சென்னை: பூந்தமல்லி- போரூர் இடையேயான ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயிலின் 3ஆம் கட்ட சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.
சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் 118.9 கி.மீ தூரத்திற்கு 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி இடையிலான 26.1கிலோ மீட்டர் தூரத்திலான 4வது வழித்தடத்தில் முதற்கட்ட சோதனை ஓட்டம் பூந்தமல்லி பணிமனை முதல் முல்லைத் தோட்டம் வரை 2.5 கி.மீ தொலைவுக்கு 25 கி.மீ வேகத்தில் நடைபெற்றது, 2ஆம் கட்ட சோதனை ஓட்டம் பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9.5 கி.மீ தொலைவுக்கு 30-35 கி.மீ வேகத்திலும் மேற்கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தற்போது மூன்றாம் கட்ட சோதனை ஓட்டம் போரூர்-பூந்தமல்லி இடையே 9.5 கி.மீ தூரத்திற்கு 20-25 கி.மீ வேகத்தில் இயக்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இதுவரை பூந்தமல்லி பணிமனையில் தொடங்கி போரூர் நோக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது அதாவது இதற்கு முன்பாக நடைபெற்ற இரண்டு கட்ட சோதனையும் UP Line ல் நடைபெற்றது. நிலையில் இந்த முறை மறு மார்க்கமாக போரூரில் இருந்து பூந்தமல்லி பணிமனை நோக்கி மூன்றாம் கட்ட சோதனை ஓட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி மூன்றாம் கட்ட சோதனை என்பது Down line ல் போரூரில் இருந்து பூந்தமல்லி வரை நடைபெற்றது.
இதனை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் தொடங்கி வைத்தார். Down line ல் நடைபெறும் முதற்கட்ட சோதனை ஓட்டம் என்பதால் 20 முதல் 25 கிலோமீட்டர் வேகத்திலேயே இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இதையும் படிங்க: உலகின் உயரமான செனாப் ரயில் பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி - அதன் சிறப்புகள் என்ன தெரியுமா?
சோதனை ஓட்டம் எதிர்பார்த்தபடி வெற்றிகரமாக நடைபெற்றதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடுத்த கட்டமாக மீண்டும் இதே வழியில் சோதனை ஓட்டம் நடைபெறும் பொழுது 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்வதற்கான சோதனைகளும் மேற்கொள்ளப்படும்.
இந்நிகழ்வில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், நிதி இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, அமைப்புகள் மற்றும் இயக்கத்தின் இயக்குநர் மனோஜ் கோயல், தலைமைப் பொது மேலாளர்கள் ராஜேந்திரன், (மெட்ரோ ரயில், சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு) அசோக் குமார், (வழித்தடம் மற்றும் உயர்மட்ட கட்டுமானம்), ரேகா பிரகாஷ், (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), ஆலோசகர் ராமசுப்பு மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்களும் பங்கேற்றனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.