சென்னை: அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன், கே.என் நேருவின் மகனும், திமுக எம்பியுமான அருண் நேரு மற்றும் அவர்களுக்கு தொடர்புடையவர்களின் நிறுவனங்கள், வீடுகள் உள்ளிட்ட 15 இடங்களில் கடந்த 7 ஆம் தேதி முதல் மேற்கொண்டு வந்த சோதனையில் குற்றவியல் ஆவணங்கள், டிஜிட்டல் பதிவுகள் மற்றும் சொத்து ஆவணங்களை கைப்பற்றி இருப்பதாக அமலாக்கத் துறை இன்று (ஏப்ரல் 11) தெரிவித்துள்ளது.
அமலாக்கத் துறை தமது சமூக வலைத்தள பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், '' சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் Truedom EPC India Pvt Ltd மற்றும் அந்த நிறுவனத்துக்கு தொடர்புடைய முக்கிய நபர்களின் இடங்களில் கடந்த 7 ஆம் தேதி சோதனை நடவடிக்கைகளை அமலாக்கத்துறை மேற்கொண்டது. இதில் பல்வேறு குற்றவியல் ஆவணங்கள், டிஜிட்டல் பதிவுகள் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அருண் நேருவின் இரண்டு நிறுவனங்களிலும் சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சில ஆவணங்களை கைப்பற்றினர். மேலும் கே.என். ரவிச்சந்திரன் இடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இரு நிறுவனங்களி்ன் இயக்குநரான தீபக் இளங்கோவனை அபிராமிபுரம் பகுதியில் உள்ள கே.என்.ரவிச்சந்திரன் இல்லத்திற்கு வரவழைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
ED, Chennai has conducted search operations across Chennai, Trichy and Coimbatore on 07/04/2025 under the provisions of the PMLA, 2002 at 15 premises associated with M/s Truedom EPC India Pvt Ltd and its key personnel. During the search operations, various incriminating…
— ED (@dir_ed) April 11, 2025
நேற்று முன்தினம் நடந்த சோதனையின்போது அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் அவர்களின் வாகனத்தில் ஏற்றி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அழைத்துச் சென்று 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். பிறகு மீண்டும் அவரது அபிராமிபுரம் இல்லத்திற்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் மீண்டும் சோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: தேஜகூ கூட்டணியில் மீண்டும் அதிமுக! 2026-ல் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி தான் என அமித் ஷா அறிவிப்பு!
காற்றாலை மின்சார நிறுவனத்துக்காக வாங்கப்பட்ட கடன் தொகை, மோசடியாக வேறு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிபிஐ பதிந்துள்ள வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் கே.என்.நேரு, அவரின் சகோதரர் ரவிச்சந்திரன், அவரது மகன் அருண் நேரு ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியதுடன், விசாரணையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்