சென்னை: திமுக ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் ஆகியும் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய முயற்சி எடுக்காத நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி இருப்பது நாடகம் என்றும், எனவே இந்தக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
ஜெயலலிதா பெற்ற தற்காலிக விலக்கு
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில், 'காங்கிரஸ் - திமுக கூட்டணி மத்தியில் ஆட்சி செய்தபோது குலாம்நபி ஆசாத் மத்திய சுகாதார துறை அமைச்சராகவும், திமுகவின் காந்திசெல்வன் மத்திய இணை அமைச்சராகவும் பதவி வகித்தனர். அப்போது 21.12.2010 அன்று நீட் தேர்வு குறித்து மத்திய அரசிதழில் அறிவிக்கை லெளியிடப்பட்டது. 2011 முதல் 2016 வரை தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி நீட் தேர்விற்கு தற்காலிகமாக விலக்கு பெற்றார்.
நீட் தேர்வுக்கு ப.சிதம்பரம் மனைவி ஆதரவு
உச்ச நீதிமன்றம் 9.5.2016 ஆம் தேதியிட்ட தீர்ப்பில் நீட் தேர்வின் மூலம் தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று கூறியது. எனவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அரசு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று 31.1.2017 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒரு மனதாக சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் மத்திய அரசு அதற்கான ஒப்புதல் வழங்கவில்லை. திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மனைவியும், மூத்த வழக்கறிஞருமான நளினி சிதம்பரம் நீட் தேர்வு தொடர வேண்டும் என்று வாதாடியதுடன், 'எந்தச் சூழ்நிலையிலும், இனி யாராலும் இந்தியாவில் நீட் தேர்வை ஒழிக்க முடியாது' என்று பேட்டியும் அளித்தார்.
அரசுப் பள்ளி மாணவர்கள் 6 பேர் மட்டும் தேர்வு
உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவிய காரணத்தினால் 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கு நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்து பன்னிரெண்டாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சேர்க்கையினை கொண்டு வரும் வகையில் ஒரு அவசர சட்டத்தினை உருவாக்கித் தர வேண்டி, மத்திய அரசுக்கு எனது தலைமையிலான அரசு 8.7.2020 அன்று கடிதம் அனுப்பியது. இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு மருத்துவம் பயில நீட் நுழைவுத் தேர்வு மூலம் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் 6 பேர் மட்டுமே தேர்வாயினர்.
பொய் வாக்குறுதி தந்து ஆட்சிக்கு வந்த திமுக
எனவே ஏழை, எளிய, நடுத்தர மாணவர்கள் அதிகம் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கும் வகையில் நான் முதலமைச்சராக இருந்தபோது மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை சட்டமாக்கி, அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இன்று வரை 3500க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளில் பயின்று வருகின்றனர் என்பதை பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் தமிழக மக்களுக்கு நீட் குறித்து பொய் வாக்குறுதி அளித்து திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்றும், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என்றும் மேடைதோறும் பேசினார்கள். அதை நம்பி மாணவர்களும், இளைஞர்களும், பெற்றோர்களும் திமுகவிற்கு வாக்களித்தனர்.
ஜெயலலிதா அரசு போன்று பேரவையில் தீர்மானம்
ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அரசு மேற்கொண்டது போன்று நீட் நுழைவு தேர்விற்கு விலக்கு அளிக்க வேண்டும் என 3.9.2021 மற்றும் 8.2.2022 என 2 முறை சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 4 அன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேரவை விதி 110ன் கீழ் பேசும்போது குடியரசுத் தலைவர் தமிழ்நாட்டின் நீட் தொடர்பான சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், எனவே ஏப்ரல் 9 -ம் தேதி அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்ட உள்ளதாகவும் அறிவித்திருந்தார்.' என்று தமது விரிவான அறிக்கையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் உரை மீதான விவாதத்தில் நீட் குறித்து பேச்சு
மேலும் அவர், 'இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் 10.1.2025 அன்று ஆளுநர் உரை மீதான விவாதத்தில் நீட் தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் நான் பேசியபோது, ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது மத்திய அரசு நீட் தேர்வை அறிவித்திருந்தாலும்கூட அதை 2016-17 வரை விலக்கு பெற்றோம். ஆனால் நீட் நுழைவுத் தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து அதன்படிதான் நீட் தேர்வு நடைபெறுகிறது. நீங்கள் எப்படி நீதிமன்றத்தை கட்டிக்காட்டுகிறீர்களோ, அதேபோன்றுதான் நாங்களும் அப்போது நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததை சுட்டிக் காட்டினோம். ஆனால் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக தேர்தலின்போது பொய்யான தகவலை மாணவர்களிடமும், இளைஞர்களிடமும், பெற்றோர்களிடமும் பரப்பி திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவிப்பு செய்தீர்களா, இல்லையா? என்று கேள்வி எழுப்பினேன்.
