சென்னை: சுகாதாரத்துறையில் இருந்து 150 மருத்துவர்கள் பிரநிதித்துவம் அடிப்படையில், மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணி மேற்கொள்ள உள்ளதாக துணை மேயர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம், ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நேற்று முன்தினம் (மார்ச் 19) நடைபெற்றது. இதில், மேயர் பிரியா 2025-26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த நிதிநிலை அறிக்கையில் கல்வி, பொது சுகாதாரம், மருத்துவ சேவைகள் என பல்வேறு துறைகளிலும் சேர்த்து மொத்தம் 62 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. மேலும், ரூ.5,145.52 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதம், மேயர் பிரியா தலைமையில் இன்று (மார்ச் 21) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 96 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில், சென்னை மாநகராட்சி கீழ் உள்ள மருத்துவமனைகளில், மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதாக அமமுக மாமன்ற உறுப்பினர் கிரிதரன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த துணை மேயர் மகேஷ்குமார், “மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளதாக தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் கூறி வருகிறார்கள்.
இது தொடர்பான தகவலை மேயர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றனர். விரைவில் சுகாதாரத்துறையில் இருந்து 150 மருத்துவர்கள் பிரநிதித்துவம் அடிப்படையில், மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணி மேற்கொள்ள உள்ளனர்” என்றார்.
இந்த கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் குமரகுருபரன் மற்றும் நிலைகுழு, மண்டலக்குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பொதுமக்களின் நலனுக்காக 140 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 15 சமுதாய நல மருத்துவமனைகள், 3 மகப்பேறு மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் பொது மருத்துவம் மற்றும் கர்ப்பிணிகள் நலம், குழந்தைகள் நலம் போன்ற புறநோயாளிகளுக்கான சேவைகள் காலை 8 முதல் மாலை 3 மணி வரை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.