திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (70). இவரது மனைவி கனகா (65). தம்பதி இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களது மகன் ஆறுமுகம் அருகிலேயே வீடு கட்டி வசித்து வருகிறார். வயதான தம்பதியினர் தனியாக வசித்து வருவதை அறிந்த மர்ம நபர்கள் கடந்த மாதம் 31 ஆம் தேதி இரவு வீட்டின் கதவை தட்டியுள்ளனர்.
அப்போது வெளியில் வந்த மூதாட்டி கனகாவின் முகத்தில் மிளகாய் பொடி தூவி துணியால் முகத்தை மூடி, கட்டையால் சரமாரியாக அடித்துள்ளனர். இதில் காயமடைந்த கனகா கத்திக் கூச்சலிட்டதால் அவரது கழுத்தில் கிடந்த 4 சவரன் தங்க நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து மர்ம நபர் தப்பி ஓடியுள்ளார்.
இதனை அறிந்த அவருடைய மகன் ஆறுமுகம் ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மர்ம நபர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனியாக வசித்து வரும் மூதாட்டியிடம் மிளகாய் பொடி தூவி 4 சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் சுற்று வட்டார பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து கனகாவின் மருமகள் வசந்தியிடம் ஜோலார்பேட்டை போலீசார் விசாரித்தபோது வசந்தி முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வசந்தியை காவல் நிலையம் அழைத்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டபோது இதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
இதுகுறித்து போலீசார் வட்டாரத்தில் கூறும்போது, ''மாமியார் கனகா மற்றும் மருமகள் வசந்திக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. எனவே எப்படியாவது மாமியாரை பழிவாங்க வேண்டும் என்று மருமகள் வசந்தி திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி வசந்தியின் மாமன் மண்டலவாடி அடுத்த கவுண்டப்பனூர் பகுதியை சேர்ந்த திருப்பதி என்பவரது மகன் மைக்கேல்ராஜ் (21) கடந்த மார்ச் 31 ஆம் தேதியன்று நள்ளிரவில் கனகா வீட்டிற்கு வந்து மிளகாய் பொடி தூவியும், கட்டையால் அடித்தும் 4 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றது அம்பலமானது.
இதையும் படிங்க: கோர்த்துவிட்ட 'சாட்டை'... கழற்றி விட்ட சீமான்; பரபரப்பை கிளப்பும் பின்னணி!
இதைத் தொடர்ந்து மூதாட்டி கனகாவிடம் பறித்துச் சென்ற 4 சவரன் தங்க நகையை மைக்கேல்ராஜிடம் இருந்து பறிமுதல் செய்த போலீசார் கொள்ளைக்கு துணைபோன வசந்தி மற்றும் கொள்ளையன் மைக்கல்ராஜை கைது செய்தனர். பின்னர், இருவரையும் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மூதாட்டி முகத்தில் மிளகாய் பொடி தூவி 4 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மருமகளே சிக்கிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்