
இது தமிழ்நாட்டின் புதிய அடையாளம்... 10.1 கிமீ தூர உயர்மட்ட பாலம் - திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்!
2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற அரசு முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Published : October 9, 2025 at 5:44 PM IST
கோயம்புத்தூர்: தமிழ்நாட்டின் மிக நீண்ட பாலமான அவிநாசி சாலையில் 10.1 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள உயர் மட்ட மேம்பாலத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதற்கு ஜி.டி.நாயுடு பாலம் என பெயர் சூட்டப்பட்ட நிலையில், ஜி.டி நாயுடுவின் மகன் கோபால், முதலமைச்சர் ஆகியோர் இணைந்து மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
இது குறித்து பேசிய ஜி.டி.நாயுடுவின் மகன் கோபால், தமிழ்நாட்டின் அடையாளமாக உள்ள இந்த பாலத்திற்கு என்னுடைய தந்தை பெயர் வைத்துள்ளது பெருமை அளிக்கிறது. மிகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது என்றார்.
பின்னர் முதலமைச்சர் முன்னிலையில், “கோவை எனது நகரம். அதில் நான் பெருமைப்படுகிறேன். எனது வாகனத்தை நான் இயக்கும் போது தலைக்கவசம் அணிவேன். இருக்கை பட்டை அணிவேன். அலைபேசி பயன்படுத்த மாட்டேன். சாலை விதிகளை பின்பற்றுவேன். சாலையில் செல்லும் ஒவ்வொரு உயிரையும் என்னுடையதாக மதிப்பேன். சாலை பாதுகாப்பு எனது உரிமை மற்றும் எனது கடமை என்பதை நான் அறிவேன். எனது நகரத்தை விபத்தில்லா நகரமாக மாற்ற என்னால் இயன்ற அனைத்தையும் செய்து எனது நகரத்தை விபத்தில் நகராக மாற்ற என்னால் இயன்ற அனைத்தையும் செய்வேன். நான் உயிர் காவலனாக இருப்பேன் என்று உறுதி அளிக்கின்றேன்,” என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
புத்தொழில் மாநாடு
முன்னதாக, கோவை கொடிசியா வளாகத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் உலக புத்தொழில் மாநாட்டினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில், தமிழ்நாடு புத்தொழில் சூழமைவு அறிக்கையை முதலமைச்சர் வெளியிட்டார். தொடர்ந்து புத்தொழில் நிறுவனங்களுக்கு சலுகை தொகுப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு புத்தொழில் நிதித்திட்டத்தின் கீழ் மானியங்களுடன் கூடிய ஆணைகளை வழங்கினார்.
மேலும் முதல்வர் முன்னிலையில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மற்றும் பிரான்ஸ், கனடா, ஜெர்மனி உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
மாநாட்டில் பேசிய முதலமைச்சர், “இந்த மாநாடு கோவையில் நடப்பது மிக மிக பொருத்தமானது. நாங்கள் ஆட்சி பொறுப்பேற்ற இந்த நான்கரை ஆண்டுகளில், எண்ணற்ற தொழில் திட்டங்கள் நம் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளன. அதிக முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற அரசு முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
| இதையும் படிங்க: 'தமிழ்நாடு அரசால் ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய இழப்பு...' தங்க விலையை சுட்டிக்காட்டி சிஐடியு வேதனை! |
திராவிட மாடல் அரசினுடைய இலக்கு என்னவென்றால், தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் புத்தொழில் சார்ந்த விழிப்புணர்வு அனைத்து மக்களிடத்திலும் சென்று சேர வேண்டும் என்பது தான்.
கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அவிநாசி சாலை மேம்பாலத்தை திறந்து வைக்க உள்ளேன். அதற்கு பெரியாரின் உற்ற தோழர் ஜி.டி. நாயுடு பெயரை சூட்டி உள்ளேன். தொடர்ந்து தங்க நகை பூங்காவிற்கு அடிக்கல் நாட்ட உள்ளேன். அடுத்த மாதம் பெரியார் நூலகம் திறக்கப்பட உள்ளது. இது போன்ற நிகழ்வுகள் திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும் தொடரும்” என்றார்.

