சென்னை: சென்னை துறைமுகத்தில் நாள்தோறும் 1.50 லட்சம் கண்டெய்னர்கள் கையாளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பார்க்கிங் வசதிகள் இல்லாததால் பெரும்பாலான கப்பல்கள் சென்னை துறைமுகத்தில் இருந்து எண்ணூர் துறைமுகத்திற்கும், காட்டுபள்ளி துறைமுகத்திற்கும் மாற்றி இயக்கப்பட்டன.
இதையடுத்து சென்னை துறைமுகத்தில் இருந்து மாற்றி கொண்டு செல்லப்பட்ட கப்பல்களை மீண்டும் சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்காக சென்னை துறைமுக வளாகத்திற்குள் பார்க்கிங் பிளாசா என்ற பெயரில் பார்க்கிங் யார்டு கட்டப்பட்டு கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டது.
பார்க்கிங் யார்டு திறந்த நிலையில் சென்னை துறைமுகத்தில் இயக்கப்படும் கண்டெய்னர் லாரிகளை பார்க்கிங் யார்டுக்குள் செல்ல அனுமதிக்க பார்க்கிங் கட்டணமாக ரூ.570 செலுத்த வேண்டும் என, துறைமுக நிர்வாகம் அறிவித்தது. இதற்கு கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் படிப்படியாக வாடகை குறைக்கப்பட்டு முடிவில் வாகனம் ஒன்றிற்கு தலா ரூ.100 தர வேண்டும் என, கடந்த 14 ஆம் தேதி சென்னை துறைமுகம் அறிவித்தது.

பார்க்கிங் யார்டு திறக்கப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து பல முறை பார்க்கிங் கட்டணம் நிர்ணயித்தும், பின்னர் அதனை ரத்து செய்தும், காலம் கடத்தும் நடவடிக்கையில் சென்னை துறைமுகம் நிர்வாகம் ஈடுபட்டதால் இன்று (மே 20) காலை சென்னை துறைமுகத்தில் லாரிகளை இயக்கும் அனைத்து கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பை சேர்ந்த 11 உரிமையாளர்கள் சங்கம் மற்றும் 1 தொழிற்சங்கம் உள்பட 12 சங்கத்தை சேர்ந்தவர்கள் காலை 6 மணி முதல் தங்களுடைய வாகனங்களை இயக்க மாட்டோம் என்று கூறி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
"எண்ணுர் காமராஜர் மற்றும் காட்டுபள்ளி அதானி துறைமுகங்களில் வேலைநிறுத்தத்தை தொடருவோம்" - கோபிநாத்!
சென்னை ராயபுரத்தில் உள்ள கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகத்தில் அனைத்து டிரைலர் உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த கோபிநாத் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, ''பார்க்கிங் தொடங்கிய 6 மாத காலமாக சென்னை துறைமுக நிர்வாகம் பார்க்கிங் கட்டணம் கேட்பதும் அதை தள்ளி போடுவதுமாக இருந்து வருகிறது.

தற்போது ரூ.100 பார்க்கிங் கட்டணம் செலுத்த வேண்டும் என, கடந்த 14 ஆம் தேதி சென்னை துறைமுகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. கடந்த 16 ஆண்டு காலம் வாடகை உயர்வு இல்லாமல் நாங்கள் சிரமம் அடைந்து வரும் நிலையில் எங்களிடமே பார்க்கிங் கட்டணம் கேட்பதை ஏற்க இயலாது. பார்க்கிங் வசூலிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி இன்று காலை 6 மணியிலிருந்து சென்னை துறைமுகத்தில் இயக்கப்பட்டு வருகிற சுமார் 4500 லாரிகளை இயக்காமல் வேலை நிறுத்தத்தில் இருந்து வருகிறோம்.
வரும் 22 ஆம் தேதிக்குள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காவிட்டால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள எண்ணுர் காமராஜர் துறைமுகம் மற்றும் காட்டுபள்ளி அதானி துறைமுகங்களில் வேலைநிறுத்தத்தை தொடருவோம்.
சென்னை துறைமுகத்தில் இயங்கி வரும் சிசிடிஎல் நிறுவனத்திற்காக மட்டுமே இந்த பார்க்கிங் யார்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் ஒப்பந்த காலம் இன்னும் 3 ஆண்டுகளில் முடிய உள்ள நிலையில் இதுவரை மாற்றாமல் உள்ள அதன் கட்டமைப்பை மாற்றுவதற்காக பார்க்கிங் யார்டு கட்டப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்திற்கு அடுத்து உருவான காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கூட அனைத்து வசதிகளும் கொண்டபாஸ் ரூ.30 இல் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பார்க்கிங் யார்டில் அதிக கட்டணம் கேட்கின்றனர். ஆனால் குடிநீர் மற்றும் கழிவறை வசதி மட்டுமே செய்யப்பட்டுள்ளது.
இதுமட்டும் இல்லாமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்டெய்னர் லாரி உரிமையாளர்களை வஞ்சிக்கும் வகையில் லாரிகளை பிளாக் லிஸ்ட் செய்து சுமார் 1200 வாகனங்களிடம் ரூ.1500 வரை அபராதம் வசூல் செய்யப்பட்டது. இந்த வேலை நிறுத்தத்தில் 11 உரிமையாளர்கள் சங்கங்கள் மற்றும் 1 தொழிற்சங்கம் உள்ளிட்ட 12 சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டுள்ளனர்," என்று கோபிநாத் தெரிவித்தார்.
''கட்டணம் வசூல் செய்வதை வாபஸ் பெற வேண்டும்" - அனைத்து டிரைலர் உரிமையாளர்கள் சங்கம் செயலாளர் மூர்த்தி!
அனைத்து டிரைலர் உரிமையாளர்கள் சங்கம் செயலாளர் மூர்த்தி கூறும்போது, ''சென்னை துறைமுகத்தில் பார்க்கிங் பிளாசா என்கிற பெயரில் கட்டணம் வசூல் செய்வதை வாபஸ் பெற வேண்டும். அதுவரை எங்களுடைய வேலை நிறுத்தம் தொடரும். மேலும் அனைத்து ஆவணங்களும் முறையாக இருந்தும் எங்கள் வாகனங்களை கட்டாயமாக பார்க்கிங் யார்டிற்குள் செல்லுமாறு வலியுறுத்தி கட்டணம் வசூல் செய்வதை நாங்கள் கண்டிக்கிறோம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "எப்.ஐ.ஆர் மட்டும் போதாது - புலனாய்வு அமைப்புக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை!
அனைத்து கண்டெய்னர் லாரி கூட்டமைப்பை சேர்ந்த சுரேஷ் கூறும்போது, ''15 ஆண்டுகளாக சென்னை துறைமுகத்தில் நாங்கள் பார்க்கிங் யார்டு கேட்டு வந்தோம். தற்போது பார்க்கிங் யார்டு கட்டப்பட்டிருப்பது மகிழ்ச்சியான விஷயமாக இருந்தாலும் அதற்காக கட்டணம் வசூல் செய்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
கப்பல்களின் போக்குவரத்து நெரிசலால் சென்னை துறைமுகத்தில் இருந்து எண்ணூர் துறைமுகத்திற்கும், காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்திற்கும் மாற்றப்பட்ட கப்பல்களை மீண்டும் சென்னை துறைமுகத்திற்கு கொண்டு செல்வதற்காக இந்த பார்க்கிங் யார்டு உருவாக்கப்பட்டுள்ளது,'' என்று சுரேஷ் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.