியான எண்ணம் மனநிலை உண்டு. எதற்கும் அஞ்ச மாட்டேன். என்னை யாரும் மிரட்ட முடியாது. மத்தியில் யாரும் என்னை அச்சுறுத்தவில்லை. நமக்கு நல்லது தான் செய்தார்கள். கூட்டணி சேர்வது தேர்தலுக்காக தான். எதிரிகளை வீழ்த்த தான். திமுகவும் பாஜக உடன் கூட்டணி வைத்தது. அப்ப எல்லாம் அவர்கள் பேசவில்லை.
திமுகவுக்கு தோல்வி பயம்
திமுகவுக்கு தேர்தலில் தோல்வி அடைவோம் என பயம் வந்துவிட்டது. அதனால் தான் அதிமுக பாஜக கூட்டணியை விமர்சித்து வருகிறார்கள். மத்தியில் ஆள்பவர்கள் நமக்கு எந்த தொல்லையும் கொடுக்கவில்லை. நாம் கேட்ட திட்டத்தை எல்லாம் கொடுத்தார்கள். நிதியை கொடுத்தார்கள். 2026 ஆம் ஆண்டு அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

