சென்னை: மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்திடவும் உயர்மட்ட அளவிலான குழுவினை அமைத்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-இன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
முதலமைச்சர் தனது உரையில், “நம் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. ஒற்றைத் தன்மை கொண்ட நாடாக இல்லாததால், கூட்டாட்சி தத்துவத்தினை கொண்ட நெறிமுறைகளை கொண்ட ஒன்றியமாக உருவாக்கினார்கள். இந்த சூழலில் மாநில மக்களின் உரிமைகளை போராடி பெற வேண்டியதாக உள்ளது,” என்று தெரிவித்தார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமைகளை பாதுகாக்கவும், ஒன்றிய-மாநில அரசுகளுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்திடவும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கு.மே.ஜோசப் அவர்களை தலைவராகக் கொண்ட குழு அமைக்கப்படுகிறது என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இதன் உறுப்பினர்களாக இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் அசோக் வர்தன் ஷெட்டி, தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் பேராசிரியர். மு.நாகநாதன் ஆகியோர் இருப்பார்கள் என்று கூறியுள்ளார்.
இந்த உயர்நிலைக்குழுவிற்கு கீழ்க்கண்ட கொள்கைகள் குறித்து ஆய்வை நடத்தும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி,
- ஒன்றிய-மாநில அரசுகளின் உறவு நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகளையும், நடைமுறையிலுள்ள சட்டங்கள், ஆணைகள், கொள்கைகள் மற்றும் ஏற்பாடுகளின் அனைத்து நிலைப்படிகளையும் உயர்நிலைக் குழு ஆராய்ந்து, மறுமதிப்பீடு செய்தல்.
- இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தற்போதுள்ள விதிகளை உயர்நிலைக் குழு ஆராய்ந்து, காலப்போக்கில் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்கு நகர்த்தப்பட்ட பொருண்மைகளை மீட்டெடுப்பது குறித்த வழிமுறைகளைப் பரிந்துரைசெய்தல்.
- உயர்நிலைக் குழு, மாநிலங்கள் நல்லாட்சி வழங்குவதில் உள்ள சவால்களை, அதை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்தல்.
- நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் ஏற்படுத்தாத வகையில், நிர்வாகத் துறைகளிலும், பேரவைகளிலும், நீதிமன்றக் கிளைகளிலும், மாநிலங்கள் அதிகபட்ச தன்னாட்சி உரிமை பெற்றிட உரிய நடவடிக்கைகளை பரிந்துரை செய்தல்.
- 1971-இல் அமைக்கப்பட்ட இராஜமன்னார் குழு மற்றும் ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த ஏனைய ஆணையங்களின் பரிந்துரைகளையும், 1971 முதல் நாட்டில் நிலவும் பல்வேறு அரசியல், சமூகம், பொருளாதார மற்றும் சட்டம் சார்ந்தவற்றில் உள்ள வளர்ச்சியினையும் உயர்நிலைக் குழு கருத்திற்கொள்ளுதல் வேண்டும்.
ஆகியவற்றை ஆராய்ந்து அறிக்கைகள் வழங்கும் என்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்தார்.
இதில் உரையாற்றிய முதலமைச்சர், “வேறுபாடுகளை கடந்து நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ்கிறோம். நம் நாட்டு மக்களின் நலன்களைப் போற்றிப் பாதுகாக்கின்ற வகையில், அதற்கான அரசியல் அமைப்பையும், நிர்வாக அமைப்பையும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தலைமையில் உருவாக்கியவர்கள், ஒற்றைத்தன்மை கொண்ட நாடாக இல்லாமல், கூட்டாட்சிக் கருத்தியலை, நெறிமுறைகளைக் கொண்ட மாநிலங்களின் ஒன்றியமாக உருவாக்கினார்கள் என்பதை இம்மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அறிவார்கள்.
கல்வி உரிமை பறிப்பு
”ஆனால், இன்றைய காலகட்டத்தில் மாநிலங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு, மாநில மக்களின் அடிப்படை உரிமைகளையே ஒன்றிய அரசிடம் போராடிப் பெற வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறோம் என்பதை வேதனையோடு இங்கே பதிவு செய்கிறேன்,” என்று பேசினார்.
இந்தியாவிலேயே எந்த மாநிலமும் இதுகுறித்து முயற்சிகள் எடுக்காத நிலையில், ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலத்திற்கு முன்பே 1969-ஆம் ஆண்டு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கருணாநிதி ஒன்றிய-மாநில அரசுகளின் உறவுகளை ஆராயும் பொருட்டு ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி பி.வி.இராஜமன்னார் தலைமையில் உயர்மட்டக் குழுவினை அமைத்தார் என்று பேசிய முதலமைச்சர், அந்தக் குழுவின் முக்கியப் பரிந்துரைகளை 51 ஆண்டுகளுக்கு முன்பே, 1974-ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் நாள் இதே சட்டப்பேரவையில் தீர்மானமாகவும் கருணாநிதி நிறைவேற்றினார் என்றார்.
இதையும் படிங்க |
மேலும், மாநில பட்டியலில் இருந்த கல்விக் கொள்கைகள் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதால் வந்த விளைவு தான் ‘நீட்’ தேர்வுமுறை என்று கூறிய முதலமைச்சர், இந்த 'நீட்' தேர்வு ஒரு சாராருக்கு மட்டுமே பயனுள்ளதாகவும், பயிற்சி மையங்களை ஊக்குவிக்கும் வண்ணமும், கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தும்விதமாகவும் உள்ளது என்று தெரிவித்தார்.
இப்படி மாநில கல்வி உரிமைகள் பறிக்கப்படுவதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், தேசிய கல்விக் கொள்கை 2020 வாயிலாக ‘இந்தி’ மொழியை ஒன்றிய அரசு மறைமுகமாக தமிழ்நாட்டு மாணவர்களின் மீது திணிக்க முற்படுகிறது எனவும், கல்விக்காக ஒன்றிய அரசு தரவேண்டிய ரூ.2,500 கோடி நிதியையும் விடுவிக்காமல் வஞ்சித்து வருவதாகவும் பேசினார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.