தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேஷம்பாடி கிராமத்தில் புறம்போக்குப் பகுதிகளில் வசித்த மக்களுக்கு உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மாற்று இடம் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அய்யன் திருவள்ளுவர் நகர் என்ற பெயரில் ஒவ்வொருவருக்கும் தலா 560 சதுர அடியில் மொத்தம் 2 ஆயிரம் குடியிருப்புகள் அமையும் வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 1,200 குடியிருப்புகள் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும், 800 வீடுகள் பட்டியலின மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தில் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு பங்களிப்பாக வழங்கும் மொத்தம் ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் நிதியுதவி மூலம் அவரவர்கள் விருப்பம் போல வீடு கட்டிக் கொள்வதற்காக முதற்கட்டமாக 261 பயனாளிகளுக்கு வீடு கட்டுமான பணிக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 18) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீடு கட்டுமானப் பணி ஆணைகளை வழங்கினார். இதில் மாநிலங்களவை உறுப்பினரும், தஞ்சாவூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான எஸ். கல்யாணசுந்தரம், கும்பகோணம் எம்.எம்.ஏ.சாக்கோட்டை க. அன்பழகன், முன்னாள் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் மற்றும் 200-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டனர்.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம் பேசும் போது, ''கும்பகோணம் மாநகர பகுதி நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் வசித்தவர்களின் வீடுகள் இடித்து அகற்றப்பட்டு மாற்று இடமாக இது தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு பல்வேறு பணிகள் காரணமாக தாமதமாகியுள்ளது. ஆனால் இது புரியாமல் பலர் ஆத்திரப்பட்டும், கோபப்பட்டும் விதண்டாவதமாக பேசுகின்றனர்.
எல்லாமே உடனே கிடைச்சுடுமா? கல்யாணம் ஆனா கூட 10 மாதம் பொறுத்திருந்தா தான் குழந்தை பிறக்கும். கல்யாணம் ஆன அன்றைக்கே குழந்தை பிறந்தா அது வேறு விதமாக தான் இருக்கும். கல்யாணத்திற்கு முன்பே காதலிச்சு, கர்ப்பிணி ஆகியிருந்தால் தான் அப்படி குழந்தை பிறக்கும்.'' என்று அமைச்சர் கோவி. செழியன் முன்னிலையில் பேசினார்.
இதையும் படிங்க: ''அதிமுக, பாஜக வெற்றி கூட்டணியா?" என்ற கேள்விக்கு "இன்று விடுமுறை" என்ற ஓ.பன்னீர்செல்வம்!
பெண் பயனாளிகள் அதிகளவில் கலந்து கொண்ட ஒரு அரசு நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசியதால் பெண் பயனாளிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து முகம் சுழித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்