சென்னை: சென்னையில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மற்றும் மகனுக்கு தொடர்புடைய 10 இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அலுவலர்கள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, அடையாறு, தேனாம்பேட்டை, சிஐடி காலனி, எம்.சி.ஆர் நகர், ஆர்.ஏ.புரம் உள்ளிட்ட ஏழு இடங்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள் துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினருடன் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என். ரவிச்சந்திரன், கே.என். நேருவின் மகன் அருண் ஆகியோருக்கு தொடர்புடைய டி.வி.எச் (TVH) எனப்படும் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் மின் உற்பத்தி செய்யப்படும் நிறுவனங்கள் என அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் இன்று (ஏப்ரல் 7) காலை முதல் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த 2018-ஆம் ஆண்டு எஸ்.பி.கே, டி.வி.எச் நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத பல கோடி ரூபாய் பணமும், தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் கைப்பற்றப்பட்ட இந்த ஆவணங்கள் அனைத்தும் அமலாக்கத்துறைக்கு அனுப்பப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் அமைச்சர் நேருவின் சகோதரர் கே.என் ரவிச்சந்திரன் நடத்தி வரும் சென்னை ஆர்.எ.புரம் பகுதியில் உள்ள டி.வி.எஸ் மின் உற்பத்தி நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிரடியாக சோதனை நடத்தி வருகிறது.
அதேபோல் ஆழ்வார்பேட்டையில் உள்ள அமைச்சர் கே.என் நேருவின் மகன் அருணுக்கு தொடர்புடைய நிறுவனத்திலும், சென்னை சிஐடி காலணியில் பிரகாஷ் என்பவர் இல்லத்திலும், அடையாறு காந்தி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தாது மணல் முறைகேடு: சிபிஐ சோதனை குறித்து மத்திய அரசு 'புதிய தகவல்'!
மேலும், சென்னையில் நடைபெறும் இந்த சோதனையில் 10 இடங்களிலும், சிஆர்பிஎப் (CRPF) மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை காவலர்களுடன் அமலாக்கத்துறை அலுவலர்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையின் முடிவில் தான் எதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டது? முக்கிய ஆவணங்கள், ரொக்கம், தங்கம் போன்று ஏதாவது கைப்பற்றப்பட்டதா? சட்டவிரோத பண பரிமாற்றம் நடத்தப்பட்டதற்கான முகாந்திரம் ஏதாவது உள்ளதா? என்பது குறித்த முழுவிவரங்கள் வெளியாகும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, கோயம்புத்தூரில் உள்ள கே.என்.நேருவின் சகோதரர் மணிவண்ணன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, டி.வி.எச் கட்டுமான நிறுவனம் கோயம்புத்தூர் - திருச்சி சாலை, அவிநாசி சாலை உள்பட பல்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி விற்பனை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.