சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் அஜைல் ரோபோட்ஸ் நிறுவனம் ரூ.300 கோடி முதலீட்டில் அமைத்துள்ள செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரோபோட்டிக் இயந்திர பாகங்கள் உற்பத்தி ஆலையை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இது ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த நிறுவனமாகும். செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, புதிய தலைமுறை தானியங்கு தீர்வுகளை வழங்கும் நிறுவனம் ஆகும்.
மேலும், ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் எஸ்ஓஎல் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ரூ.175 கோடி முதலீட்டில் அமைத்துள்ள காற்று பிரித்தெடுப்பு (Air Separation) ஆலையையும் காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். எஸ்ஓஎல் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இத்தாலி நாட்டைச் சேர்ந்த எஸ்ஓஎல் எஸ்பிஏ மற்றும் இந்தியாவின் சிக்ஜில்சால் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் கூட்டு நிறுவனம் ஆகும். ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள இந்நிறுவனம், தொழிற்சாலைகள் மற்றும் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி மேற்கொண்டு வருகிறது.
நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 6 மாணவர்களுக்கு உள்ளகப்பயிற்சி (Internship) அளிப்பதற்கான கடிதங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதையும் படிங்க: ”உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டுக்கே நன்றி”... கன்னட மொழி விவகாரத்தில் கமல்ஹாசன் உருக்கம்!
தமிழ்நாடு, 2024-25 ஆம் ஆண்டில் 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது. இது, கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த அதிகபட்ச வளர்ச்சியாகும். தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு, அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி பெறுவதற்குத் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
நிகழ்ச்சியில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் செயல் இயக்குநர் மருத்துவர் அலர்மேல்மங்கை, அஜைல் ரோபோட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ரோரி சாக்ஸ்டன் மற்றும் இந்திய செயல்பாடுகள் மேலாண்மை இயக்குநர் சரவணன் சோலையப்பன், SOL இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் அல்டோ ஃப்யுமகல்லி ரொமாரியோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
அண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள, கூகுள் நியூஸ், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பின் தொடருங்கள்