- BY சீனிவாசன்
கோவை: மருதமலை அடிவாரத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேற்குப் பகுதியில் கடந்த 17 ஆம் தேதி ஒரு தாய் யானையும், அதன் குட்டியும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் நின்று கொண்டு இருப்பதாக கோவை வனத்துறையினருக்கு தெரிய வந்தது. இதையடுத்து வனப் பணியாளர்கள் அந்த யானைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தாய் யானை உடல்நலக் குறைவு காரணமாக தரையில் படுத்து விட்டது. இதனால் குட்டி யானை செய்வதறியாது பரிதவித்து நின்றது. வனத்துறை உயரதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் கால்நடை மருத்துவ குழுவினரும், கோவை வனக் குழுவினரும் இணைந்து தாய் யானையை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இது குறித்த தகவல் நமது ஈ டிவி பாரத் குழுவினருக்கு கிடைத்ததை அடுத்து பாரதியார் பல்கலைக்கழகத்தின் பின்புறம் உள்ள வனப்பகுதிக்கு சென்றோம்.
அடர்ந்த காடு போன்று அல்லாமல் ஓரளவு மரங்களும் ஆள் உயர புற்களும் வளர்ந்து இருந்த பகுதி வழியாக அங்கு சென்று பார்த்த போது, குட்டி யானை அதன் தாயிடம் யாரையும் நெருங்க விடாமல் விரட்டிக் கொண்டிருந்தது. பெண் யானைக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்கள் சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து வனத் துறை உயர் அதிகாரிகளுக்கு இது குறித்து களத்தில் இருந்த வனச்சரகர் போனில் தகவல் சொல்ல, அவரின் உத்தரவின் பேரில் அப்பகுதிக்கு ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து ஒரியன் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டது.

தொடர்ந்து அந்த குட்டி யானையை வனத் துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர். இதையடுத்து படுத்துக் கிடந்த தாய் யானையை நிற்க வைத்து சிகிச்சை அளிப்பதற்காக, கும்கி யானை உதவியுடன் கிரேன் மூலம் தூக்கி நிறுத்தப்பட்டது. பின்னர் உணவு மற்றும் மருந்துகள் அளித்து அந்த யானைக்கு வன கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நான்காவது நாளான செவ்வாய்க்கிழமை உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு வன கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
அப்போது சோர்வாக காணப்பட்ட யானைக்கு நரம்பு வழி சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது ஓரளவு தண்ணீரை குடித்த அந்த யானை, சிறிதளவு பழங்களை உட்கொண்டது. பின்னர் செயற்கையாக அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிக்குள் கிரேன் மற்றும் கும்கி யானை உதவியுடன், அந்த பெண் யானையை இறக்கி ஹைட்ரோ தெரபி என்ற சிகிச்சையை வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர் அளித்தனர். ஆனால் சில மணி நேரங்களிலேயே காட்டு யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
அந்த யானையின் உயிரிழப்பிற்கு மாரடைப்பு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்த பெண் யானையின் உடலை வன கால்நடை மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்தனர். அப்போது அந்த யானையின் வயிற்றில் இறந்த நிலையில் 12 முதல் 15 மாதங்களாக ஆண் யானையின் சிசு இருப்பதை பார்த்த வனப் பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், சுமார் 5 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை வெளியே எடுத்த போது நம்மாலும் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை.

யானையின் உடற்கூராய்விற்கு பின்னர் வன கால்நடை மருத்துவர் சுகுமார் நம்மிடையே பேசுகையில், ‘‘உயிரிழந்த பெண் யானைக்கு 16 முதல் 17 வயது இருக்கலாம் என கணிக்கிறோம். உடல் உறுப்புகளை ஆய்வு செய்ததில் யானையின் இதயம், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை பாதிக்கப்பட்டு இருந்தது. வயிற்று பகுதி காலியாக இருந்தது. நேற்று யானைக்கு தந்த சில பழங்கள் மட்டுமே வயிற்றில் இருந்தன. அதன் சிறுகுடலில் சரியாக ஜீரணம் ஆகாத பழங்கள் இருந்தன. பெருங்குடல் மற்றும் மலக்குடலில் இருந்த சாணத்தில் பிளாஸ்டிக் பைகள் மற்றும் அலுமினிய பாயில்கள் இருந்தன. கர்ப்பப் பையில் 12 முதல் 15 மாத வயது மதிக்கத்தக்க ஆண் சிசு இருந்தது.
உடலின் மேல் பகுதியில் வேறு எந்த காயமும் இல்லை. நுண்ணுயிர் தொற்று ஏற்பட்டு, அதன் காரணமாக உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு நச்சுத்தன்மை அதிகரித்து இந்த யானை உயிரிழந்துள்ளது. உடல் உறுப்பில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு, யானைக்கு ஏற்பட்ட தொற்று குறித்து அறியப்படும். உயிரிழந்த யானை மருதமலை அடிவாரத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் அதிகமான பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட்டுள்ளது. சுத்தமான பிளாஸ்டிக்கள் சாணம் வழியாக வெளியே வந்துவிடும். ஆனால் பிளாஸ்டிக் உடன் கெட்டுப் போன உணவுகள் மற்றும் கெமிக்கல் உள்ள பொருட்களை சாப்பிட்டால், அதில் உள்ள கிருமிகள் மூலம் யானைக்கு உடல்நலம் பாதிக்க வாய்ப்புள்ளது.
