'தமிழ்நாடு அரசால் ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய இழப்பு...' தங்க விலையை சுட்டிக்காட்டி சிஐடியு வேதனை!
கரூருக்கு 6 மணி நேரத்திற்குள் செல்லும் முதல்வருக்கு போராட்டம் மேற்கொள்ளும் போக்குவரத்து ஊழியர்களை சந்திக்க முடியாது என கூறுவதை என்ன சொல்வது? என சிஐடியு கேள்வி எழுப்பியுள்ளது.

Published : October 9, 2025 at 3:57 PM IST
சென்னை: அரசு எங்களுக்கு பணம் கொடுக்காமல் நிறுத்திய போது தங்கத்தின் விலை சவரனுக்கு 42,000 ஆக இருந்தது. இன்று 92 ஆயிரம் ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. அப்படி என்றால் ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வளவு இழப்பை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி இருக்கிறது? என்று சிஐடியு தலைவர் அ.சௌந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.
சென்னையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் நலச்சங்கம் மற்றும் சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் பல கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று சென்னை பல்லவன் இல்லத்தில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையிலேயே அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பல்லவன் இல்லம் சாலை மற்றும் ராஜீவ் காந்தி மருத்துவமனை சாலையில் போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு தலைவர் அ.சௌந்தரராஜன், ''ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான இந்த பண பலன்களை 30 மாதங்களாக கொடுக்காமல் இந்த அரசு நிலுவையில் வைத்து வருகிறது. நாங்கள் போராட்டத்தை மேற்கொண்டால் 10 மாத பண பலன் வழங்குவது, பின்னர் மீண்டும் அரசு காலம் தாழ்த்துகிறது. 30 ஆண்டுகளாக சேமித்து வைத்த தொழிலாளர்களின் பணத்தை முன்னறிவிப்பின்றி தடுத்து வைப்பதற்கு இந்த அரசுக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை. நாங்கள் புதிதாக எந்த ஒரு அறிவிப்பையும் கேட்கவில்லை. மாறாக எங்களிடம் இருந்து பிடித்தம் செய்ததையே கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்.
தேர்தல் நேரத்தில் பரப்புரையில் எல்லா இடங்களுக்கும் சென்று பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக திமுக கூறியது. ஆனால் இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான போக்குவரத்து ஊழியர்கள் காலி பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்பவில்லை, ஆனால் பணிமனைகளை தனியார்மயப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த தேர்தல் போது இந்த அரசு தொழிலாளர்களுக்காக வழங்கிய எந்த வாக்குறுதியையும் கடுகளவும் நிறைவேற்றவில்லை.

| இதையும் படிங்க: ரவுடி நாகேந்திரன் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு; ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய நபராக குற்றம்சாட்டப்பட்டவர்! |
கரூரில் ஒரு சம்பவம் நடைபெற்றவுடன் 6 மணி நேரத்திற்குள்ளாக செல்லும் முதல்வருக்கு போராட்டம் மேற்கொள்ளும் போக்குவரத்து ஊழியர்களை சந்திக்க முடியாது என கூறுவதை என்ன சொல்வது? தொழிலாளர்கள் மீது இந்த அரசுக்கு அக்கறை இல்லையா?
எங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்காமல் காவல்துறையினரை வைத்து ஆங்காங்கே கைது செய்வது அடக்குமுறை. இந்த அரசு எங்களுக்கு பணம் கொடுக்காமல் நிறுத்திய போது தங்கத்தின் விலை சவரனுக்கு 42,000 ரூபாயாக இருந்தது. இன்று 92 ஆயிரம் ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. ஆனால், இன்றும் எங்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை வழங்கவில்லை. அப்படி என்றால் ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வளவு இழப்பை இந்த அரசு ஏற்படுத்தி இருக்கிறது?'' என அ.சௌந்ததராஜன் கேள்வி எழுப்பினார்.

