திருவண்ணாமலை: திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழா திருவிழாவில், தீ மிதிக்கும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் காயமடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த 5-புத்தூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் அக்னி வசந்த விழா வெகு விமரிசையாக நடைபெற்று வந்தது. இந்த விழாவின் 21ஆம் நாளை முன்னிட்டு நேற்று (ஜூன் 20) காலையில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி, பாஞ்சாலி சபதம் நிகழ்வு மற்றும் துரியோதனனை வதம் செய்யும் காட்சியை ஆகியவற்றை நாடக கலைஞர்கள் தத்ரூபமாக நடித்து அசத்தினார்கள்.
அதனைத் தொடர்ந்து, நேற்று மாலை தீமிதி திருவிழாவிற்காக, திரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில் சுமார் 100 மீட்டர் தூரம் அளவிற்கு விறகுக் கட்டையால் தீயை மூட்டி ஏற்பாடு செய்தனர். அதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மஞ்சள் ஈர உடையில் காத்திருந்தனர். அப்போது, பாஞ்சாலியம்மன் சிலை இருந்த அக்னி கரகத்தை பக்தர் ஒருவர் சுமந்து கொண்டு, கோவிந்தா கோஷத்துடன் தீயில் இறங்கினார்.
இதையும் படிங்க: வால்பாறையில் தாய் கண்முன் சிறுமியை கவ்விச்சென்ற சிறுத்தை; மண்டை ஓடு மீட்பு.. சோகத்தில் வடமாநில தொழிலாளர்கள்! |
அப்போது, பக்தர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், அம்மன் சிரசு சிலையை சுமந்து சென்ற பக்தர் தடுமாறி, பூக்குழியில் இருந்த தீயில் விழுந்தார். அதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டனர். அந்த சம்பவத்தில், அம்மன் சிலையை சுமந்து வந்த அந்த பக்தருக்கு பயங்கர தீக்காயம் ஏற்பட்டது. அதேபோல, பின்னால் வந்த மேலும் சில பக்தர்களுக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டது.
பின்னர், பலத்த காயம் ஏற்பட்ட இரண்டு பக்தர்கள் மட்டும் 108 ஆம்புலன்ஸ் மூலம், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது, அந்த இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்ற இந்த திருவிழாவில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் அளிக்காததே இந்த விபத்து காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.