சென்னை: 'காலனி' என்ற வார்த்தையின் பயன்பாட்டை அரசு ஆவணத்தில் இருந்த நீக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் ஆதி குடிகளை தவறாக சித்தரிக்கும் வகையில் இந்த சொல் இருப்பதாக கூறிய அவர், ஆதிக்க தீண்டாமையின் அடையாளமாக விளங்கும் 'காலனி' என்ற சொல் இனி நீக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை - பிற்படுத்தப்பட்டோர் மானியக் கோரிக்கை மீதான பதில் உரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் வாசித்தார். அவர் பேசுகையில், "காலனி என்ற சொல்லை நீக்க வேண்டும் என விசிக எம்எல்ஏ சிந்தனை செல்வன் கோரிக்கை விடுத்திருந்தார். காலனி என்பது இப்போது வசை சொல்லாக மாறியிருக்கிறது. நமது ஆதிக்குடிகளை இழிவுப்படுத்துவது போல அந்த சொல் உள்ளதால், இனி புழக்கத்தில் இருந்தும், அரசு ஆவணங்களில் இருந்தும் அந்த சொல் நீக்கப்படும்" எனக் கூறினார்.
அதன் பின்னர், காவல்துறை மானியக் கோரிக்கை மீது பதிலளித்து அவர் பேசியதாவது: கடந்த அதிமுக ஆட்சியாளர்கள் செய்த நிர்வாக சீர்கேட்டால், நிர்வாகம் தரைமட்டத்திற்கும் கீழே இருந்தது. இப்போது சட்டம் ஒழுங்கை சரியாக பேணி சாதனைகளுக்கு அடித்தளமிட்டுள்ளது காவல்துறை. காவலர்கள் தனது பணிச்சுமையையும், தனிப்பட்ட வெறுப்பையும் பொதுமக்களிடம் காட்டக்கூடாது. குற்றங்களைத் தடுக்கும் துறையாக அது இருக்க வேண்டும். பொதுமக்களிடம் கனிவுடன் நடக்க வேண்டும்.
தமிழ்நாட்டை குற்றங்கள் நடக்காத மாநிலமாகவும், போதைப்பொருள் இல்லாத மாநிலமாகவும், பாலியல் குற்றங்கள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும். குற்றங்களும் பூஜ்ஜியம் என்ற நிலை தமிழ்நாட்டில் வர வேண்டும். செப்டம்பர் 6ஆம் தேதி காவலர் நாள் கொண்டாடப்படும்.
நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலத்தில் 90 ஆயுதப்படை காவல் குடியிருப்புகள் மற்றும் தர்மபுரியில் 134 குடியிருப்புகள் கட்டப்படும். சென்னை பெருநகரில் உள்ள விருகம்பாக்கம் காவல் நிலையத்திற்கு ரூ.6.46 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்.
அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையிலும் காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்வது உறுதி செய்யப்படும். அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் இருப்பது உறுதி செய்யப்படும். கோயம்புத்தூர், சிவகங்கை, திருப்பூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருவண்ணாமலை, கன்னியாகுமரி மாவட்டங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும். கோயம்புத்தூரில் பயங்கரவாத தடுப்பு பிரிவு ரூ.5 கோடி செலவில் அமைக்கப்படும். இதுவரை பார்த்தது திராவிட மாடல் ஆட்சியின் பார்ட் 1 தான். 2026ஆம் ஆண்டு தேர்தலைத் தொடர்ந்து, திராவிட மாடலின் வெர்ஷன் 2.0 சாதனை தொடரும் என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.. முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்; சட்டப்பேரவையில் என்ன நடந்தது? |
இதையடுத்து பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் , “அரசு தலை நிமிர்ந்து நிற்கிறதா என்பதை மக்கள் தான் சொல்ல வேண்டும். திராவிட மாடல் பார்ட்- 2, பார்ட்- 3 என முதலமைச்சர் சொல்கிறார். பார்ட் -2 என்றாலே தமிழகத்தில் தோல்விதான். ஏன் இந்தியன் - 2 திரைப்படம் கூட தமிழகத்தில் தோல்விதான் என பேசினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.