சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் சென்னை பார் அசோசியேசன் சார்பில் 75-வது ஆண்டு இந்திய அரசியலமைப்பு மற்றும் சென்னை பார் அசோசியேசனின் 160-வது ஆண்டு விழா இன்று (மார்ச் 15) நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு விருந்தினராகவும், உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளும் கலந்து கொண்டனர்.
நிகிழ்ச்சியின் தொடக்கத்தில் பேசிய மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் பாஸ்கர், '' வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதியை 7 லட்சத்தில் இருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்திய தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து மூத்த வழக்கறிஞர்கள் கே. பராசரன் மற்றும் கே.கே வேணுகோபாலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
பின்னர் பேசிய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர் ஶ்ரீராம், '' அனைவருக்கும் மாலை வணக்கம் என தமிழில் தனது பேச்சை தொடங்கினார். அனைத்து மக்களின் உரிமைக்காகவும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை சட்டமேதை அம்பேத்கர் இயற்றினார். கடந்த 160 ஆண்டுகளாக அனைவருக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதில் பார் அசோசியேசின் கவனமாக செயல்பட்டுள்ளது. சைபர் குற்றம், பாலியல் வன்கொடுமை போன்றவற்றை தடுக்க சட்ட வல்லுநர்கள் முன்வர வேண்டும்.

தொடர்ந்து பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன், '' கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதை இந்திய அரசியலமைப்பு மூலமாக அம்பேத்கர் நிறைவேற்றியுள்ளார். உலகத்திலேயே வேறு எந்த நாட்டிலும் இல்லாத அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்பதை அம்பேத்கரின் அரசியலைப்பு உரிவாக்க குழு நிரூபித்துள்ளது. நமது நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். அவர்களை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்ததே இந்திய அரசியலமைப்பின் வெற்றியாக பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.
பின்னர் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி கே. வி. விஸ்வநாதன், மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்களுக்கு தொழில் ரீதியாக வாய்ப்புகளை கொடுக்க வேண்டும். வழக்கறிஞர்களுக்கான தொடர் கல்வி கிடைப்பதை வழக்கறிஞர்கள் சங்கம் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ''பாலிடெக்னிக் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு'' - உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவிப்பு!
அதனை அடுத்து, பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி எம். எம். சுந்தரேஷ், ஆங்கிலத்தில் நீதிபதி மகாதேவனும், தமிழில் நீதிபதி விஸ்வநாதனும் பேசிவிட்டதால் தமிழும் ஆங்கிலமும் கலந்து பேச வேண்டிய தர்மசங்கடத்தில் இருப்பதாக வேடிக்கையாக தெரிவித்தார்.
தமிழர் நீதி அனைத்து நீதியையும் விட உயர்வானது. அரசனாக இருந்தாலும், நீதி வழுவாமல் குறையற்றவராக இருக்க வேண்டும் என்பதை தமிழ் இலக்கணமான சிலப்பதிகாரம் நீதி வழுவாமையை கூறுகிறது. 160 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலை தற்போதை இல்லை. நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. புதிய சட்டங்களை தொடர்ந்து படிக்க வேண்டும் என தெரிவித்தார்.
பின்னர், சிறப்புரை ஆற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், நீதிபதிகள் ஆங்கிலத்திலும் தமிழிலும் பேசியதுதான் இருமொழி கொள்கை, தமிழ்நாட்டில் தான் இது நடைபெறும். இந்தியாவின் சிறப்பு பெற்ற நீதிமன்றங்களில் நமது சென்னை உயர் நீதிமன்றம் முதன்மையானது. வழக்கறிஞர்கள் அநீதிக்கு எதிரான நோயை போக்கும் மருத்துவர்களாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு நீதிமன்றங்களுக்கு சென்ற நீதிபதிகள் சிறப்பான தீர்ப்புகளை வழங்கி வருகின்றனர். இந்திய அரசியலமைப்பு மக்களின் அடிப்படை உரிமைகளை நிலை நாட்டுகிறது.
ஆனால், தற்போது இந்திய அரசியலமைப்புக்கு எதிரான மத்திய அரசின் செயல்பாடுகளால் கூட்டாட்சி தத்துவம் பாதிக்கப்படுகிறது. நீதித்துறை மேம்பாட்டுக்கான பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
சாதாரண மக்களின் அடிப்படை கல்வி, பொருளாதார வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு தொடர்ந்து போராடி வருகிறது. நீதித்துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ்நாடு அரசு செய்ய தயாராக உள்ளது. இறுதியாக, உச்ச நீதிமன்றத்தின் கிளையை தமிழ்நாட்டில் நிறுவ முயற்சி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு கோரிக்கை வைத்து தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில், உயர்நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.