இந்த நோய் தொற்று குப்பைக் கிடங்கில் இருந்த கெட்டுப் போன உணவுகளை சாப்பிட்டதால், வந்திருக்க கூடும். வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட சிசு வண்டலூருக்கு ஆராய்ச்சிக்காக அனுப்பி வைக்கப்படும். யானையின் வயிற்றில் குட்டி இருப்பதை கண்டறிய வாய்ப்பில்லை. அந்த அளவிற்கு ஸ்கேன் செய்யும் அதி நவீன வசதிகள் நம்மிடம் இல்லை. யானை பொதுவாகவே உடல் நிலை மோசமான பின்னரே, வனத்தை விட்டு மனிதர்கள் உதவியை நாடி வரும். ஹைட்ரோதெரபி சிகிச்சை யானையின் இறுக்கத்தை குறைத்து, புத்துணர்ச்சி அளிக்கவே செய்யப்பட்டது. உள் உறுப்புகள் ஆதி தீவிரமாக பாதிக்கப்பட்டு இருந்ததால் தான், அந்த யானையை எங்களால் காப்பாற்ற இயலவில்லை’’ என்றார் கவலை தோய்ந்த முகத்துடன்.

இதையடுத்து நம்மிடம் பேசிய கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், "சோமையம்பாளையம் ஊராட்சி மாநகராட்சி உடன் இணைக்கப்பட உள்ள நிலையில், இந்த குப்பைக் கிடங்கை வெள்ளலூருக்கு இடமாற்றம் செய்ய உள்ளார்கள். இந்தப் பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டு, யாரும் செல்ல முடியாத அளவிற்கு சுற்றிலும் வேலி அமைக்கப்படும்" என்றார்.
யானைகள் தங்கள் நாளின் கிட்டத்தட்ட 80 சதவீத நேரத்தை உணவு தேடுவதிலும், சாப்பிடுவதிலும் செலவு செய்யும். யானைகள் ஒவ்வொரு நாளும் 150 முதல் 200 கிலோ வரை உணவுகளை உட்கொள்கின்றன. தாவர உண்ணிகளான யானைகள் பல்வேறு வகையான தாவரங்களை உண்கின்றன. இதன் விளைவாக அவற்றின் சாணம் விதைகளால் நிறைந்துள்ளது. இந்த விதைகளுக்கு நல்ல முளைப்பு திறன் இருப்பதால், தாவரங்களை வளரச் செய்வதுடன் பல்லுயிர் பெருக்கத்திற்கும் உதவுகின்றன. ஆனால் கோவை மருதமலை அடிவாரத்தில் உள்ள பெரும்பாலான யானைகளின் சாணங்களில் விதைகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் கழிவுகளும், குப்பைகளும் நிறைந்துள்ளன.
இதற்கு மருதமலை கோயிலை சுற்றி உள்ள பகுதிகளிலும் அடிவாரத்தில் வனப் பகுதியை ஒட்டி சோமையம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் குப்பைக் கிடங்கு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குப்பைக் கிடங்கில் கொட்டப்படும் உணவு கழிவுகளை காட்டு யானை, மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உட்கொண்டு வருகின்றன. இரவு பகல் பாராமல் வனவிலங்குகள் இந்த குப்பைக் கிடங்கில் உணவு தேடுவதை வழக்கமாக கொண்டுள்ளன. வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள இந்த குப்பைக் கிடங்கினால் சுற்றுச்சூழலுக்கும், வன விலங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும், இந்த குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் சூழலியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார்களும் அளிக்கப்பட்டன.
மேலும் குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்யக் கோரி வனத்துறை சார்பில் ஊராட்சி நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும் மாற்று இடம் கிடைக்காத காரணத்தில் ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து அப்பகுதியிலேயே குப்பைகளை கொட்டி வந்தது. இந்த நிலையில், தொடர்ச்சியாக அந்த குப்பைக் கிடங்கில் குட்டியுடன் உணவு தேடி சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்த பெண் யானை உயிரிழந்ததும், அதன் வயிற்றில் சுமார் 5 கிலோ அளவிற்கு பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கோயம்புத்தூர் வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளையின் செயலாளர் சண்முக சுந்தரம் நம்மிடம் பேசுகையில், "மருதமலை மற்றும் சோமையம்பாளையம் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மருதமலை அடிவாரத்தில் கொட்டப்பட்டு வந்தது. இது தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளாக பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததே, பெண் யானையின் உயிரிழப்பிற்கு காரணம். இதேபோல மருதமலை கோயிலில் சேகரிக்கப்படும் குப்பைகள், அருகே உள்ள வனப்பகுதியில் கொட்டப்பட்டு வருகின்றன.
