தருமபுரி: மொரப்பூர் ரயில் திட்டம் செயல்படுத்தப்படாமல் இருப்பதற்கு மத்திய அரசு தான் காரணம் என தருமபுரி எம்பி ஆ.மணி குற்றம்சாட்டியுள்ளார்.
தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மணி இன்று (ஏப்ரல் 10) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ''முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் சார்ந்த மாநிலத்தின் நலனிற்காக மட்டும் செயல்படுபவராக இல்லாமல், நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாப்பவராக முதலமைச்சர் பதவிக்கே புதிய அர்த்தத்தை கொடுத்திருக்கிறார்.
முதலமைச்சர் தனது சட்டப்போராட்டதால் மீட்டெடுத்த 10 மசோதாக்களில் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயரை வைக்கும் மசோதாவும் ஒன்று. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அந்த மசோதாவையும் பாதுகாத்ததன் மூலம் கட்சி எல்லைகளை கடந்து உண்மையான தலைவர் என்று நிரூபித்திருக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டதே மாநில உரிமை, மாநில சுயாட்சிக்காக தான். ஆனால் மாநில நலனுக்கு திமுக என்ன செய்துவிட்டது? என அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அவதூறு பரப்பி வருகின்றனர்'' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ''கடந்த வருடம் செப்டம்பர் மாதம் நடைபெற்ற திமுக பவள விழா மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "எல்லா அதிகாரமும் கொண்டவையாக மாநில அரசுகளை மாற்றும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முயற்சிக்கும் சட்ட முன்னெடுப்புகளை திமுக நிச்சயமாக, உறுதியாகச் செய்யும்" என்று அறிவித்து, 6 மாதங்களில் அதற்கான முதல் வெற்றியைப் பெற்றுள்ளார்.
அரசியலமைப்பில் இதுநாள் வரை ஆளுநர்களுக்கு இல்லாத "காலக்கெடு" இந்த தீர்ப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் உரிமையை கலைஞர் பெற்றுக் கொடுத்ததைப் போல, ஆளுநர்களின் அடாவடிக்கு கடிவாளம் போட்டு மற்றுமொரு மாநில சுயாட்சி அதிகாரத்தை இந்திய மாநிலங்களுக்கு மு.க.ஸ்டாலின் பெற்றுத் தந்திருக்கிறார்.
தமிழ்நாட்டுப் பல்கலைக்கழக துணை வேந்தர்களாக ஆர்எஸ்எஸ், பாஜக கொள்கை கொண்டவர்களை நியமித்து, தமிழ்நாட்டு கல்வியை ஆளுநர் ரவியின் மூலம் காவிமயமாக்க துடித்த ஒன்றிய அரசிற்கு, உச்ச நீதிமன்றம் பெரும் இடியை இறக்கியுள்ளது. 10 மசோதாக்களும் நடைமுறைக்கு வருவதால் மாநில முதலமைச்சரே வேந்தராகியுள்ளார்.
இந்திய அரசியல் வரலாற்றில் ஆளுநர் அல்லது குடியரசு தலைவரின் ஒப்புதல் இல்லாமலேயே 10 மசோதாக்களை சட்டப்பூர்வமாக செல்லுபடியாக்கிய சரித்திரத்தை திமுக அரசு படைத்துள்ளது. சட்டப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது ஒரு ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசியல் சாசன சட்டப்பிரிவு 200ல் ''AS SOON AS POSSIBLE'' என்கிற வார்த்தையையே உருவாக்கினார்கள். ''AS SOON AS POSSIBLE'' வேண்டும் என்பது, சட்டப்போராட்டம் மூலம் முதல்வர் பெற்றுக் கொடுத்திருக்கிறார்'' என எம்பி மணி தெரிவித்தார்.
தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டம்
அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் மொரப்பூர் ரயில் திட்டம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், '' தருமபுரி மொரப்பூர் ரயில் திட்ட பணிகளுக்கு உண்டான பணிகளை எனக்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மருத்துவர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார். அந்த திட்டத்திற்கு தற்பொழுது செயல் வடிவம் கொடுக்கும் வகையில் என்னுடைய பணிகள் இருக்கும் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் மத்திய அரசு அதற்கு இன்றைக்கு ஒரு பைசாவை கூட நிதி வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளது. அந்த திட்டம் செயல்படுத்தாமல் இருப்பதற்கு மத்திய அரசு காரணம்'' என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்