சென்னை: கிறிஸ்தவ மத பாடல்கள் மூலம் சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமான மதபோதகரான ஜான் ஜெபராஜ், கோவையில் கிங் ஜெனரேஷன் பிரார்த்தனை கூடம் என்ற அமைப்பை நிறுவி அதில் மத போதகராகவும் செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே, கடந்த 2024-ம் ஆண்டு மே 21ம் தேதி ஜான் ஜெபராஜ், கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் விருந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 2 சிறுமிகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த ஜான் ஜெயராஜ் கடந்த ஏப்ரல் மாதம் 12 தேதி கேரள மாநிலம் மூணாறில் உள்ள விடுதியில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜான் ஜெபராஜ் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அதில், நானும் என் மனைவியும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், என் மனைவி மற்றும் அவரின் குடும்பத்தினர் தூண்டுதலின்பேரில் சிறுமிகளை வைத்து தனக்கெதிராக காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். தனக்கு எதிராக உள் நோக்கத்துடன் பொய்யான புகாரில் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காவல் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல மாட்டேன் எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என கோரியுள்ளார்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையில் நடந்தது என்ன? சிபிஐ அதிகாரி சொன்ன அதிர்ச்சி தகவல்!
இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜான் ஜெபராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.மாளவியா, ''குடும்பப் பிரச்சனை காரணமாகவே இந்த புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. உள்நோக்கத்துடன் அளித்த இந்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், குடும்ப பிரச்சனை மற்றும் புகார் அளித்தவர் ஆகியோர் பின்னனி குறித்து நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்'' என வாதிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், மனுதரார் ஜான் ஜெபராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், இரு நபர் ஜாமீன் உத்தரவாதம் அளிக்க வேண்டும். விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்த கூடாது. விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையொப்பம் இட வேண்டும் ஆகிய நிபந்தனைகளையும் விதித்து உத்தரவிட்டார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.