தேனி: தனியார் பள்ளியை யார் நடத்துவது? என்பது குறித்த மோதலில் பள்ளியில் மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் போது இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி அருகே பழனிசெட்டிப்பட்டியில் மனோகரன் என்பவருக்கு சொந்தமான 'பெனடிக்ட் பள்ளி' என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், பள்ளியை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேனியில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு சில நிபந்தனைகள் அடிப்படையில் மனோகரன் பள்ளியை நடத்துவதற்கு ஒப்பந்தம் விட்டுள்ளார்.
அதன்படி, பள்ளியின் பெயரை மாற்றாமல் தொடர்ந்து நடத்த வேண்டும் மற்றும் பள்ளியின் வருவாயில் பங்கு உள்ளிட்ட நிபந்தனைகளுடன் அந்த தனியார் பள்ளி நிர்வாகம் தொடர்ந்து பள்ளியை நடத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே மனோகரன் தரப்பிற்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 12) காலை பள்ளிக்கு மனோகரன் உள்ளிட்ட சிலர் ஒப்பந்த பெற்ற பள்ளிக்கு வந்து முதல்வர் அறையில் அவருடன் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பள்ளியின் ஊழியர்கள் மனோகரனை தாக்கியதாகவும், பதிலுக்கு மனோகரன் தரப்பினரும் பள்ளி ஊழியர்களை தாக்கியதால் இரு தரப்பிற்கும் ரத்த காயங்கள் ஏற்பட்டன.
இதையும் படிங்க: குடும்ப அட்டைகளில் ஊர் பெயரை தவறாக இருப்பதாக புகார்! திருத்தம் கோரி கிராமமே திரண்டு வந்ததால் பரபரப்பு!
பின்னர் இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி ரத்த காயங்கள் ஏற்பட்ட நபர்களை ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் பள்ளியில் விசாரணை நடத்தினார்.
சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் தற்போது பொதுத்தேர்விற்கு மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் இரு தரப்பினரும் தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் காவல் துறையினர் இரு தரப்பிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்