நாகை: நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.423.18 கோடி மதிப்பீட்டிலான 35 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 206 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 38,956 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகப்பட்டினத்தில் நடைபெற்ற அரசு விழாவில், 139 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவில் 35 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 82 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 206 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 200 கோடியே 27 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 38,956 பயனாளிகளுக்கு வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற முக்கிய பணிகளின் விவரம்:
- வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், நாகப்பட்டினம் நம்பியார் நகரில் 6 கோடியே 35 இலட்சம் ரூபாய் செலவில் புயல் பாதுகாப்பு மையம்
- பள்ளிக் கல்வித் துறை சார்பில், கீழ்வேளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ் 66 இலட்சத்து 63 ஆயிரம் ரூபாய் செலவில் 3 வகுப்பறைக் கட்டடங்கள்
- வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், திருக்கண்ணப்புரத்தில் 5 கோடியே 16 இலட்சத்து 9 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்
- மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் 81 கோடி ரூபாய் செலவில் நவீனப்படுத்தப்பட்ட பணிகள்
- தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், வேதாரண்யம் வட்டம், தலைஞாயிறில் 3 கோடியே 37 இலட்சத்து 61 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையம், பணியாளர்கள் குடியிருப்பு மற்றும் அலுவலர் குடியிருப்பு கட்டடங்கள்
- பள்ளிக்கல்வித் துறை சார்பில், வேதாரண்யத்தில் 1 கோடியே 39 இலட்சம் ரூபாய் செலவில் தரை மற்றும் முதல் தளத்துடன் முழு நேர கிளை நூலகம்,
- தலைஞாயிறு பேரூராட்சியில் செயல்படும் தலைஞாயிறு கிளை நூலகத்திற்கு 22 இலட்சம் ரூபாய் செலவில் புதிய இணைப்பு கட்டடம் உள்ளிட்ட 206 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 3160 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் 415 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட அட்டைகள், என பல்வேறு துறைகளின் சார்பில் 200 கோடியே 27 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 38,956 பயனாளிகளுக்கு முதலமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முன்னதாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தின் சார்பில் 105 புதிய பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழாவில், நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வேளாண்மை மற்றும் உழவர்நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.