BY யோகேஸ்வரன் முத்துராஜா
சென்னை: சமூகத்தால் கவனிக்கப்படாத அல்லது புறக்கணிக்கப்பட்டு தினம் தினம் இன்னல்களுக்கு இடையே வாழ்ந்து வருபவர்கள் மாற்று பாலினத்தவர்கள் என அழைக்கப்படும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள். உணவு, தங்குமிடம் மற்றும் வேலை போன்ற அடிப்படை தேவைகளுக்காக பிறரிடம் கையேந்தும் கொடுமை அவர்களுக்கு இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், அரசு மற்றும் நல் உள்ளம் கொண்டோரின் உதவியால் திருநங்கைகளில் சிலர் தன்னைப் போன்றோருக்கு உதாரணமாக மாறி சாதிக்கத் தொடங்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் தான் ஓவியா.
யார் இந்த ஓவியா?
''Born2win'' என்னும் பெயரில் சைதாப்பேட்டையில் இயங்கி வருகிறது 'பொட்டிக்'. 150 சதுர அடி பரப்பளவுள்ள இந்த கடையில் நுழைந்தவுடன், இரு புறங்களில் வைக்கப்பட்டுள்ள அழகாக அடுக்கி வைக்கப்பட்ட துணி வகைகள் மற்றும் பார்வையாக வைக்கப்பட்டுள்ள ரெடிமேடுகள் என நம்மை கவர்ந்தன. அங்கு அமர்ந்திருக்கும் திருநங்கை ஓவியா நம்மை வரவேற்றார். இவர் தான் இந்த கடையை நடத்துபவர். வாழ வழி தேடி, சென்னை வந்த தனது வாழ்க்கையை எப்படி இந்த பொட்டிக் மாற்றியது என்று நமது ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திடம் பேசினார் ஓவியா.
அப்போது அவர், "எனது சொந்த ஊர் திருவண்ணாமலை. நான் பத்தாம் வகுப்பு வரை படித்திருக்கிறேன். பின்னர் குடும்பத்தோடு சென்னை வந்த பிறகு நான் முதலில் தியாகராய நகரில் இருக்கக் கூடிய ஒரு தையல் கடையில் 5 ஆண்டுகள் வேலை செய்தேன். அப்போது குடும்பத்துடன் வீட்டில் தான் இருந்தேன். எனது வீடு சைதாப்பேட்டையில் தான் இப்போதும் இருக்கிறது.
நான் திருநங்கையாக மாறிய பின்னர் ஏற்பட்ட பிரச்சனையால் வீட்டிலிருந்து வெளியேறினேன். அதன் பின்னர் தியாகராய நகரில் வேலை செய்து கொண்டு இருந்தேன். திருநங்கை என்ற ஒரே காரணத்தினால் ஒரு பிரச்சனை ஏற்பட்டு அங்கிருந்தும் வெளியேறினேன். அதன் பின்னர் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் 9 மாதங்கள் வேலை செய்தேன். அங்கும் பிரச்சனை ஏற்பட்டது.

அப்போது தான் ''Born2Win'' அமைப்பை சேர்ந்தவர்களுடன் அறிமுகம் கிடைத்தது. அந்த அமைப்பைச் சேர்ந்த சுவேதாவை சந்தித்தேன். நாங்கள் அவரை அம்மா என்று தான் அழைப்போம். ஒரு நாள் நான் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் போது அம்மா என்னை அழைத்து பேசினார். மேலும், என்னைப் பற்றி விசாரித்தார். அப்போது எனக்கு நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்தார். நம் எந்த வழியில் செல்ல வேண்டும்? எந்த வழியில் செல்லக் கூடாது? என்பதையும் எனக்கு தெளிவுபடுத்தினார். எனக்கு அவர் கொடுத்த அன்பு மிகப் பெரிய தன்னம்பிக்கையை கொடுத்தது" என்று கூறினார்.
பொட்டிக் உருவானது எப்படி?
கடைகளுக்குச் சென்று கை தட்டி காசு வாங்குவது அல்லது பாலியல் என்பது தான் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தெரியும் என்பதை மாற்றி தற்போது தொழில்முனைவோராக உயர்ந்துள்ளார் ஓவியா. இது பற்றி அவரிடம் கேட்ட போது, "எனக்கு தையல் தெரியும் என்ற காரணத்தினால் இதை வைத்து ஏதாவது செய்யலாமா? என்று சுவேதா அம்மா கேட்டார். அது குறித்து ஒரு நாள் முழுவதும் நாங்கள் விவாதித்தோம். பொட்டிக் வைத்தால் வாடிக்கையளர்கள் வருவார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நாங்களே எங்களுக்குள் கேட்டுக் கொண்டோம். ஓரளவு தெளிவு பிறந்தவுடன், கடை வைத்து தருகிறோம், அதை நீயே முழுமையாக ஏற்று நடத்து என்று பொறுப்பை என்னிடம் கொடுத்தார். நான் சரி என்று ஒப்புக்கொண்டவுடன் 4 மாதத்தில் எனக்கு கடை அமைத்து கொடுத்தார். தற்போது இந்த கடையில் துணிகளை விற்பனை செய்தும், தையல் செய்தும் வருகிறேன். இது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது" என்றார்.

