சென்னை: வனத்துறை அமைச்சரும், தி.மு.க துணை பொதுச்செயலாளராக பதவி வகித்த பொன்முடி மீது கட்சி நேற்று நடவடிக்கை எடுத்தது. விலைமாதர்கள் குறித்து மோசமாக கருத்து தெரிவித்து அவர் பேசிய வெளியான வீடியோ ஒன்று இணையதளத்தில் வேகமாகப் பரவியது.
இதனையடுத்து தி.மு.க., தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பொன்முடி-ஐ துணைப் பொதுச்செயலாளர் பதிவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். அவ்வண்ணமே, தி.மு.க மாநிலங்களவை உறுப்பினரான திருச்சி சிவாவுக்கு அந்த பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில், தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து அமைச்சர் பொன்முடி தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள் அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி நான் பேசிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர், நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும், “பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன். மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இவர் பேசிய சர்ச்சை கருத்துகளுக்கு உள்கட்சியினரே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தூத்துக்குடி தொகுதி தி.மு.க மக்களவை உறுப்பினரான கனிமொழி, எந்த காரணத்திற்காகப் பேசியிருந்தாலும், இப்படி கொச்சையான பேச்சுக்கள் கண்டிக்கத்தக்கது என்று தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
இதையும் படிங்க |
கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க சட்டப் பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் வெளியிட்ட கண்டன அறிக்கையில், விழுப்புரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில், இந்து மதத்தின் சைவ, வைணவத்தின் புனிதச் சின்னங்களுடன் ஒப்பிட்டு, அறுவெறுக்கத்தக்க வகையில் அமைச்சர் பொன்முடி பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவர் பேசியதை வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு மிக கேவலமாகப் பேசியுள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்திருந்தார்.
மேலும், டிடிவி தினகரன் உள்பட பலகட்ட அரசியல் தலைவர்கள் பொன்முடி பேச்சிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.