சென்னை: கல்லூரிக் கனவு திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் மாணவர்கள் உயர்கல்வி படிக்க இருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
"நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று மத்திய பணியாளர் தேர்வாணையத் தேர்வு, ரயில்வே தேர்வு, வங்கி தேர்வு ஆகியற்றில் வெற்றி பெற்ற மாணவர்களை பாராட்டும் விழா மற்றும் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான "கல்லூரிக் கனவு 2025" துவக்க விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெற்றது.
விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலந்து கொண்டு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயத்தை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து அரசுப் பள்ளி பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டி திட்டமான "கல்லூரிக் கனவு 2025" தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், கல்லூரிக் கனவு திட்ட கையேட்டினை அவர் வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "முதலமைச்சரின் கனவுத் திட்டமான கல்லூரிக் கனவு – 2025 திட்டத்தை துவங்கி வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். SSC, RRB மற்றும் IBPS ஆகிய போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டுவது மகிழ்ச்சியாக உள்ளது. 2K கிட்ஸ் உங்களுக்கு அட்வைஸ் பண்ணினால் சுத்தமாக பிடிக்காது என்று தெரியும்.
பள்ளிக்கூட படிப்பை முடித்து விட்டு, நீங்கள் எல்லாம் உயர்கல்விக்காக வெளி உலகத்துக்கு இப்போது தான் போக உள்ளீர்கள். உங்களை பத்திரமாக கையை பிடிச்சு அழைத்து போய், சரியான எதிர்காலத்தை அமைத்து கொடுக்க உருவான திட்டம் தான், இந்த கல்லூரிக் கனவு திட்டம். பல்வேறு சூழல்களால் உயர்கல்வி சேர தயங்குற மாணவர்கள் இருக்கின்றார்கள். அவங்களை கண்டுபிடித்து, உரிய வழிகாட்டுதல்களை கொடுத்து, கல்லூரியில சேர்த்து விடுவது தான், இந்த கல்லூரிக்கனவு திட்டத்துடைய ஒரே நோக்கம். அப்படி தான், கல்லூரி கனவு மூலமாக ஒவ்வொரு வருடமும் ஒரு லட்சம் மாணவர்களை நாம் உயர்கல்வி படிக்க வைக்கபோகிறோம்" என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பள்ளியில் படிக்கும் போது, 10 ஆம் வகுப்பு தேர்வு மிக, மிக முக்கியம். அது தான் உங்களுடைய வாழ்க்கைக்கு அடித்தளம் என்று உங்களுடைய பெற்றோர்கள், ஆசிரியர்கள் சொல்லி இருப்பார்கள். அடுத்து, பிளஸ் 2 போகிற போது, பிளஸ் 2 தான் உங்க வாழ்க்கையை மாற்றப் போகிறது என்று சொல்லியிருப்பர்கள். இப்போது, கல்லூரியில் ஒழுங்காக படித்தால் தான் வாழ்க்கையில் எல்லாமே கிடைக்கும் என்று கூறி உங்களை பயமுறுத்துவார்கள்.
இது ஏதோ உங்களை பயமுறுத்த மட்டுமே சொல்லுகின்ற விஷயம் கிடையாது. படிப்பு தான் உங்களுடைய வாழ்க்கையை மாத்துறதுக்கான ஒரே டர்னிங் பாய்ண்ட். இன்றைக்கு இவ்வளவு பேரு, காலேஜ் போக போகிறீர்கள். நூறு வருஷத்துக்கு முன்னாடி நிலைமை இப்படி இருந்ததா? என்றால் கிடையாது. உங்களுடைய பல பேருடைய தாத்தா, பாட்டி பள்ளிக்கூட வாசலையே மிதித்திருக்க மாட்டார்கள். பள்ளிக்கூட படிப்பையே தாண்டியிருக்க மாட்டார்கள்.
ஆனால், இன்றைக்கு அந்த நிலைமை மாறி இருக்கிறது. இன்றைக்கு இந்தியாவுலேயே அதிகம் பேர் உயர்கல்வி படிக்கின்ற மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்துள்ளது. அதற்கு திமுக ஆட்சியின் போது பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது தான் காரணம். முதலமைச்சர், அரசுப்பள்ளியில படித்து, உயர்கல்வி சேருகின்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம் என்று சிறப்பான திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த திட்டங்கள் மூலமாக அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேருகின்ற மாணவர்களுக்கு, மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் கல்வி ஊக்கத்தொகையை அளிக்கப்படுகிறது. உங்களில் பல பேருக்கு அந்த உதவித்தொகை கிடைக்க போகின்றது. வட இந்தியாவில் , தமிழ்நாடு மாதிரி எல்லா குழந்தைகளும் பள்ளிகளில் சேர்க்கப்படுவது கிடையாது. ஒருவேளை, அவர்கள் பள்ளிப் படிப்பை முடித்தாலும், கல்லூரிகளில் சேருகின்ற மாணவர்களோட சதவீதம் தமிழ்நாட்டுடன் ஒப்பீட்டு பாார்த்தால், மிக குறைவாக உள்ளது.
Gross Enrollment Ratio அதாவது, பள்ளிகளில் இருந்து உயர் கல்வியில சேருகின்ற மாணவர்களோட சதவீதம், தமிழ்நாட்டில் 52% என்ற அளவில் உள்ளது. ஆனா, ஒட்டுமொத்த இந்தியாவில் வெறும் 29% தான் உள்ளது. தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சியை இந்தியாவில் இருக்கக்கூடிய பிற மாநிலங்கள் அடைய வேண்டுமென்றால் இன்னும் 10, 15 வருடங்கள் ஆகும். தமிழ்நாடு கல்வி வளர்ச்சியில சிறப்பாக முன்னேற்றம் அடைந்துள்ளதற்கு முழுக் காரணம் திமுகவின் கடந்த கால ஆட்சி தான்.
உயர்கல்வி Admission-ஐ பொறுத்தவரை நுழைவுத் தேர்வே இருக்கக் கூடாது என்பது தான் தமிழக அரசின் ஒரே கொள்கை. புதிய கல்விக் கொள்கை மூலமாக, மருத்துவம், பொறியியல் மட்டுமல்ல கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கூட ஒன்றிய அரசு நுழைவுத் தேர்வை கொண்டு வரப் பார்க்கிறது. அதனால் தான், இந்த புதிய கல்விக் கொள்கையை முதலமைச்சரும், தமிழ்நாடு அரசும் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் உதவித்தொகையுடன் தங்கி படிக்கும் வசதியை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
நான் முதல்வன் போட்டித்தேர்வுகள் பிரிவு மூலமாக, இந்த வருடம், 50 தமிழ்நாட்டு மாணவர்கள் IAS, IPS தேர்வுகளில் வெற்றி பெற்று இருக்கின்றார்கள். SSC, RRB மற்றும் IBPS தேர்வுகளுக்கு ‘நான் முதல்வன்’ மூலமாக பயிற்சி பெற்ற மாணவர்கள், 58 பேர் வெற்றி பெற்றி உள்ளார்கள்" என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "கல்லூரிக் கனவு 2025 திட்டம் தமிழ்நாடு முதலமைச்சரின் கனவு திட்டம். பள்ளிப் படிப்பை முடித்ததும், உயர் கல்வியில் என்ன படிப்பது என்பதை தேர்வு செய்யவும், வேலைக்கு செல்லவும் உதவும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.