5 முறை முதலமைச்சர், 60 ஆண்டுகள் எம்எல்ஏ, 48 ஆண்டுகள் ஒரு கட்சியின் தலைவர் என்ற வரலாற்றுக்கு சொந்தக்காரரான கருணாநிதியின் பிறந்த தினம் இன்று....
'உடன்பிறப்புக்களே' என்ற ஒற்றை வார்த்தையில் லட்சோப லட்சம் தொண்டர்களை கட்டிப் போட்ட தளகர்த்தா, தான் உயிருடன் இருக்கும் வரையில் தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களுக்கு தோல்வியை மட்டுமே பரிசளித்த இந்தியாவின் ஒரே தலைவர், 50 ஆண்டுகளாக தமிழகத்தின் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் தன் நலத்திட்டங்களால் நிழலாகவும், நீட்சியாகவும் ஏதோ ஒரு வடிவத்தில் வாழ்ந்து கொண்டிப்பவர்.
'கருணாநிதி'... இந்த ஒற்றை பெயரை தவிர்த்து விட்டு தமிழக அரசியலை யாரும் எழுத முடியாது. அத்தகைய நீண்ட நெடிய அரசியல் வாழ்வுக்கு சொந்தக்காரரனான அவர், பேரறிஞர் அண்ணா, கர்ம வீரர் காமராஜர், செல்வி ஜெயலலிதா உள்ளிடோருக்கு இல்லாத சிறப்பை தன் அரசியல் வாழ்க்கையில் கொண்டிருப்பவர்.
1957 ஆம் ஆண்டில் இருந்து தேர்தல் களத்தை சந்திக்கும் அவரை, தோல்வி இதுவரை தொட்டுக் கூட பார்த்ததில்லை. 1957 முதல் 2016 வரை போட்டியிட்ட தேர்தலில் எல்லாம் வெற்றியை மட்டுமே சுவைத்த ஒரே தலைவன். 1962-ல் அண்ணா காஞ்சிபுரத்திலும், 1967-ல் விருதுநகரில் காமராசரும், 1996-ல் பர்கூரில் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் தோல்வி அடைந்த நிலையிலும், கருணாநிதிக்கு வரலாறு அப்படியான எந்த இக்கட்டான சந்தர்ப்பத்தையும் கடைசி வரையிலும் வழங்கவில்லை. 1991-ல் ஒட்டுமொத்த திமுகவே தோல்வி அடைந்த நிலையிலும், துறைமுகம் தொகுதியில் தன்னுடைய வெற்றிக் கப்பலை நங்கூரமிட்டு நிறுத்தினார்.

45 வயதில் (1969) முதல் முறையாக தமிழக முதல்வரான அவர், தனது 87வது வயதிலும் (2011) தமிழக முதல்வராக இருந்துள்ளார் என்பதே அவரது தனிச்சிறப்பு. 19 ஆண்டு காலம் தமிழக முதல்வராக இருந்த ஒரே மனிதர் என்ற வரலாற்றுக்கு சொந்தக்காரரான அவர், தனது அரசியல் பயணத்தில் ராஜாஜியில் ஆரம்பித்து காமராசர், எம்ஜிஆர், ஜெயலிலிதா போன்ற ஜாம்பவான்களோடு மோதி களமாடியவர். இதில் சில முறை அவருக்கு வெற்றியும், பல முறை தோல்வியும் கிடைத்துள்ளது என்றாலும், உழைப்பு என்ற ஒற்றை சொல்லை மூலதனமாக்கி அவர் அரசியல் வாழ்க்கையில் நடைபோட்டு வந்ததால், இறக்கும் காலம் வரை தோல்வி அவரை பெரிதாக பாதிக்கவே இல்லை.
காலம் கருணாநிதிக்கு பல வாய்ப்புக்களை கொடுத்திருந்தாலும், அவர் சந்தித்த அரசியல் ஏற்றத்தாழ்வுகள், வேறு எந்த தலைவரும் சந்திக்காதது. 1952-ல் 'பராசக்தி' என்ற வரலாற்று காவியத்தில் தன்னுடைய அணுகுண்டு வசனத்தால் அகில இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தவர். அதே 1952-ல் 4 வயதாக இருந்த ஜெயலலிதாவோடு, 40 ஆண்டு காலம் அரசியலில் மோத வேண்டிய அரசியல் சூழலும் அவருக்கு ஏற்பட்டது.
திமுகவில் இருந்து எம்ஜிஆர் பிரிந்த பிறகு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் எண்ணிக்கை 11. இதில் 7 முறை அதிமுக வென்றுள்ளது. திமுக 4 முறை மட்டுமே வென்றுள்ளது. தொடர்ந்து 3 முறை தோல்வி அடைந்த பல கட்சிகள் இந்தியாவில் காணாமல் போன வரலாறு உண்டு. ஆனால், எத்தனை தோல்விகள் வந்தாலும், அதைப்பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தவர். தோல்விகளை தூர எறிந்துவிட்டு, தொண்டர்களுக்கு 'உடன்பிறப்பு கடிதம்' எழுதியதாலேயே அவரால் 90 வயதை கடந்தும் அரசியல் செய்ய முடிந்தது.
வெற்றியையும், தோல்வியையும் பெரிய வித்தியாசத்தோடு பார்க்காத அவரின் மனநிலையே, திருக்குவளையில் இருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அவரை அனுப்பி வைக்க காரணமாக இருந்தது என்றால் அது மிகையல்ல.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.