சென்னை: அதிமுக எங்களுடைய கட்சி; நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம் எனவும், அமித் ஷா ஒருபோதும் கூட்டணி அரசு எனச் சொல்லவே இல்லை என்றும் அதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் அமைச்சர்கள் மூவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர அதிமுக தரப்பில் சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் இத்தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அதிமுக எம்எல்ஏக்கள் கோரினர். ஆனால் இன்று மற்ற அலுவல்கள் உள்ளதாகக் கூறி இக் கோரிக்கையை ஏற்க சபாநாயகர் மறுத்ததால் அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அதிமுக-பாஜக கூட்டணி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, "எங்கள் கூட்டணி வலுவானதா, இல்லையா? என்பது தேர்தலில் தான் தெரியும். சிதறும் வாக்குகளையெல்லாம் ஒன்றாக சேர்த்து எதிரிகளை வீழ்த்த வேண்டும். அந்த வகையில், ஆளுகின்ற திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற கருத்துள்ள கட்சிகளை எல்லாம் ஒன்றாக இணைக்கும் முயற்சி தான் பாஜகவுடனான கூட்டணி. எங்களது கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் விரைவில் சேர இருக்கின்றன.
அதிமுக எங்கள் கட்சி, நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். உங்களுக்கு ஏன் எரிச்சல்? எதற்காகப் பயம்?. அதிமுக என்பது ஒரு பிரதான கட்சி. எங்களுடைய கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கூட்டணி அமைத்துக் கொண்டுள்ளோம். இதில் உங்களுக்கு என்ன கஷ்டம்? இதனை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்," என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ஈபிஎஸ் மறைமுகமாக சாடினார்.
முதலமைச்சர் கொண்டு வந்த மாநில சுயாட்சி தீர்மானம் குறித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போதெல்லாம் இதனைக் கொண்டு வரவில்லை. தேர்தல் வருவதற்கு முன்பே திமுக நாடகத்தை ஆரம்பித்துவிட்டது.
இதையும் படிங்க: திமுக அமைச்சர்கள் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் - அனுமதி அளிக்காததால் அதிமுக வெளிநடப்பு! |
திமுக மீது மக்கள் வெறுப்புடன் உள்ளனர். இதனை மடைமாற்றவே, திசை திருப்பவே மாநில சுயாட்சி என்ற நாடகத்தை திமுக அரங்கேற்றியுள்ளது. கருணாநிதியின் குடும்பத்தினருக்கு மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதே நிலைப்பாடே தவிர, தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறையில்லாத அரசாங்கம் திமுக அரசாங்கம்," என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
மேலும், "மத்திய அமைச்சர் அமித் ஷா ஒரு போதும் கூட்டணி அரசு எனச் சொல்லவே இல்லை. டெல்லியில் பிரதமர் தலைமையிலும், மாநிலத்தில் அதிமுக தலைமையிலும் கூட்டணி என்று தான் அவர் கூறினார்" எனவும் ஈபிஎஸ் விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "கூலி உயர்வு கேட்டு விசைத்தறி உரிமையாளர்கள் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அரசு அவர்களை அழைத்துப் பேசி, அவர்களது கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும்." எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.