திருநெல்வேலி: திருநெல்வேலி, மாநகராட்சிக்குட்பட்ட பாளையங்கோட்டை பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான நீரேற்று நிலையம் உள்ளது. இந்த பகுதியில் இருந்து பல்வேறு வார்டுகளுக்கு குடி தண்ணீர் லாரிகள் மூலம் கொண்டு செல்லும் நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வார்டு 34 ஆம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
லாரி ஓட்டுநருக்கு ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொலைபேசி மூலம் அழைத்தும் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் நேரில் வந்து பார்த்துள்ளனர்.
அப்போது அங்குள்ள லாரி ஓட்டுநர் மற்றும் ஐந்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வட்டமாக அமர்ந்து சீட்டு விளையாடி உள்ளனர். இதனைக் கண்ட திமுக நிர்வாகியும், 7வது வார்டு கவுன்சிலருமான சுண்ணாம்பு மணி என்பவர், '' எங்களுக்கு அங்கே குடிக்க தண்ணீர் இல்லை, ஆளுங்கட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கோடு இப்படி சீட்டு விளையாடுகிறீர்களா? என பேசி கொண்டே ஊழியர்கள் சீட்டு விளையாடியதை தனது மொபைலில் வீடியோ எடுத்துள்ளார்.
இந்நிலையில், மூன்று மாதங்களுக்குப் பிறகு அந்த வீடியோவை இன்று (ஏப்ரல் 10) திடீரென சுண்ணாம்பு மணி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
முன்னதாக, சம்பவத்தன்று இனிமேல் இது போன்று நடந்து கொள்ள மாட்டோம் என ஊழியர்கள் வருத்தம் தெரிவித்ததாகவும் அதனால் வீடியோவை வெளியிடாமல் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஊழியர்கள் தொடர்ந்து இது போன்று நடந்து கொள்வதன் காரணமாக தற்போது இந்த வீடியோ காட்சிகளை சுண்ணாம்பு மணி வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "கிரிண்டர் செயலியை தடை செய்க" - தமிழ்நாடு அரசுக்கு சென்னை காவல் ஆணையர் அருண் கடிதம்!
பட்டப் பகலில் பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் அதுவும் மக்களின் தாகத்தை தீர்க்கக்கூடிய முக்கியமான துறையான குடிநீர் துறையில் இருக்கும் ஊழியர்கள் இதுபோன்ற அலட்சியமாக சீட்டு விளையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்
இது குறித்து மாநகராட்சியின் பாளையங்கோட்டை மண்டல அதிகாரிகளை ஈடிவி பாரத் சார்பில் தொடர்பு கொண்டு கேட்ட போது, ''இது தொடர்பான புகார் எங்களுக்கு வந்துள்ளது. தீவிரமாக விசாரித்து வருகிறோம். வரும் செவ்வாய்க்கிழமை அன்று இந்த புகார் குறித்து சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் விசாரணை நடத்த இருக்கிறோம். இதற்காக அவர்களை பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைத்து இருக்கிறோம்'' என தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்