விழுப்புரம்: கரோனா பாதிப்பு காரணமாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கட்டுமானத் தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு உலகையே உலுக்கிய கரோனா தொற்று காரணமாக பல கோடி மக்கள் உலகம் முழுவதும் இறந்தனர். இத்தொற்றின் வீரியமானது சற்று குறைந்திருந்த நிலையில், தற்சமயம் இந்தியாவில் மீண்டும் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 498 பேர் கரோனா தொற்று பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தியா முழுவதும் கரோனா பாதித்த 5,364 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் கரோனா தொற்றால் 4 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், 221 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பேரப்பேரி கிராமத்தை சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில், அங்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நேற்றைய தினம் தன்னுடைய சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இதையும் படிங்க: |
இன்று காலை அவருக்கு உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார். அவருடைய உடலானது பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்கள் ஒப்படைக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இவர் ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொண்டதும், காசநோய் உள்ளிட்ட இணை நோய்களால் பாதிக்கப்பட்டிருந்ததும் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். மேலும், இவரோடு தொடர்பில் இருந்த 6 பேர் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.