சென்னை: முருகன் மாநாட்டை தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தங்களால் நடத்த முடியும் எனவும், திமுகவிற்கு தமிழ்நாட்டை விட்டால் வேறு எங்கும் வாய்ப்பு கிடையாது என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் முருகன் மாநாட்டிற்காக மதுரை செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "மதுரையில் நடைபெறும் முருகன் மாநாட்டிற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகிறார்.
நாங்கள் அனைவரும் மிக உற்சாகமாக கலந்து கொள்ள சென்று கொண்டிருக்கிறோம். மதுரை என்றாலே சங்கம் வளர்த்த தமிழ், இதனால் நாங்கள் அனைவரும் அங்கு உற்சாகம் அடைவதில் எந்தவித மாற்று கருத்தும் இருக்கப் போவதில்லை. நாங்கள் மதுரையில் ஒன்று கூடினால் திமுகவினருக்கு ஏன் அச்சம் ஏற்படுகிறது? மதுரையில் ஆட்சி புரியும் மீனாட்சியும், முருகனும் எங்களுக்கு அருள் புரிந்து விடுவார்கள் என்று திமுகவினர் அச்சப்படுகின்றனர்" என்றார்
தொடர்ந்து பேசிய அவர், " நாங்கள் பயபக்தியோடு முருகன் மாநாட்டை நடத்துகிறோம். அமைச்சர் சேகர்பாபு போன்றவர்கள் பயத்துடன் முருகன் மாநாட்டை பார்க்கின்றனர். அரசியல் மாநாடாக இருந்தாலும் சரி, முருக பக்தர்கள் மாநாடாக இருந்தாலும் சரி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும், ஆன்மீகம் தழைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த மாநாட்டை நடத்துகிறோம்.
இந்த மாநாட்டிற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை என்பது எங்களுக்கு பலத்தை கொடுக்கும். நாங்கள் எப்போதும் முருகனை கும்பிடுபவர்கள். இதனால் முருகன் மாநாட்டை நடத்தினால் அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால், திமுகவினர் முருகன் மீது நம்பிக்கை இல்லை என கூறிவிட்டு முருகன் மாநாடு நடத்தியதால் மக்களுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எங்கள் மாநாடு மனிதத்துவம் உண்டு, மதவாதம் கிடையாது.
நாங்கள் நடத்தும் முருகன் மாநாட்டை பார்த்து அண்ணன் திருமாவளவன் கவலைப்பட வேண்டாம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பெருமைப்படும் அளவிற்கு பாலங்களை பிரதமர் திறந்து வைத்து வருகிறார். இதனால் மற்றவர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். 2026ஆம் ஆண்டு திமுகவும் அவர்கள் கூட்டணியும் ஓய்வு எடுக்கலாம், எங்களுக்கு நிச்சயம் வெற்றி வரும்.
முருகன் மாநாட்டை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் எங்கு வேண்டுமானாலும் நடத்தலாம், எங்களுக்கு அதிகமான இடத்தில் நடத்த வாய்ப்பு உள்ளது. திமுகவிற்கு தமிழ்நாட்டை விட்டால் வேறு எங்கேயும் நடத்த வாய்ப்பு இல்லை" என்றும் அவர் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.