இவற்றிலும் காட்டு யானைகள் உணவு தேடுவதை வழக்கமாக கொண்டுள்ளன. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருதமலை பகுதியை ஜீரோ பிளாஸ்டிக் மண்டலமாக அறிவித்து, அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிக்க வேண்டும்" என்றார்.
இந்த குப்பைக் கிடங்கின் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான யானை சாணங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் இருப்பது தெரிய வந்திருப்பதால், மேலும் பல யானைகள் பாதிக்கப்பட்டு இருக்கும் என நம்மிடம் கவலை தெரிவித்த ஓசை அமைப்பின் தலைவர் காளிதாஸ், "யானை என்பது ஆதார உயிரினம். யானையினால் காட்டிற்கு பல்வேறு பயன்கள் ஏற்படுகின்றன. காட்டின் உயிர்ப்பை காட்டுவதற்கு யானை சாணத்திற்கு முக்கிய பங்குண்டு. யானைகளின் சாணத்தில் பிளாஸ்டிக் இருப்பது யானைகளுக்கு மட்டுமின்றி, உயிர் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். மலை மற்றும் வனப் பகுதியை ஒட்டி குப்பை கழிவுகள் உள்ளாட்சி அமைப்புகளால் கொட்டப்படுவதை தடுக்க வேண்டுமென கடந்த சில ஆண்டுகளாக சுற்றுச்சூழல் அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
ஆனால் இன்று வரை அந்த அவலம் தொடர்ந்து வருகிறது. அதன் விளைவு தான் இந்த பேருயிர் இழப்பிற்காக காரணம். இதே போல இன்னும் எத்தனை யானைகள் பாதிக்கப்பட்டு உள்ளன? இறந்துள்ளன? என்பது தெரியாது. குப்பைகளை சாப்பிடும் யானைகள் ஒரே நேரத்தில் இறந்து போகாது. இதனால் என்ன விளைவு ஏற்பட்டுள்ளது? என்பதை கண்டறிய வேண்டும். இதனை தடுக்க வேண்டும். இப்படி குப்பைகளை வனப் பகுதியை ஒட்டி கொட்டுவது சட்டவிரோதம். குப்பை மேலாண்மை சட்டப்படி எங்கும் குப்பைகளை, கழிவுகளை கொட்டக்கூடாது. அதை முறைப்படி மேலாண்மை தான் செய்ய வேண்டும்.
அதை செய்யக் கூடிய உள்ளாட்சி அமைப்புகள் குப்பைகள் கொட்டுவதை நிறுத்த வேண்டும். இல்லையெனில் இந்திய காட்டுயிர் பாதுகாப்பு சட்டம் 1972ன் படி காட்டுயிர்களுக்கு ஊறு விளைவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உள்ளாட்சி அமைப்புகள் குப்பைகளை கொட்டுவதை தடுக்க வேண்டும். இது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் முயன்று கொண்டு இருக்கிறோம்" என்றார்.
யானைகளை பாதிக்கும் ‘குரோனிக் பாய்சன்’
யானைகளை பாதிக்கும் ‘குரோனிக் பாய்சன்’ என்பதற்கு நாள்பட்ட விஷம் என அர்த்தம். காட்டு யானைகள் தொடர்ச்சியாக பூச்சிக்கொல்லி மருந்துகள் அடித்த விளை பயிர்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளில் உள்ள கெட்டுப் போன உணவுகள் ஆகியவற்றை உண்பதால் தொற்று பாதிப்பு ஏற்படும். இவை மெல்ல மெல்ல யானையின் உடல் நலத்தை பாதித்து, உயிரிழப்பு ஏற்பட காரணமாக அமையும் என வனத்துறையினர் கூறுகின்றனர்.
குப்பைக் கிடங்கில் தொடர்ச்சியாக உணவுகளை சாப்பிட்ட யானைகளுக்கு குரோனிக் பாய்சன் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் அதனை கண்டறிய வனத் துறையினர் முயற்சி எடுக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். யானையின் சாணத்தில் ஒரு காட்டையே உருவாக்கும் சக்தி உள்ளது. யானைகள் உட்கொள்ளும் விதைகள், கொட்டைகள் பாதி செரித்தும் செரிக்காமலும் இருப்பதால் சாணத்தின் மூலம் மரங்கள் முளைக்கும், அது செல்லும் பாதையில் காட்டையே உருவாக்கும் திறன் உள்ளது.
ஆனால் மருதமலை பகுதியில் உள்ள யானைகளின் சாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் மட்டுமே இருப்பதும், அந்த பிளாஸ்டிக் பொருட்களுக்கு முளைக்கும் திறன் இருந்திருந்தால் மருதமலை பகுதி முழுவதும் பிளாஸ்டிக் காடுகளாக காட்சி அளித்திருக்கும் என்பதற்கு இந்த யானையின் மரணமே சான்றாக உள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.