சென்னை: தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எழுதிய 'தேசிய கல்விக் கொள்கை - 2020 எனும் மதயானை' நூல் வெளியீட்டு விழா இன்று (மே 17) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற கல்வி நிலைக்குழுத் தலைவருமான திக்விஜய சிங், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி கோபால கவுடா, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் மேனாள் இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் அருணாச்சலம், இந்து குழுமத்தின் இயக்குநர் ராம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், நாடாளுமன்ற கல்வி நிலைக்குழுத் தலைவருமான திக்விஜய சிங் பேசும்போது, ''மசோதாக்களை ஆளுநரிடம் அனுப்பி அவரிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. நான் மத்திய பிரதேச முதல்வராக இருந்த போதும் இது போன்ற ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டேன்.
ஆனால் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றமன்றத்தில் தமிழ்நாடு தொடுத்திருந்த வழக்குக்கு சிறப்பான நீதியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுள்ளார். அதற்கு அவருக்கு மிக்க நன்றி.
தேசத்தையே மாற்றும் வலிமையை கல்வி பெற்றுள்ளது. பெரும் நம்பிக்கையோடு தேசிய கல்வி கொள்கை எனும் மதயானையை விரட்ட போகிறீர்கள். உங்கள் நம்பிக்கையில் நாங்களும் பெரும் துணையாக இருப்போம்.
இதையும் படிங்க: தாய்மொழி 'ஹிந்தி'.. தமிழில் 93 மதிப்பெண்கள்! மாணவிக்கு 'காலை உணவு திட்டம்' செய்த மாயஜாலம்!
ஆர்எஸ்எஸ் இயக்கம் 100 வருடங்களை கடந்துள்ளது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் அவர்களுடைய எண்ணங்களுக்கு ஏற்ப கல்விக் கொள்கையை மாற்ற முயற்சி செய்து வருகிறார்கள். அரசியலமைப்பின் பல்வேறு பிரிவுகளை புதிய தேசிய கல்விக் கொள்கை மீறுகிறது.
வடஇந்தியாவில் பள்ளி மாணவர்களின் இடை நிற்றல் சதவீதம் அதிகமாகும் சூழலில், தமிழ்நாட்டில் மாணவர்களின் இடைநிற்றல் முழுவதுமாக ஜீரோவாக குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒரு மாணவன் கூட பாதி வகுப்பிலேயே இடைநிற்றல் செய்யவில்லை. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரான சாவித்திரிபாய் பூலே வின் வாழ்க்கை சரித்திர திரைப்படங்களை முதல்வர் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
பாஜக ஆளக்கூடிய மத்திய பிரதேசம் மாநிலத்தில் பல்வேறு பொறுப்புகளில் அவர்களுக்கு தேவையானவர்களையும், ஊழல் கறை படிந்தவர்களையும் பாஜகவினர் நியமித்து வருகிறார்கள். பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கங்களிடம் இருந்து இந்தியாவைக் காக்க வேண்டிய இக்கட்டான சூழலில் நாம் உள்ளோம்." என்று திக்விஜய சிங் பேசினார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.