சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆளுநர் பதவிக்கு வருவதற்கு முன்பு, ஐபிஎஸ் அதிகாரியாகப் பணி புரிந்தார். தேசிய பாதுகாப்பு முகமை உள்ளிட்ட பல்வேறு விசாரணை அமைப்புகளில் உயர் பொறுப்புகளை வகித்துள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி 2024 ஆம் ஆண்டு குடிமைப் பணி தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். அவர்களின் 9 மாணவர்கள் இப்போது குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆளுநரை சந்திக்க விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் இன்று ஆளுநர் மாளிகைக்கு வரவழைக்கப்பட்டனர். ஆளுநர் மாளிகையில் உள்ள அன்னபூர்ணா மண்டபத்தில் நடந்த நிகழ்வில், 2024 ஆம் ஆண்டில் குடிமைப்பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆளுநர் பாராட்டு தெரிவித்தார். அவர்களுக்கு சால்வை அணிவித்து கம்பராமாயணம் புத்தகங்கள் பரிசாக வழங்கினார்.
அவர்களைப் பாராட்டிப் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவ்வளவு எளிதல்ல. உங்களுடைய வெற்றிக்கு உங்களது பெற்றோர்கள் முக்கிய காரணம். நான் ஒரு மணி நேரம் யோகா செய்கிறேன். பொது வாழ்க்கையில் ஈடுபட உள்ள நீங்கள் உங்களின் உடல் நலனைப் பாதுகாப்பதும் முக்கியமாகும். எனவே, தினந்தோறும் உடற்பயிற்சி செய்யுங்கள். உங்களது ஊதியத்தில் சேமிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். பொதுமக்களிடம் இருந்து நன்கொடை பெறுவதோ அல்லது லஞ்சம் வாங்குவதோ கூடாது.
இதையும் படிங்க: கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
உங்கள் வாழ்க்கை துணை நிச்சயமாக உங்கள் வேலை குறித்து புரிதல் உள்ளவராக இருக்க வேண்டும். எனவே, உங்கள் துணைவியை கவனமாக தேர்வு செய்யுங்கள். நீங்கள் உங்கள் வாழ்கையில் பல சவாலான சூழல்களை சந்திக்க நேரிடும். அதற்கு துணையாக இருக்கும் வகையில் வாழ்க்கை துணைவரை தேர்வு செய்யுங்கள். நீங்கள் உங்கள் துணையை சரியாக தேர்வு செய்யவில்லை என்றால் கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
நான் பணியில் சேரும் போது எனக்கு ஊதியம் ரூ720 ஆக இருந்தது. அதன் பின்னர் படிப்படியாக ஊதிய விகிதம் அதிகரிக்கப்பட்டது. ஆனால் தற்போது உங்களுக்கு மத்திய அரசு ஒரு லட்சம் ரூபாய் ஊதியமாக அளிக்கிறது. அது படிப்படியாக மேலும் உயரும். உங்கள் ஊதியத்தில் இருந்து சேமிக்க கற்றுக் கொள்ளுங்கள். தேவையற்ற செலவுகளைக் குறையுங்கள். குடிமைப்பணிகளில் தேர்ச்சி பெற்ற போதிலும், படிக்கும் பழக்கத்தை தொடர வேண்டும்.
நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 30 பக்கங்களாவது படிக்கும் பழக்கத்தை வளர்த்து கொள்ளவேண்டும். புத்தகம் படிப்பது உங்கள் அறிவையும் செயலையும் மேம்படுத்தும். நம் நாட்டைப் பற்றியும், மக்களை பற்றியும், நாகரீகங்களை பற்றியும் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். இந்தியா கிட்டத்தட்ட 1000 ஆண்டுகள் பழமையான நாடு. நம் நாட்டின் மீது நாம் அன்பு செலுத்த வேண்டும். உலகிலே மிகப் பழமையான நாடுகளில் இந்தியாவும் ஒன்று,"என்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் படிக்க, எங்களை கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்.