இந்த பொட்டிக்கில் பெண்களுக்கான அனைத்து வகை ஆடைகளை குறைந்த விலைக்கு தைத்தும், விற்பனை செய்தும் வருகிறார் ஓவியா. இதன் சிறப்பே, வாடிக்கையாளர்களை காத்திருக்க செய்யாமல் அன்றைக்கே துணிகளை தைத்து கொடுப்பது தான்.
பொட்டிக்கில் உள்ள ஆடைகளின் வகைகள்
ஓவியா மேலும் கூறுகையில், "இந்த கடையில் சேலை, சுடிதார், லெக்கின்ஸ், ஷால், மெட்டீரியல் வகைகள், அம்பர்லா டாப்ஸ், காட்டன் துணிகள், நைட்டி ஆகியவற்றை விற்பனை செய்து வருகிறோம். நமது கடையில் துணிகளை தைத்து தருவது தான் பிரபலமாக இருக்கிறது. துணிகளை எடுத்து வந்து எங்களிடம் கொடுத்தாலோ அல்லது நமது கடையில் வாங்கி தைத்து கொடுக்க சொன்னாலும் எந்த மாதிரியான வேலைப்பாடு இருந்தாலும் ஒரே நாளில் முடித்து தருவோம்.
கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஆரி ஒர்க்கும் செய்து தருவோம். முன்னர் இருந்ததை விட தற்போது வாடிக்கையாளர்கள் நிறைய பேர் வருகிறார்கள். நமது கடைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. கடையில் டிரெஸ்ஸிங் ரூம் இருக்கிறது. அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் மற்றும் கடைக்கு அடிக்கடி வரும் வாடிக்கையாளர்கள் நிறைய பேருக்கு நமது கடையை பரிந்துரைத்து செல்கிறார்கள். துணிகளின் விலை 300 ரூபாயிலிருந்து ஆரம்பமாகி ரூ.10,000 வரை இங்கு இருக்கிறது. ஒரு மாதத்தில் அனைத்து செலவும் போக ரூ.50 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது" என்றார்.
எதிர்காலத் திட்டம் குறித்து கேட்ட போது, சிறிதும் தாமதிக்காமல், "தற்போது எடுத்துத் தரும் துணிகளை மட்டுமே தைத்து கொடுக்கிறோம். இதனை முன் கூட்டியே தைத்து வைத்து ரெடிமேடாக கொடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம். ரெடிமேட்டில் ஒரு பிராண்டை உருவாக்கி அதனை விற்பனை செய்ய வேண்டும். இந்த முயற்சிக்கு வாடிக்கையாளர்கள் ஆதரவு அளித்தால் எங்களுக்கு மேலும் பெருமையாக இருக்கும். உடைகளுக்கு ஏற்ப கவரிங் நகைகள், தோடு மற்றும் வளையல்கள் ஆகியவற்றை சேர்த்து விற்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறோம். மக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் நாங்கள் மென்மேலும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வோம்" என்று தெரிவித்தார்.
அன்று ஒதுக்கித் தள்ளிய குடும்பம் - இன்று பேச விருப்பம்
குடும்பம் பற்றி கேட்ட போது, சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு பேசிய ஓவியா, "திருநங்கையாக மாறியதும் என் அம்மா, அப்பா என்னை வேண்டாம் என்று சொல்லி ஒதுக்கி விட்டார்கள். இப்போது நான் நல்ல நிலைமையில் இருப்பதை பார்த்து என்னிடம் பேச முயற்சி செய்கிறார்கள். அண்ணனும், அக்காவும் அடிக்கடி தொலைபேசி மூலம் என்னுடன் பேசி வருகின்றனர். நான் திருநங்கையாக மாறியவுடன் கை தட்டுவதற்கும், பாலியல் தொழில் செய்வதற்கும் தான் செல்வேன் என்று எங்கள் வீட்டில் தவறாக நினைத்து விட்டார்கள்.
நாங்கள் கிராமத்தில் இருந்து வந்தவர்கள். அக்கம் பக்கத்தினர் தவறாக பேசிவிடுவார்களோ என பயந்து என்னை வீட்டிலிருந்து வெளியே விட மாட்டார்கள். நான் வெளியே சென்றுவிடக் கூடாது என்பதற்காக கோயிலுக்கு அழைத்துச் சென்று அடிக்கடி மொட்டை அடித்து விடுவார்கள். அதன் பின்னர் என்னை ஒதுக்கி விட்டனர். பின்பு மீண்டும் அம்மா, அப்பா என்னை சந்தித்து எனக்கு திருமணம் செய்து வைக்க போகிறோம் என்று சுவேதா அம்மாவிடம் பேசினார்கள். ஆனால் எனக்கு போவதற்கு விருப்பம் இல்லை. தற்போது அம்மா எனக்கு வளையல், பொட்டு எல்லாம் வாங்கி தருகிறார்கள்" என்று கூறிய போது அவரது கண்களில் பாசம் மற்றும் ஏக்கம் தெரிந்தது.

