வேலூர்: அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையின் விரலை வெட்டிய செவிலியர் மற்றும் அதற்கு துணை போன மருத்துவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரியும் மருத்துவமனையின் சீர்கேட்டை கண்டித்தும் கணியம்பாடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த மாதம் 24ஆம் தேதி வேலூர் மாவட்டம் முள்ளிபாளையத்தைச் சேர்ந்த விமல் ராஜ் - நிவேதா தம்பதிக்கு அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கையில் குளுக்கோஸ் போட்டிருந்த நிலையில், அந்த ஊசியை மாற்றும் போது செவிலியர் அருணா தேவி கையால் அகற்றாமல் குழந்தையின் கையில் ஒட்டப்பட்டிருந்த டேப்பை கத்தரிக்கோலால் அகற்றியுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக குழந்தையின் வலது கை கட்டைவிரலையும் சேர்த்து வெட்டிவிட்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மேலதிகாரிகளுக்கு தெரிய வரவே, உடனடியாக குழந்தைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையின் பெற்றோர் கொடுத்த புகாரின்பேரில் செவிலியர் அருணா தேவி மீது வழக்குபதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: குழந்தையின் கட்டை விரலை வெட்டிய செவிலியர்... உறவினர்கள் போராட்டம்: செவிலியர் மீது வழக்குப்பதிவு! |
இத்தகைய அலட்சிய செயலில் ஈடுபட்ட அருணா தேவி மீது கடுமையான நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, கணியம்பாடி பேருந்து நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் கர்ப்பிணி தாய்மார்களை தரக்குறைவாக பேசும் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பிரசவ வார்டில் குழந்தையின் விரலை வெட்டிய செவிலியரை பணி நீக்கம் செய்யக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியின் சார்பில் மாணிக்கம் தலைமையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சரோஜா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது மருத்துவமனையில் குழந்தையின் விரலை வெட்டிய செவிலியரை இடமாற்றம் செய்து ஏமாற்றக் கூடாது. அவரை பணியிலிருந்து நீக்க வேண்டும். மருத்துவமனையில் சுகாதாரமான குடிநீரை அனைத்து நோயாளிகளுக்கும் வழங்க வேண்டும். ஏழை எளிய மக்கள், பிரசவத்திற்காக வரும் நிறைமாத கர்ப்பிணிகளை செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் தரக்குறைவாக பேசுகிறார்கள்.
அது போக, அவர்களுக்கு அரசு மருத்துவமனையில் எழுதிக் கொடுக்கும் மருந்து மாத்திரைகளை வெளியே வாங்கி வரச் சொல்கின்றனர். மேலும் வார்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் தூய்மைப் பணியாளர்கள் ரூ.50 மற்றும் ரூ.100 பணம் கேட்டு வசூலிக்கின்றனர் என்பது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இதனைத் தடுக்க வேண்டுமென இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி மருத்துவத் துறையில் நடக்கும் இதுபோன்ற நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிராக கண்டங்களை தெரிவித்தனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.