உரிமை இல்லை என ஒப்புக்கொண்ட ஸ்டாலின்
அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான முயற்சியில் ஈடுபடுவோம் என சொல்லியிருக்கிறோமே தவிர, எங்களால் எப்படி ரத்து செய்ய முடியும்? சராசரி மனிதனாக இருக்கக்கூடிய அனைவருக்குமே இது தெரியும். தமிழ்நாடு அரசால் இதை ரத்து செய்ய முடியாது என்றும், மத்திய அரசுதான் ரத்து செய்ய முடியும் என்றும், அதனால்தான் நாங்கள் மத்திய அரசை வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம்' எனவும் சட்டப்பேரவையில் எனக்கு பதில் அளித்தார். நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசுதான் ரத்து செய்ய முடியும், மாநில அரசு அல்ல. அந்த உரிமை மாநில அரசிற்கு இல்லை என்பதை ஸ்டாலினே ஒப்புக்கொண்டுள்ளார்' என்று சட்டப் பேரவையில் பேசினேன்.
இன்னுயிரை மாய்த்த 20 மாணவ, மாணவிகள்
மேலும் 2021 சட்டமன்ற தேர்தலின்போது நீட் குறித்த வழக்கு நிலுவையில் இருந்தது தெரிந்திருந்தும் ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலினும் அதை மறைத்து, வாக்குகள் பெறுவதற்காக பொய்யாக தேர்தல் பரப்புரை செய்தார்கள். எனவேதான், நான் 'தேர்தல் வருவதற்கு முன்பு ஒரு பேச்சு, தேர்தல் முடிந்த பிறகு ஒரு பேச்சு இரட்டை வேடம் போடுகின்ற கட்சி எது என்று நாட்டு மக்கள் அறிந்து கொண்டார்கள்' என்று 10.1.2025 அன்று சட்டப்பேரவையில் பேசினேன். விடியா திமுகவின் இரட்டை வேடத்தால் 4.4.2025 வரை நீட் நுழைவுத் தேர்வில் போதிய மதிப்பெண் எடுக்க முடியாது என்ற மனவருத்தத்தில் இதுவரை சுமார் 20 மாணவ, மாணவிகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துள்ளனர்.
விடியா திமுக அரசு தவறை மறக்க செய்யும் நாடகம்
கடந்த 2021 ஆம் ஆண்டு ஸ்டாலின் மாடல் திமுக அரசு பொறுப்பேற்றது முதலே தமிழகத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால், உடனடியாகக் குழு அமைப்பது, அறிக்கை விடுவது, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவது, சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது என்பது மக்களை குழப்பி விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு, செய்த தவறுகளை மக்களிடம் மறக்கச் செய்யும் நாடகம். நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றியதற்கு, விடியா திமுகவின் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினும், அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்கும் காலம் விரைவில் வரும்.
தமிழக மக்களிடம் வெளிவந்துவிட்ட பொய் முகமூடி
குடியரசு தலைவர் நீட் தொடர்பான தமிழக அரசின் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், நீட் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும், சட்டமன்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நிலைமை இவ்வாறிருக்க, அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி இதில் என்ன முடிவு எடுக்க முடியும்? முதலமைச்சர் ஸ்டாலின் 6.4.2025 அன்று ஊட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசும்போது, நீட் குறித்த தனது பொய் முகமூடி தமிழக மக்களிடம் வெளிவந்துவிட்டதை மறைக்கும் விதமாக, நீட் நுழைவுத் தேர்வு விலக்கை வழங்கினால் தான் அஇஅதிமுக, பா.ஜ.கவுடன் கூட்டணி அமைப்போம் என்று 'கண்டிஷன்' விதிக்கச் சொல்கிறார்.
'மேகதாது அணை', 'முல்லைப் பெரியாறு தண்ணீர் தேக்கம்' - காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களுடன் 'கண்டிஷன்' போட்டாரா ஸ்டாலின்?
நான் கேட்கிறேன். 2019, 2021, 2024 தேர்தல்களில் காவிரியில் கர்நாடக உச்சநீதிமன்ற ஆணைப்படி ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாதமும் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டக்கூடாது, இதற்கு ஒப்புக்கொண்டால் தான் தமிழகத்தில் காங்கிரசுடன் கூட்டணி என்று ஸ்டாலின் 'கண்டிஷன்' போட்டாரா? உச்சநீதிமன்ற ஆணைப்படி முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்திய பிறகு 142 அடியிலிருந்து 152 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க சம்மதித்தால்தான் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி என்று 'கண்டிஷன்' போட்டாரா? நீட் விஷயத்தில் தாம் முழுமையாக தோற்றுவிட்டோம். இனி தமிழக மக்களிடம் பொய் நாடகம் எடுபடாது என்பதை உணர்ந்த பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் அரசு விழாவில் எதை பேசுகின்றோம்? என்பது தெரியாமல் பிதற்றியுள்ளார்.
திமுகவின் நாடகம்
வரும் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் மக்களை சந்திக்க வேண்டிய நிலையில் நீட் விவகாரத்தில் திமுக மீது மக்களுக்கு எழுந்துள்ள கொந்தளிப்பையும், எதிர்ப்பையும் சரி செய்வதற்காக நாளை (ஏப்ரல் 9) சட்டமன்றக் கட்சிக் தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்த கூட்டத்தால் எவ்வித தீர்வும் ஏற்படப் போவதில்லை. இது ஒரு நாடகம். எனவே, விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் திமுக அரசு அழைத்துள்ள அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது.' என்று எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் திட்டவட்டமாக கூறியுள்ளார்.