பொட்டிக் வைத்தது ஏன்?
எத்தனையோ தொழில் இருக்க பொட்டிக்கை தேர்வு செய்தது ஏன் என்ற கேள்வி நம்மிடம் எழுந்தது. இது குறித்து அவரிடம் கேட்ட போது, "எனக்கு முதலில் ஓட்டல் வைக்க வேண்டும் என்று தான் ஆசை. நான் நன்றாக சமையல் செய்வேன். பிரியாணி, வருத்த மீன், குழம்பு, ரசம், நெல்லிக்காய் ரசம் போன்ற எல்லாமே சுவையாக செய்வேன். பத்தாம் வகுப்பு படித்து முடித்தவுடன் வீட்டில் ஏற்பட்ட வறுமையின் காரணமாக தையல் கடைக்கு வேலைக்கு சென்றேன்.
முதலில் ஏழாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்குச் சென்ற நான், பத்தாயிரம் ரூபாய் வாங்கும் அளவிற்கு உயர்ந்தேன். வேலை வேலை என்று அலைந்ததால் ஓட்டல் வைக்க வேண்டும் என்ற ஆசையை மறந்து விட்டேன். ஆனால், எனக்கு ஹோட்டல் வைத்து நிறைய பேருக்கு சாப்பாடு போட வேண்டும் என்பது தான் ஆசை. இல்லாதவர்களுக்கு நிறைய உதவிகள் செய்ய வேண்டும். ஆனால் தற்போது எனக்கு கை கொடுத்தது தையல் தொழில் தான். என்னை முன்னேற்றியதும் அது தான், அதனால் இதனை விடக்கூடாது. இதில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று ஆசைகளைப் பட்டியலிட்டார். அதிலும், தனக்கு என எதையும் கூறாமல், பிறரது பசியைப் போக்க வேண்டும், உதவ வேண்டும் என்றே பேசினார்.
பெண்களை காட்டிலும் ஆண்கள் பரவாயில்லை
ஓவியாவின் கடைக்கு ஆடை வாங்க வந்த வாடிக்கையாளர் தர்ஷினி பேசும் போது, "இந்த கடையில் பெண்களுக்கான அனைத்து விதமான ஆடைகளும் கிடைக்கின்றன. புதுப்புது டிசைன்கள் மற்றும் தரமான ஆடை வகைகளை வைத்திருக்கிறார்கள். நான் அடிக்கடி வந்து இங்கு துணிகள் எடுப்பேன், மேலும், இவர்களிடமே தைக்க கொடுப்பேன். சீக்கிரமே தைத்து கொடுப்பார்கள். துணியின் விலைகளும் குறைவாகவே இருக்கிறது. திருநங்கைகள் இவ்வாறு பொட்டிக் வைத்துள்ளது நன்றாக இருக்கிறது. நாங்கள் எல்லோரும் ஆதரவு அளிக்கிறோம்" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய ஓவியா, மாற்று பாலினத்தவர்கள் குறித்த பார்வையை இந்த சமூகம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். அப்போது அவர், "படிப்பாக இருந்தாலும் சரி, தொழிலாக இருந்தாலும் சரி திருநங்கைகளும், திருநம்பிகளும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டில் அம்மா, அப்பா ஒதுக்கி வைத்தாலும், அக்கம்பக்கத்தினர் தவறாக பேசினாலும், மனதை குழப்பி வேற மாதிரியான வேலைக்கு செல்ல தூண்டினாலும், அவ்வாறு சென்று விடக் கூடாது. அப்படி இருக்கக் கூடிய சூழ்நிலையை வெல்ல படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். படிக்க வேண்டும்... வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்க வேண்டும். பெரும்பாலான மூன்றாம் பாலினத்தவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு ஓடி வந்து விடுவதால் எங்கும் வேலை கிடைப்பதில்லை. அதன் காரணமாக கை தட்டுவதற்கு செல்கிறார்கள்.
மாற்றுப் பாலினத்தவர்கள் குறித்து சமூகத்தில் இருக்கக் கூடிய பார்வை என்பது முன்னர் இருந்ததை விட தற்போது ஓரளவுக்கு மாறி இருக்கிறது. ஆண்களைக் காட்டிலும் பெண்கள் தான் எங்களை ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள். அது ஏன் என்று தெரியவில்லை? எதிரே நடந்து வந்தால் கூட ஆண்கள் சாதாரணமாக நடந்து கொள்கிறார்கள். ஆனால், பெண்கள் எங்களைப் பார்த்து ஒதுங்கியே நடக்கிறார்கள். பெண்களைக் காட்டிலும் ஆண்கள் பரவாயில்லை" என்றார்.
அப்போது வாடிக்கையாளர்கள் சிலர் வர, பேச்சை முடித்துக் கொண்டு தனது வியாபாரத்தில் கவனத்தை செலுத்தத் தொடங்கினார் ஓவியா...

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்